Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்டு பாண்ட் ஸ்கீம் சிறு முதலீட்டாளர்களுக்குப் பயன் அளிக்குமா?

தங்கம் இறக்குமதியை குறைப்பதற்காக மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கத்தை அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இதன் விளைவாக பணவீக்க விகிதமும் உயர்வதே இதற்கு காரணம். 

தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கும் விதமாக கோல்டு டெபாசிட் திட்டத்தை ஏற்கெனவே அரசு அறிமுகப்படுத்தியது. அதாவது, கையில் வைத்திருக்கும் தங்கத்தை மறுசுழற்சிக்குக் கொண்டுவரும் விதமாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
என்ன திட்டம்?
முதலீட்டு நோக்கில் பிசிக்கலாக தங்கம் வாங்குபவர்கள் அதற்கு பதிலாக கோல்டு பாண்டுகளை வாங்கும் விதமான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு 2015-16 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புக்கு கோல்டு பாண்டுகளை மத்திய அரசாங்கம் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
முதல் கட்டமாக இந்தத் திட்டத்தின் மூலமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2015 செப்டம்பர் மாதத்துக்குள் 3.6 லட்சம் கோடி ரூபாய் திரட்டவும் இலக்கு வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை சில முக்கியத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.
முதலீட்டு நோக்கில் காயின் மற்றும் பாராக வாங்கப்படும் தங்கத்துக்குப் பதிலாக இந்த கோல்டு பாண்டுகளை முதலீட்டாளர்கள் வாங்கலாம். இப்படி வாங்கப்படும் பாண்டுகள்  ஒரு வருடத்துக்கு 300 டன்னாக இருக்கும் என மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது டீமேட் வடிவத்தில் இருக்கும்.
எவ்வளவு லாபம்? 
கோல்டு பாண்டின் மதிப்பு தங்கத்தின் விலையின் அடிப்படையில் இருக்கும். இந்த பாண்ட் முதிர்வு பெறும்போது அன்றைய தங்கத்தின் மதிப்புக்கு இணையானத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தேதியில் ஆர்பிஐ கூறும் ரூபாயின் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகைக்கு 2 முதல் 3 சதவிகித வட்டி இருக்கும்.
விலை நிர்ணயம்!
கோல்டு பாண்ட் முதிர்வு பெறும் தேதியில் என்சிடிஇஎக்ஸ், லண்டன் புல்லியன் மார்க்கெட்டில் கூறப்படும் விலை எடுத்துக் கொள்ளப்படும்.
எங்கு விற்பனை !
வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனம், அஞ்சல் அலுவலகம் மூலமாக விற்பனை செய்யப்படும். இந்த கோல்டு பாண்டுகள் முதிர்வு பெறும்போது வாங்கிய இடத்திலேயே கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கோல்டு பாண்ட் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பாண்டுகளை விற்பனை செய்பவர்களுக்கு கமிஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
எந்த அளவுகளில் பாண்ட்!
கோல்டு பாண்டுகள் 2,5 மற்றும் 10 கிராம் மதிப்பிலான கோல்டு பாண்டுகள் கிடைக்கும்.
ஆவணங்கள்!
கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு கேஒய்சி விதிமுறைகள் பொருந்தும். முகவரி மற்றும் புகைப்படச் சான்று, பான் கார்டு, புகைப்படம் கொடுத்து கேஒய்சி விதிமுறைகளை முடித்தபின்புதான் பாண்டுகளை வாங்க முடியும்.
கோல்டு பாண்டுகள் ஆர்பிஐ-யின் மூலமாக விற்பனை செய்யப்படும். இந்த பாண்டுகளை இந்திய குடிமக்கள் மட்டும்தான் வாங்க முடியும். ஆனால், ஒரு நபர் அதிகபட்சமாக 500 கிராம் தங்கம் வாங்க முடியும்.
முதிர்வுக் காலம்!
கோல்டு பாண்டுகளின் முதிர்வுக்காலம் குறைந்தபட்சம் 5 முதல் 7 வருடங்கள்  ஆகும். ஏனெனில், முதலீட்டாளர்கள் நடுத்தரக் காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக இந்தக் கால அளவு வைக்கப்பட்டுள்ளது.
அடமானம்!
பிசிக்கல் தங்கத்துக்குப் பதிலாக வாங்கப்படும் கோல்டு பாண்டுகளை அடமானம் வைக்க முடியும். தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறும்போது பின்பற்றப்படும் விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். தங்கத்தின் மதிப்பில் அடமான கடன் வழங்கப்படும்.
வரி!
பிசிக்கல் தங்கத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு உண்டான வரிகள் இதற்கும் பொருந்தும். நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டியிருக்கும்.
டீமேட் கணக்கு!
இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்கள் லாபம் தருகிற மாதிரி இருந்தாலும் இரண்டு பாதகமான விஷயங்கள் இருக்கவே செய்கிறது. அதில், முதலாவது, டீமேட் கணக்கு. 
இந்த கோல்டு பாண்டுகளை வாங்குவதற்கு டீமேட் கணக்கு அவசியம். 
நிர்வாகக் கட்டணம்!
இரண்டாவது விஷயம், கட்டணம். இந்த கட்டணம் டீமேட் கணக்கில் வைத்து பராமரிக்க கட்டணம் கட்ட வேண்டும். இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் இந்த முதலீட்டை ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  
 
இரா.ரூபாவதி.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ