Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக்: திடீர் விசிட்!

 வியாழக்கிழமை மதிய வேளையில் ஷேர்லக்குக்கு போன் செய்தோம். ''வாரத்துக்கு ஒருமுறைதான் உங்கள் தரிசனம் கிடைக்குமா? வார நாட்களில் ஆன்லைன் மூலம் வரலாமே!' என்கிற மாதிரி ஒரு வேண்டுகோள் வாசகர்களிடமிருந்து புறப்பட்டு வர ஆரம்பித்திருக்கிறது. வாசகர்களின் இந்த கோரிக்கையை உங்களால் நிறைவேற்ற முடியுமா?'' என்று ஷேர்லக்கிடம் கேட்டோம்.

 ''உம் வாசகர்கள் படுபுத்திசாலிகள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதே எனக்கு மகிழ்ச்சி''  என்றபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். 
 
''சரி, இன்றைக்கு என்ன செய்தி சொல்லுங்கள்!'' என்றோம். அவர் சொல்ல ஆரம்பித்தார்.
 
 5% இறங்கிய நெஸ்லே!
 

 ''நெஸ்லே நிறுவனம் தயாரிப்பான மேகியில் 'லெட்' அதிகமாக இருப்பதாக சொல்லி, அதை விற்கக்கூடாது என பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம். 
 இந்த நிலையில், மேகி தயாரிப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் (FSSAI) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று (புதன்கிழமை) நெஸ்லே பங்கின் விலை 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்தது. நெஸ்லே பங்கு வாங்கியவர்கள் இதனைக் கண்டு குஷியானார்கள். 
 
ஆனால் தனது இந்த  அறிவிப்பினால் மேகியை இனி பயன்படுத்தலாம் என்று அர்த்தமல்ல என்று பிறகு பல்டி அடித்தது. இதனால் மேகி பங்கின் விலை இன்றைக்கு மட்டும் 5 சதவிகிதத்துக்கு மேல் குறைந்திருக்கிறது. ஆக, ஏறிய விலை மீண்டும் இறங்கிவிட்டது.
என்றாலும் இன்றைக்கு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், கூடிய விரைவில் மேகி கடைகளில் விற்கப்படும் நிலை உருவாகும் என்று சொல்லி இருக்கிறார். மேகி நிறுவனமும் மத்திய அரசு நிறுவனத்தின் அறிவிப்பும் குழப்பம் ஏற்படுத்துவதாக  இருக்கிறது. எனவே, மேகி சச்சரவை கண்டுகொள்ளாமல், நீண்ட காலத்தில் இந்த பங்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மட்டுமே இதில் பணத்தைப் போடலாம்'' என்றவரிடம், ''வேறு என்ன செய்தி?'' என்று கேட்டோம்.
 
அதானிக்கு ஆப்பு!
 
 ''அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் 7 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரு நிலக்கரி சுரங்கம் ஒன்றை அமைக்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கம் அமைக்க அந்தப் பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதாலேயே அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா அரசாங்கம் அனுமதி கொடுக்காமலே இருந்தது. சமீபத்தில் இந்த சுரங்கத்துக்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறை அனுமதி தந்தது. 
 
இதனை எதிர்த்து அங்குள்ளவர்கள் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதானிக்கு அளித்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது. இதனால் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்று மட்டும் 4.85% குறைந்திருக்கிறது.''
 
தொடங்கியது இபிஎஃப்ஓ முதலீடு!
 
 ''இன்று முதல் இபிஎஃப்ஓ பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக எஸ்பிஐ நிஃப்டி இடிஎஃப் மற்றும் எஸ்பிஐ சென்செக்ஸ் இடிஎஃப் ஆகிய இரு திட்டங்கள் மூலம் 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. அதனால்தான் என்னவோ, இன்று சந்தை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. இந்த ஏற்றம் நாளையும் தொடருமா என்று பார்ப்போம்'' என்றவரிடம், மீண்டும் எப்போது சந்திப்போம் என்று கேட்டோம். ''திங்கள்கிழமை'' என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ