Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பள நாள்

                

 
முன்பெல்லாம் அப்பாவின் சம்பள நாள் வந்தாலே வீட்டிலிருக்கும் எல்லோருக்கும்  கோவில் திருவிழாவைப் போல ஒரு  கொண்டாட்ட நாளாக  அமைந்துவிடும். 
 
அப்பா  சமபளத்தை வாங்கி  கவரை   பிரிக்காமல்  முக மலர்ச்சியுடன்  அப்படியே  வீட்டுக்கு  கொண்டு வருவார். அம்மா வீட்டுக்கு வெளியே அப்பா வரும் வரை காத்திருப்பார். 
 
 அப்பா சம்பள பணத்தை கொண்டு வரும் போது அம்மா புன்னைகையுடன்  அப்பாவை வரவேற்பது மாதிரி வரவேற்று அப்படியே பக்கத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றியும் நோட்டமிட்டுவிட்டு யாரும் பார்க்காத போது நைசாக சமபள கவரை வாங்கி அப்பாவை வீட்டுக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் இருக்கும் சாமியின் படத்தின் முன் சம்பள கவரை வைப்பார்.
 
        ஆரத்தி யெல்லாம் முன்பே தயார் செய்து வைத்திருப்பார். வெளியே நின்று கொண்டிருக்கும் அப்பாவை யார் கண்ணும் படக்கூடாது  என்று ஆரத்தி எடுத்துவிட்ட பின் தான்  வீட்டுக்குள் போக அனுமதிப்பார். சாமி படத்தின் முன் வைக்கப்பட்ட  கவரை பிரிக்கும் முன்பே அம்மா அந்த மாதத்தில் என்னென்ன செலவுகள் இருக்கிறது என்று கணக்கு போட்டு வைத்திருப்பார். 
 
            விளையாட சென்றிருக்கும் குழந்தைகள் அப்பா சம்பளம் வாங்கி வந்திருப்பார், நாம் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவார் என்று ஆசையுடன் வீட்டுக்கு ஓடிவந்து அப்பாவிடம் தங்களுக்கு வேண்டியதையெல்லாம் சொல்வார்கள். 
 
       அப்பாவும் நாளைக்கு நாமெல்லாம் டவுனுக்கு போய் சினிமா பார்த்துவிட்டு உங்களுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கித் தருகிறேன் என்று சொல்வார். அன்றைக்கு வீடே மகிழ்ச்சியால் குதூகலமாக கொண்டாட்டமாக இருக்கும். அம்மாவுக்கு அப்பா கவரை பிரிக்காமல் சம்பள பணத்தை அப்படியே தருவதால் அப்பா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற உண்மை தெரியும். 
 
கொண்டாட்டமாக இருந்த சம்பள நாள் இன்றைக்கு முற்றிலும் மாறியிருக்கிறது .சம்பளத்தை கவரில் வாங்கும் கலாச்சாரமே குறைந்து விட்டது. சம்பளம் நம் வங்கி அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிடுகிறது. நம் செலவுகளுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்கிறோம். நம்முடைய உணமையான சம்பளம் எவ்வளவு என்று வீட்டுக்கும், சில நேரங்களில் நமக்கும் கூட தெரிவதில்லை. 
 
இன்றைக்கு  மற்ற நாளைப் போல சம்பள நாளும் சுலபமாக கடந்து சென்றுவிடுகிறது. முன்பைவிட இப்போது நாம் அதிகமாக  சம்பளத்தை வாங்குகிறோம், நமக்கு தேவையான பொருட்களை வாங்குகிறோம். 
 
சம்பளத்தில் மிச்சமாகும் பணத்தை சேமித்து கூட வைக்கிறோம். ஆனால் சமபள கவரை வாங்கி சாமி படத்துக்கு முன் வைத்தபின் பிரித்து செலவு செய்த போது இருந்த கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இப்போது இல்லை.
 
-த.சக்திவேல்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ