Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி தள்ளுபடி: ஆஃபரா? ஆப்பா?

ஆடி மாத தள்ளுபடியில் பொருட்களை வாங்கும் நிதி புத்திசாலிகளே, 80%, 50%, 30% போன்ற எண்கள் உங்களை மயக்குகிறதா? எந்தக் கடையில் நுழைவது என்று குழம்புகிறீர்களா? தள்ளுபடி உண்மையில் லாபகரமானதுதானா? இதற்கெல்லாம் பதிலாக, உங்களுக்காகவே பத்து விஷயங்கள் இதோ.

ஆடியில் தள்ளுபடி அறிவிக்காத கடைகளே இருக்க முடியாது. ஜவுளிக் கடை, நகைக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை மற்றும் அந்தக் கடை, இந்தக் கடை என்று வரிந்துகட்டிக்கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம், 80% வரை இலவசம், 50% கழிவு என பல வகைகளில் விற்பனையாளர்கள் உங்களைக் கவர்ந்திழுக்கும் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். 
 
இந்த ஆஃபர்கள் ஆடி மாதத்திற்காகவே உருவானவை அல்ல. சாதாரண நாட்களிலேயே, மெகா மார்ட், பிக் பசார் போன்ற பெரிய கடைகள் ஆஃபர்களைக் கொடுப்பார்கள். ஆடி மாதத்தில் பொதுவாக எந்த பண்டிகைகளோ விழாக்களோ இருக்காது. ஆனால் அடுத்து வரும் மாதங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் குவிகின்றன. இந்தப் பண்டிகைகளில் விற்பனையை அதிகரிக்க ஒரு முன்னோட்டம் தான் ஆடி தள்ளுபடி.
 
எப்படி தள்ளுபடி சாத்தியம்?
 
இவ்வளவு தள்ளுபடி எப்படி இவர்களால் கொடுக்க முடியும்? கேள்வி நியாயமானதுதான். பெரும்பாலும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை பண்டிகைகளில் இரண்டு மடங்காகும். ஆடிக்கு அடுத்து வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் படையெடுப்பதால், பொருட்களை வாங்கும் ஆசையை மக்களிடையே தூண்டி விற்பனையை அதிகரிக்கவே இந்த தள்ளுபடி.
 
அது சரி. 20%, 30% தள்ளுபடி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 50%, 60% மற்றும் 80% ஆகியவையெல்லாம் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை, பண்டிகைகளில் புதிய ஸ்டைலில், புதிய ரகங்களில் புதிய பொருட்களை குவித்து விற்பனையை மலையளவு உயர்த்த நினைப்பதுதான் அதற்கு காரணம். 
தள்ளுபடியென்றதும் தீபாவளி, பொங்கலுக்கு வாங்க வேண்டியதெல்லாம் இப்போதே வாங்கி விடலாம் என்று கிளம்பிவிடுகிறோம். ஆனால் நாம் வாங்கும் பொருட்களை தீபாவளி, பொங்கல் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்க முடியுமா என்று யோசியுங்கள். 
 
பரிசு கைக்கு வந்த உடனே பிரித்து பார்த்துவிடும் மனநிலையில்தான் பொதுவாக நாம் இருக்கிறோம். அதனால் ஆடி தள்ளுபடியில் வாங்கும் நம் திட்டமெல்லாம் வீணாகி, பண்டிகையின் போது மீண்டும் செலவுகள் நம்மை வா, வாவென்று அழைத்து விடும். அதனால் அப்போது கலங்காதீர்கள்.
 
தள்ளுபடி லாபமா? நஷ்டமா?
 
தள்ளுபடியில் பல வகைகள் இருந்தாலும், அதில் சிறந்ததை கண்டுபிடித்தால் லாபம்தான். அதற்கு ஒரே
 
ஃபார்முலாதான். தேவை = தரம் = விலை.
 
நீங்கள் வாங்கும் பொருட்களின் தரமும் உங்களின் தேவையும் விலையுடன் ஒத்துப் போகிறதா என்பதுதான் முக்கியம். அதைச் சரியாக திட்டமிட்டால் நிச்சயம் லாபம்தான்.
 
தள்ளுபடியை லாபகரமானதாக மாற்ற எளிமையான சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் அதற்கு துணிந்து பேரம் பேசும் ஆற்றல் வேண்டும். வெட்கமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. 
 
எதற்கு, எவ்வளவு தள்ளுபடி?
 
80% வரை தள்ளுபடி என்றதும் உள்ளே நுழைந்து அடித்து பிடித்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பில் கவுன்டருக்குப் போய் விடாதீர்கள். அது வெறும் 5% ஆக இருக்கும். 80% வரை தள்ளுபடி என்றால் எல்லா பொருட்களுக்கும் 80% தள்ளுபடியல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். எதோ ஒரு பொருள் 80% தள்ளுபடியாக இருக்கலாம். 
 
அதனால் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும்போதே கடைக்காரரிடம் இதற்கு என்ன தள்ளுபடி என்று கேட்டுவிட்டு பின்னர் பில் கவுன்டர் பக்கம் செல்லுங்கள். 
 
அனைத்து கடைகளுமே புதிதாக கொள்முதல் செய்த பொருட்களையும் பழைய கை இருப்பையும் ஒன்றாக வைத்துத்தான் விற்பனை செய்கிறார்கள். இதில் தரமான நல்ல பொருட்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் சோதித்துப் பார்க்க வேண்டும். துணிகளில் தையல்கள் சரியாக இருக்கிறதா? பட்டன்கள், சிப்கள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். 
 
துணிகள் போன்ற பொருட்களை மலை போல குவித்து வைத்திருப்பார்கள். அவற்றிலிருந்து உங்களுக்குப் பிடித்த சரியான துணி கிடைக்கும் வரை விடாதீர்கள். தேடுங்கள். 
 
எலக்ட்ரானிக் பொருட்களில் மிகுந்த கவனம்..!
 
ஆடி மாதத்தில் எலக்ட்ரானிக் பொருட்களைப் பெருமளவில் தள்ளிவிட முயற்சிப்பார்கள். பார்க்க எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். கண்கள் மயங்கும். ஆனால் தெளிவாக இருந்து சரியானதைத் தேர்ந்தெடுங்கள். சைனா பிராண்டுகளை தள்ளுபடி போயும் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு ஏமாறாதீர்கள். 
 
தள்ளுபடியில் கிடைக்கிறதே என்று தேவையில்லாதது, தேவைக்கு அதிகமானது என வாங்கி குவித்தாலும் உங்கள் மாத பட்ஜெட்டில் துண்டு விழலாம். 
 
மேற்சொன்ன அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்களுடைய தேவை, பொருளின் தரம் மற்றும் விலை அனைத்திலும் உங்களுக்குத் திருப்தி என்றால், நிச்சயம் தள்ளுபடி உங்களுக்கு மெகா ஆஃபராக அமையும். 

- ஜெ. சரவணன்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ