Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைதியான வேலை சூழலை உருவாக்குவது எப்படி

கல்லூரி முடிந்து 3 மாதம் ஆகிவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தவர்கள் எல்லாம் கல்லூரியில் மார்க் ஷீட் வாங்கிவிட்டு கிடைத்த வேலையில் சந்தோஷமாக சேர்ந்து சில நாட்கள் ஆகி இருக்கும் தருணம். வீட்டிலிருந்து கிளம்பும் போது இனிமே கம்பெனியே நான் தான் என்கிற ஒரு துடுக்கான சிந்தனையோடு புறப்படுவார்கள், ஆனால் நிறுவனத்திற்கு வந்த பின் தான் தெரியும் யார் என்ன செய்கிறார்கள், நம்மால் என்ன செய்ய முடியும் என்று. 

 
அப்படியே தம் கட்டி என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளவும் துடிப்போம். இந்த துடிப்பில் பலரிடம், பல முறை தேவையில்லாமல் திட்டு வாங்குவோம். சிலர் இதை டேக் இட் ஈஸியாக பார்க்கிறார்கள் என்பது ஆறுதலாக விஷயம். இன்னும் சிலர் இதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு ஒருவர் ஒரு முறை திட்டினால் அவ்வளவு தான் அவருடன் டூ விட்டுவிடுவார்கள்.  அதற்குப் பின் அவரிடம் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் இருப்பார்கள்..... இது முற்றிலும் தவறு என்று தெரிந்தும் அவருடன் பேச மாட்டார்கள். இதனால் நஷ்டம் அவருக்கு இல்லை. நமக்குத் தான். எனவே அலுவலகத்தில் எப்படி ஒரு நல்ல வேலைக்கான  சூழலை உருவாக்குவது என்பதை பார்ப்போம்.
 
1. சின்ன சிரிப்பு போதும் :
 
நாம் சிரித்தால், நம் எதிரில் வருபவரும் சிரிப்பார். நாம் எந்த அளவிற்கு ஆத்மார்த்தமாக சிரிக்கிறோமோ அந்த அளவிற்கு எதிரில் வருபவரும் ஆத்மார்த்தமாக சிரிப்பார். இந்த சிரிப்பை உதட்டில் வைத்திருக்கும் போதே, கண்ணில் நலம் தானா என்பதை போல ஒரு வாஞ்சை இருந்தால் அனைவரும் அலுவலகத்தில் நம் நண்பர் தான்.

2. வேலையை கற்றுக் கொள்ளுங்கள் :
 
நாம் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கலாம், ஆனால் நாம் எவ்வளவு விரைவாக வேலையை கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம், நம் சக அலுவலக நண்பர்களால் நேசிக்கப்படுவோம். சிரமமான வேலையாக இருந்தால் சற்றே கூடுதல் நேரம் அலுவலகத்தில் இருந்து அந்த வேலையை முழுமையாக கற்றுக் கொண்ட பின் கிளம்புங்கள்.  இந்த ஒரு செயல் " சார் அவன் ஸ்பீடா கேப்சர் பன்றான் " என்கிற வார்த்தையை உங்கள் உயர் அதிகாரியிடம் உங்கள் நண்பர்களே சொல்வார்கள்.
 
3. வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள் :
 
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டது, ஆனால் வேலை நேரம் முடியவில்லை என்றால் உங்கள் நண்பரின் வேலையை கேட்டு வாங்கி பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு தெரியாத வேலைகள், மற்றும் உங்கள் வேலையில் உள்ள கூடுதலான நுணுக்கங்கள் உங்களுக்கு தெரிய வரும். இந்த நுணுக்கங்கள் உங்கள் அடுத்த கட்ட பணி உயர்வுக்கு வழிவகுக்கும்.

4. தேங்க்ஸ் அண்ட் ஸாரி :
 
உங்கள் நண்பர் ஒரு சிறிய உதவி செய்தாலும் அதற்கு நன்றி தெரிவிக்க மறக்காதீர்கள். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்டவரிடம் ஸாரி கூற தயங்காதீர்கள். இரண்டுமே உச்ச கட்ட உணர்வுகள். அந்த உணர்வுகளை கட்டாயமாக, அந்த அந்த தருணங்களிலேயே காட்டிவிடுங்கள். உங்கள் உணர்வுகளை இப்படி வெளிப்படையாக வெளிப்படுத்துவதால் உங்கள் நண்பர்கள் உங்களை இன்னும் நன்றாக புரிந்து கொண்டு உங்களை வழிநடத்த முடியும். 
 
5. ஒரு சிறிய பாராட்டு :
 
நம்மைவிட ஒருவர் சிறப்பாக செயல்படும் போது நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் பொறாமையாகவும் கூட இருக்கலாம். ஆனால் அதை அப்படியே ஒரு பாராட்டாக வார்த்தையில் வடித்து அவரிடமே சொல்லிவிட்டால் அந்த கணமே இருவரும் நல்ல நண்பர்கள் தான். இப்படி முகத்திற்கு முன்பே வெளிப்படையாக பேசுவதால், அந்த இருவருக்கும் இடையில் ஒரு ஹெல்தியான போட்டி உருவாகும். இந்த போட்டி காலத்திற்கும் நம்மை சரியான வழியில் வளர்த்து எடுக்கும்.
 
6. ஒரு கப் டீ :
 
தினமும் அலுவலக நண்பர்களுடன் ஒரு டீ ப்ரேக்கையாவது முழுமையாக பேசுங்கள். உங்கள் கோபம், சந்தோஷம், பிரச்னை, வேலையில் உள்ள சிக்கல் என்று என்ன என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் நண்பர்களுடன் பகிருங்கள்.  உங்களை பற்றிய ஒரு தெளிவான அபிப்ராயம் அவர்களுக்கு கிடைக்கும். இதனால் " அவனுக்கு இது செட் ஆகாது, இது மாதிரியான பிரச்னைகள் எல்லாம் அவனுக்கு இருக்கு" என்று புரிந்து கொள்வார்கள். 
 
7. உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் :
 
நாம எல்லாம் என்னத்தை வேலை பாத்து, சாதிச்சு, புரொமோஷன் வாங்கி என்று அர்த பழைய சினிமா டயலாக்குகளை சொல்லி புலம்புவதை கைவிடுங்கள். அவன் திறமைக்கு அவன் செய்கிறான், என் திறமைக்கு நான் வேலை பார்க்கிறேன் என்று பாஸிட்டிவாக இருங்கள். தாழ்வு மனப்பான்மை இருந்தால் நீங்கள் நன்றாக வேலை பார்த்தாலும் உங்களுக்கே வேலை பார்த்த நிறைவு இருக்காது. தாழ்வு மனப்பான்மை நம்மை தற்கொலைக்குக் கூட தூண்டும் சக்தி வாய்ந்தது, ஜாக்கிரதை.

மு.சா.கெளதமன்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ