Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ-க்கள்!

 
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. என்று பாரதியார் சொன்னது இன்றளவும் பொய்யாகாமல் தொடர்கிறது. உலகின் முன்னணி நிறுவனங்களின் உயர் பதவிகளில் இந்தியர்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிறுவனங்கள்தான் இன்று உலகத்தின் போக்கை முடிவு செய்கின்றன. அந்த  நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புகள் இந்தியர்களின் கைகளுக்கு மாறுவது தொடர்கிறது.
அந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட், பெப்சி, இப்போது கூகுளும் இணைந்துள்ளது. இந்தியர்கள் சி.இ.ஓக்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்கள். திறமையும், அர்ப்பணிப்பான உழைப்பும் இருந்தால் வெளிநாட்டவர்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, சி.இ.ஓ பதவிக்கு உயர முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள் நம் ஊர் புரபஷனல்கள். அப்படிப்பட்ட மூன்று சாதனையாளர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
 
சுந்தர் பிச்சை: 
 
ஐஐடியிலிருந்து - கூகுள் வரை!
 
தமிழகத்தில் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான இவரது முழுப் பெயர் சுந்தர்ராஜன் பிச்சை. தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார், ஸ்டெனோகிராபர். 
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 
 
கூகுள் நிறுவனத்துக்குமுன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட கூகுள் பிரிவுகளுக்கு தலைமை வகித்து வந்தார். 2008-ல் பிச்சை தலைமையில்தான் கூகுள் குரோம் பிரவுசர் உருவாக்கப்பட்டது. மேலும், கூகுளின் பல புதிய பயன்பாடுகளையும் செயலிகளையும் உருவாக்கக் காரணமாய் இருந்துள்ளார். 
 
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை படிப்படியாக தன் வளர்ச்சியை, தனது திறமையாலும் தன்னிகரில்லா உழைப்பாலும் செம்மைப்படுத்தியதால், அவருக்கு கிடைத்த இடம்தான், கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பதவி.
 
சுந்தருக்கு  அஞ்சலி   என்ற மனைவியும்  ,ஒரு மகனும், மகளும் உள்ளனர். 
 
சத்யா நாதெல்லா: 
 
சைன் மைக்ரோ முதல் மைக்ரோசாஃப்ட் வரை!
 
உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸின் நிறுவனம் மைக்ரோசாஃப்ட். மைக்ரோசாஃப்ட்டின் கடந்த 40 வருட வரலாற்றில் இதுவரை மூன்று சி.இ.ஓக்கள் மட்டுமே பதவி வகித்துள்ளனர். அதில் மூன்றாவதாக நியமிக்கப்பட்டவர்தான் சத்யா நாதெல்லா.   
 
இந்தியரான சத்யா நாதெல்லா, 1967-ல் ஹைதராபாத்தில் பிறந்தார். மங்களூர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் இளங்கலை பட்டம் முடித்துபின்னர் கணினி தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதலில் சைன் மைக்ரோ சிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்தில் தன் வேலை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2002-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த இவர், 2011ல் மைக்ரோசாஃப்ட் கிளவுட் சேவையின் தலைமை இயக்குனரானார். 2013 ஜூன் மாதம், கிளவுட் சேவையில் மைக்ரோசாஃப்ட்டின் லாபம் 1.06 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.28 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. அது இவரது வழிநடத்தலின் கீழ்தான் சாத்தியமானது. 
 
பின்னர் பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொழில்நுட்ப ஆலோசகராக மட்டும் தொடர்ந்து இருப்பேன் என்றும் அறிவித்தபிறகு ஸ்டீவ் பால்மர் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். கடந்த வருடம் ஸ்டீவ் பால்மர் பதவி விலகியதை அடுத்து, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ வாக சத்யா நாதெல்லா தெரிவு செய்யப்பட்டார். 
 
“மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதற்கு மிகச் சரியானவர், சத்யா நாதெல்லாதான்” என பில் கேட்ஸ் கூறியிருந்தார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லா, “பல நிறுவனங்கள் உலகத்தை மாற்றவேண்டும் என விரும்புகின்றன. ஆனால், அதற்கான அரிதான திறன் சிலரிடம் மட்டுமே உள்ளது. அதில் மைக்ரோசாப்ட்டும் ஒன்று. என் திறமையையும் வளர்ச்சியையும் வளர்க்க, இதைவிட பெரிய தளம் எனக்கு எங்கும் கிடைக்காது. எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம் இது” என்று அவர் கூறினார். 
 
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி: 
 
தாம்பரத்திலிருந்து பெப்சி வரை
 
சென்னையில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த பயணமும் அசாத்தியமானது. 1955-ல் அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இந்திரா, பள்ளிப்படிப்பை ஹோலி ஏஞ்சல்ஸில் முடித்தார். அடுத்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கல்கத்தாவில் எம்.பி.ஏ படிப்பை முடித்தபின்னர், இங்கிலாந்தின் ஏல் பல்கலைக்கழகத்தில் பொது மற்றும் தனியார் நிர்வாகத்தில் மேல்படிப்பை படித்தார். அவரது கணவர் ராஜ் நூயி.
 
இந்திரா நூயியின் தொழில் வாழ்க்கை, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலிருந்து தொடங்கியது. அதில் தயாரிப்பு மேலாளராக இருந்தவர் பின்னர், சென்னையில் உள்ள பியர்ட்செல் என்ற ஆடை நிறுவனத்திலும் பணிபுரிந்தார். பின்னர் 1980-ம் ஆண்டு பட்டம் பெற்று, நூயி பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (BCG) நிறுவனத்தில் சேர்ந்தார். அடுத்து, மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவரி ஆகியவற்றிலும் நிறுவனத் திட்டங்கள் தொடர்பான பதவிகளை வகித்தார். 
 
பின்னர் 1994-ம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்தார். கோலா நிறுவனத்தை முந்தவேண்டும் என்ற நோக்கில் இருந்த பெப்சி நிறுவனத்துக்கு மிகச் சரியானவராக இருந்தார் இந்திரா. கோகோ கோலா நிறுவனத்தின் போட்டியை சமாளித்து, விற்பனையில் முன்னணியில் வந்து கோலா நிறுவனத்துக்கு பெரும் சவாலாக மாறும் அளவுக்கு பல்வேறு விதமான வியாபார உத்திகளைப் புகுத்தினார். அதன் மூலம் பெப்சியின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. 
 
இறுதியாக, 2007-ல் பெப்சிகோவின் 44 ஆண்டுகால வரலாற்றில் ஐந்தாவது முதன்மை நிர்வாக அதிகாரியாக  இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பலமே, வணிக மற்றும் விநியோக அதிகாரிகளை வழிநடத்தும் திறன், இதயப்பூர்வமான உழைப்பு. 
 
பின்னர் 2007-ல் பெப்சிகோவின் தலைவராக இருந்த ஸ்டீவன் ரேமன்ட் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு பெப்சி நிர்வாக இயக்குனர்கள் இந்திராவை தேர்ந்தெடுத்தனர். 
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இந்திரா நூயி, “இது பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. என் மீது போர்டு இயக்குநர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஸ்டீவன் வழியில் நானும் பெப்சி நிறுவனத்தை உயர்த்த பாடுபடுவேன். பெப்சி நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்றார். 
 
வால் ஸ்ட்ரீட் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகளின் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம்பிடித்தார். 2008-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த பெண்ணாக இவரை குறிப்பிட்டது. இந்த மூவரைத் தொடர்ந்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ அஜித் பங்கா, சான்டிஸ்க் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய், என உலக அரங்கில் இந்திய சி.இ.ஓ சாதனையாளர்களின் பட்டியல் நீள்கிறது. 
 
அடுத்து யார்? 
 
சரியான இலக்கு நிர்ணயமும், அதை நோக்கிய தீராத தேடலும், விடா முயற்சியும், அர்ப்பணிப்பான உழைப்பும் இருந்தால் அது நீங்களாகக்கூட இருக்கலாம். 
 
- ஜெ. சரவணன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ