Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8.சும்மா வருமா வேலை..?

        எது விதை – எது விருட்சம்? 
 
                           - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 
 
 
'என்ன சொல்லுங்க..., படிப்பு. அது சரியா இருந்தா, வேலை கிடைச்சுரும்..' 
நூற்றுக்கு நூறு சரி. 
 
வேலை தேடும் படலத்தில், கதாநாயக அந்தஸ்து, கல்வித் தகுதிக்குத்தான். 
எந்த நாட்டுக்குப் போனாலும், எந்தப் பணிக்கு முயற்சித்தாலும், விண்ணப்பம், சுய குறிப்பு, பரிந்துரை... அனைத்தையும் விஞ்சி நிற்பது, 'படிப்பு'. 
 
பலரும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். இது ஒரு 'ஃபேஷன்'ஆகக் கூட ஆகி விட்டது. 
'படிக்கிற படிப்புக்கு எங்கே வேலை கிடைக்குது..? படிக்கறது ஒண்ணு... செய்யற வேலை வேற ஒண்ணு.. இந்த லட்சணத்துல,  எது படிச்சு, என்ன மார்க் வாங்குனா என்ன..? 
அப்படியே இவனுங்க கேட்கற படிப்புல, தங்க மெடலே வாங்கிட்டா மட்டும், வேலை குடுத்துடப் போறாங்களா...?' 
நூற்றுக்கு நூறு தவறு. 
 
எந்தப் பணிக்கும் அதற்கென்று தேவையான கல்வித் தகுதி இருக்கவே செய்கிறது. 
வேலைக்கு விண்ணப்பிக்கச் சொல்லி, நாள்தோறும் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன...? 
எந்தவொரு விளம்பரத்திலாவது, எதிர்பார்க்கிற குறைந்தபட்ச கல்வித் தகுதி தரப்படாமல் இருக்கிறதா..? 
 
கடைநிலை ஊழியர் தொடங்கி, மிக உயரிய பதவி வரை, ஒவ்வொரு பணிக்கும், ஏதேனும் படித்து இருக்க வேண்டும். எங்கேயாவது, 'படிப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை' என்று சொல்லப்படுகிறதா..? ஏன் இதைக் குறிப்பிட்டுச் சொல்கிறோம்...? 
 
 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 
'வேலை' என்பது படிப்பில் இருந்துதான் முகிழ்க்கிறது; 
வேலைக்கான வாய்ப்பு, ஒருவரின் கல்வித் தகுதியில் இருந்துதான் முளைக்கிறது.  
படிப்பு - விதை; வேலை - விருட்சம். 
இந்தச் சமன்பாட்டை, யாரும் மறந்து விட வேண்டாம். 
 
இனி, சுய குறிப்புக்கு வருவோம். 
கல்வித் தகுதி: 
தன்னுடைய உயர்ந்த பட்ச கல்வித் தகுதி (maximum educational qualification) எதுவோ, அது மட்டுமே போதுமா..? 
அல்லது, பத்தாம் வகுப்பு தொடங்கி, அனைத்தையும் குறிப்பிட வேண்டுமா...? 
ஆம் எனில், எந்த வரிசையில்..? 
 
10ஆவது தொடங்கி, உயர் கல்வியா...? 
அல்லது உயர் கல்வியில் தொடங்கி, பத்தாவது வரையா...? 
சுருங்கச் சொன்னால், 
ஏறுமுகமா..? 
இறங்குமுகமா..? 
எப்படி எழுதுவது..? 
 
விண்ணப்பம், சுய குறிப்பில், அதிகபட்ச தகுதியைக் குறிப்பிட்டாலே போதும். ஆனால், 
10ஆவது, 12ஆவது... என்று முழுப் பட்டியலையும் தருகிற வழக்கம், நம் நாட்டில், பரவலாக நடைமுறையில் இருக்கிறது. இதில் தவறு இல்லை. எந்த வரிசையில் தரலாம்..? 
 
டிஎன்பிஎஸ்சி. க்ரூப் 4 தேர்வு போன்று, நாம் விண்ணப்பிக்கிற பணிக்கு, 10வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் எனில், 
10ஆவது தொடங்கி, ஏறுமுகமாக எழுதுவதுதான் சரி. இதுவே, கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கிறோம்..... 
முனைவர் பட்டம் (Ph.D), முதுகலைப் படிப்பு (Post Graduation), பட்டப் படிப்பு என்று இறங்குமுகமாக எழுதுதல் நலம். 
என்ன விதி முறை..? 
 
எதிர்பார்க்கப்படுகிற குறைந்தபட்ச கல்வித் தகுதி, நமக்கு உள்ளது என்பதை முதலில் தெரியப்படுத்தி விட வேண்டும். 
ஏனைய விவரங்கள் எல்லாம், 'அகடமிக் இன்டரஸ்ட்'க்காக மட்டுமே. 
 
சரி.. அடுத்து வருகிற ஐயம், எந்த அளவுக்கு விவரங்கள் தரலாம்...? 
பத்தாவதில் என்னென்ன பாடங்கள், ஒவ்வொன்றிலும் என்ன மதிப்பெண்கள், பயின்ற கல்வி நிறுவனத்தின் பெயர்... 
இதே போன்று +2, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம்.. என்று எல்லாவற்றுக்கும் தரலாமா...? 
 
வேண்டும் அல்லது வேண்டாம் என்று பதில் சொல்ல முடியாத கேள்வி இது. 
 
சிலர் பத்தாவதில் மாநில அளவில் சிறந்து விளங்கி இருக்கலாம். +2வில், படித்த பாடங்கள் வேறாகவும், பட்டப் படிப்பில் முற்றிலும் மாறுபட்ட பாடங்களாகவும் இருக்கலாம். வெவ்வேறு துறைகளில் தனக்கு, 
பரிச்சயமாவது உண்டு என்பதைத் தெரியப் படுத்துவது நல்லதுதானே...? 
 
ஒருவர் +2வில் 'அக்கவுண்ட்ஸ்' படித்து விட்டு, பி.ஏ.வில் ஆங்கில இலக்கியம் படித்தார் என்று கொள்வோம். 
இவருக்கு, சிறிதளவேனும் 'அக்கவுண்ட்ஸ்' தெரிந்து இருக்கிறதே..? இது முக்கியமான 'செய்தி'தானே..? 
இதைக் குறிப்பிட வேண்டுமா இல்லையா..? 
 
ஏராளமானோர், முதுகலைப் படிப்பில் முற்றிலும் புதிய படிப்பையே தேர்ந்தெடுக்கின்றனர். 'இஞ்சினியரிங்' 
முடித்து 'எம்.பி.ஏ.' படிக்கிறவர்கள்; 'பி.எஸ்.சி.க்குப் பிறகு எம்.ஏ. படிக்கிறவர்கள்.. எல்லாம் சர்வ சாதாரணம். இவ்வாறாக 
மாறுபட்ட தகுதிகள் (diversified qualifications) கொண்டவர்கள் எல்லாம், தம்முடைய உயர்ந்த பட்சத் தகுதியை மட்டுமே 
தந்தால் போதுமானதாக இருக்குமா...? 
 
ஆக, எங்கெல்லாம் அது, ஏதேனும் ஒரு 'தகவலை' தருவதாக இருக்குமோ, அங்கெல்லாம் பள்ளிக் கல்வியைப் பற்றிக் குறிப்பிடலாம். இது சரி... கல்வி நிறுவனம் பற்றி...? 
 
பள்ளி அளவில் சற்றும் அவசியம் இல்லை. ஒருவேளை நாம் படித்த கல்லூரிக்கு, பல்கலைக்கழகத்துக்கு என்று, 'வெளியிலே' சிறந்த தர மதிப்பீடு உள்ளது என்று கருதினால், விவரங்கள் தரலாம். 
 
'ஊர் பேர் தெரியாத' கல்லூரியில் (மன்னிக்கவும்) படித்தீர்களா..? குறிப்பிட வேண்டாம். 
நினைவில் கொள்ளவும். அத்தகைய கல்லூரியில் படித்ததில் தவறு ஏதும் இல்லை. 
நம்முடைய சுயகுறிப்பில் எழுத வேண்டியது இல்லை. அவ்வளவுதான். 
 
ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்கள்..? 
ஒருவேளை, 100க்கு 100 பெற்று இருந்தால், தேசிய/ மாநில அளவில்  முக்கிய இடம் பிடித்து இருந்தால் நிச்சயம் குறிப்பிடவும். 
உதாரணத்துக்கு, ஒருவர் சி.ஏ. இறுதிநிலை ('ஃபைனல்) படித்துக் கொண்டு இருக்கிறார். 
ஏற்கனவே, சி.ஏ. இடைநிலை ('இன்டர்') தேர்வில், தேசிய அளவில் முதல் பத்துக்குள் இடம் பிடித்தவர்! குறிப்பிடத்தான் வேண்டும். 
 
சுய குறிப்பில், மதிப்பெண்களைப் பொறுத்த மட்டில், 'தம்ப் ரூல்' இதுதான்: 
அனைவரும் பாராட்டுகிற தரத்தில் இருக்க வேண்டும். 
அவ்வாறு இல்லையா..?  மதிப்பெண்கள் வேண்டாம். 
 
அடுத்து, பள்ளியில் பயின்ற மொழிகள். இப்போதெல்லாம், பள்ளிக் கல்வியின் போதே பலரும், 'ஃப்ரெஞ்சு' போன்ற 
அன்னிய மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர். இது மிக நிச்சயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய தகவல்.  
ஒரு மொழியைப் பாடமாகக் கற்று, தேர்ச்சி பெற்று இருப்பதை, தவறாமல் கல்வித் தகுதியின் கீழ் கொண்டு வந்தேயாக 
வேண்டும். பின்னர், தெரிந்த மொழிகள் என்கிற கட்டத்திலும் குறிப்பிடலாம். தவறில்லை. 
 
நிறைவாக, தான் சிறந்து விளங்கிய, தான் பெற்ற பிற துறை அறிவு. ஒருவர் பி.காம் படிப்பில், 'மெர்க்கன்டைல் லா' 
பாடத்தில், மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று விளங்கினார் என்றால்..., 'எம்.ஏ. அரசியல் அறிவியல்' படிப்பில், 
சர்வதேச அரசியல் பாடத்தில், மிகுந்த பாராட்டைப் பெற்றவர் என்றால்.., தன்னுடைய கல்வித் தகுதியின் ஓர் அங்கமாகப் 
பெற்ற இவ்வகைச் சிறப்புகளை, கல்வித் தகுதி என்கிற கட்டத்துக்குள் கொண்டு வருதலே சிறப்பு. 
 
கூடுதல் கல்வித் தகுதி: 
மதிப்புக் கூட்டுப் படிப்புகள் (value added courses) பட்டயம், சான்றிதழ்ப் படிப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். 
பயிற்சி நிறுவனங்களின் பெயர்கள் சற்றும் தேவையில்லை. இவ்வகைப் படிப்புகளில் தேர்ச்சி, மதிப்பெண்கள் ஆகியன அத்தனை முக்கியம் இல்லை. 
 
இந்தப் படிப்பு, உங்களின் பணிக்கு எந்த அளவுக்குத் துணை புரியும் என்பது மட்டுமே, 'மதிப்புக் கூட்டுப் படிப்பு'க்கு மதிப்பைக் கூட்டித் தரும்.  
 
இனி, பணியில் முன் அனுபவம். 
 
(வளரும்). 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ