Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.49,100 கோடியை முதலீட்டாளர்களிடமே திருப்பி தர உத்தரவு

 நாணயம் விகடன் இதழில் கடந்த வருடம் தொடர்ந்து பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒரு நிறுவனத்தைப் பற்றிய அலசல் கட்டுரைகள் எழுதப்பட்டன. மொத்தம் 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி பணத்தைச் சுருட்டிய அந்நிறுவனம் தான் பி.ஏ.சி.எல். 


ஜெய்ப்பூரைச் சேர்ந்த பி.ஏ.சி.எல் என்ற நிறுவனம், "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ், 15 ஆண்டுகளில் நிலங்கள் வாங்கித் தருவதாக சொல்லி 5.85 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 49,100 கோடி பணத்தைத் திரட்டியது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகை இது. 


ஆனால் இந்தத் தொகையை, எந்த அதிகாரபூர்வ ஒப்புதலும் இல்லாமல் 15 ஆண்டுகள் மோசடி செய்து திரட்டியது செபி அமைப்புக்கு தெரிய வந்தது. பின்னர், இந்நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட மக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட செக்குகள் அனைத்துமே திரும்பி வந்தன. இதற்கிடையில் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, சிபிஐ அமைப்புகள் இணைந்து அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. 


செபி அமைப்பு, மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை அவர்களிடமே திருப்பி தர வேண்டும் என்று இந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து பங்குப் பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. 


அந்த மனு மீதான தீர்ப்பை இன்று வெளியிட்ட தீர்ப்பாயம், முறைகேடாக திரட்டப்பட்ட ரூ. 49,100 கோடியை முதலீட்டாளர்களிடமே திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 


மேலும் பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் அந்நிறுவனத்தின் சொத்து மீதான பங்குகளின் மதிப்பு 11,707 கோடி ரூபாய். ஆனால் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டி தொகைக்கும், இதற்கும் மூன்று மடங்கு வித்தியாசம் உள்ளதாகக் கூறியுள்ள தீர்ப்பாயம், வேறு எந்தச் சொத்துக்களும் அந்நிறுவனத்தின் பெயரில் இல்லை என்றும், மீதமுள்ள 37,393 கோடி ரூபாயை எங்கே முதலீடு செய்துள்ளது என்ற விவரங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 


இதனால் செபியின் உத்தரவை ஆதரித்து, பி.ஏ.சி.எல் நிறுவனம் முறைகேடாக திரட்டிய பணத்தை, அந்தந்த முதலீட்டாளர்களிடமே திருப்பி தர வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ