Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேமென்ட் பேங்க் - 5 விஷயங்கள்!

 பேமென்ட் பேங்க் - 5 விஷயங்கள்!

ஆர்பிஐ கடந்த வாரம் 11 பேமென்ட் பேங்க்களுக்கு கொள்கை அளவிலான அனுமதியை அளித்துள்ளது. இந்த பேமமென்ட் பேங்க் துவங்குவதற்கு 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 11 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேமென்ட் பேங்க்கள் எதற்காக துவங்கப்பட்டுள்ளன, இதனுடைய வேலை என்ன என்பதுக் குறித்துப் பார்ப்போம். 
 
1. யாருக்கு அனுமதி!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடபோன், இந்தியா போஸ்ட், டெக் மஹிந்திரா, ஆதித்யா நூவோ, பினோபேடெக், என்.எஸ்.டி.எல், சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் நிறுவனங்களுக்கும், இரண்டு தனிநபர்களுக்கும் கொள்கை அளவில் அனுமதி கிடைத்துள்ளது. 
 
2. ஏன் இந்த பேங்க்?
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் வங்கியைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் நேர இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக இந்த பேமென்ட் பேங்க் துவங்கப்பட உள்ளது. வங்கிச் சேவை கிடைக்காத இடங்களில் எல்லாம் இந்த பேமென்ட் பேங்க் மூலம் மக்கள் எளிதில் பணம் அனுப்ப முடியும். இந்த வங்கியில்  பணபரிவர்த்தனை மட்டும்தான் செய்ய முடியும்.
 
3. யாருக்கு பயன்?
 
சிறிய அளவிலான சேமிப்புக் கணக்கு துவங்குபவர்கள், முறைசாரா தொழிலாளர்கள், குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்கள், சிறிய அளவிலான பிசினஸ் செய்பவர்கள் இந்த வங்கியின் அதிக பயன் பெறுகிறவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இன்னும் வங்கிச் சேவை சரியான அளவில் சென்று அடையவில்லை என்பதால்தான் இந்த பேமென்ட் பேங்க் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி என்பது கொள்கை அளவிலானதுதான். அடுத்த 18 மாதங்களுக்குப்பிறகுதான் இந்த வங்கிகள் செயல்படத் துவங்கும்.  
 
4. என்ன சேவை?
 
பேமென்ட் பேங்க்குகள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் திரட்ட முடியும். தனிநபரிடம் இருந்து அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் திரட்ட முடியும். சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்குகளை வாடிக்கையாளர்கள் துவங்க முடியும். அவர்களுக்கு இந்த பேமென்ட் பேங்க் டெபிட் கார்டு, ஏடிஎம், இண்டர்நெட் சேவை வசதிகளை வழங்கலாம். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப முடியும். இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்ய முடியும்.
 
ஆனால், இந்த வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. அதேபோல, கிரெடிட் கார்ட் வழங்கவும் கூடாது. வங்கி அல்லாத நிதி நிறுவனம் வழங்கும் சேவைகள் எதுவும் வழங்க முடியாது. என்ஆர்ஐகள் இந்த வங்கியில் கணக்கு துவங்க முடியாது. இந்த வங்கியில் கணக்கு துவங்குவதற்கு கேஒய்சி விதிமுறை பின்பற்றப்படும். இந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு, டெபாசிட் ரிஸ்க் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். 
 
5. வங்கி துவங்குபவர்களுக்கான விதிமுறை!
 
இந்த பேமென்ட் பேங்க் ஆரம்பிக்கும் நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் மூலதனம் வைத்திருக்க வேண்டும். வங்கி நடத்திய அனுபவம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஏற்கெனவே பிபிஐ (Prepaid Payment Instruments) பிரிவில் அனுபவம் கொண்ட நிறுவனமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்கான நிதி நிலைமை, பிசினஸ் அனுபவம் ஆகியவை இருக்க வேண்டும். 
 
 
இரா.ரூபாவதி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ