Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரலாறு காணாத பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான 4 காரணங்கள்

இந்தியச் சந்தை இன்று வரலாறு காணாத அளவில் 1600 புள்ளிகளைத் தாண்டி வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளில் வர்த்தகமாகின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 490.95 புள்ளிகள் சரிந்து 7,809.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றன. 


இதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றில் ஆகப்பெரிய சரிவு. 2008இல் உலகச் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்ட போது, ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 1408 புள்ளிகள் சரிந்தது. இன்று சென்செக்ஸ் வீழ்ச்சி 1700 புள்ளிகளை நெருங்கியது. இந்தியப் பொருளாதாராம் வளர்ந்து வரும் சூழலில் இந்த வீழ்ச்சிக்கு காரணம் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்து வெளியேறியிருப்பதுதான். அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1) ரூபாய் வீழ்ச்சியும், கச்சா எண்ணெய் விலை குறைவும்: 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 65 ரூபாய்க்கு அதிகமாக சரிந்து வந்திருந்த நிலையில் 66ஐ தொடாமல் இருந்தால் நல்லது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று ரூபாயின் மதிப்பு 66.46 ஆக சரிந்திருக்கிறது. இந்தச் சரிவு மேலும் தொடரவும் வாய்ப்பிருப்பதாக அனலிஸ்டுகள் கணித்திருக்கிறார்கள். 


தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்தால், அந்நிய முதலீட்டாளர்களுக்கு லாபம் வாய்ப்பில்லை என்பதால் இப்போதே இருப்பதை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்று வருகிறார்கள்.


மறுபக்கம் கச்சா எண்ணெயின் விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான விலைக் குறைவைச் சந்தித்துள்ளது. கடந்த வாரங்களில் பேரல் ஒன்று 42.2 டாலராக வர்த்தகமான கச்சா எண்ணெய் 39.41 டாலருக்கு (ரூ. 2,649 ) வர்த்தகமாகி வருகிறது. 


2) தொடர்ந்து விழும் சீனா:


ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான சீனாவின் பொருளாதாரம் குறைந்து வருவது முதற் காரணமாகச் சொல்லப்படுகிறது. இன்று சீன சந்தை மீண்டும் சரிவை சந்தித்தது. சீனா தனது பொருளாதாரத்தையும் சந்தையையும் சரிவிலிருந்து மீட்பதற்காக சில வாரங்களுக்கு முன் தனது செலாவணியான யுவான் மதிப்பைக் குறைத்தது. ஆனால் சீனாவின் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. 


சீனா மிகப்பெரிய சந்தை என்பதால் உலக நாடுகள் அதனை எப்படி நம்பியிருக்கிறதோ, அதைப் போலவே ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள சீனாவும் உலக நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் எந்த நாடும் சீனாவின் யுவான் மதிப்பைக் குறைக்கும் முடிவைச் சார்ந்து செயல்படவில்லை. 


இதனால் சீனா பென்சன் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலிட முன்வந்த நிலையிலும் அதனால் உயர்வை சந்திக்க முடியவில்லை. ஷாங்காய் காம்போசை இன்று 9.5% சரிவை சந்தித்தது. கடந்த ஜூன் அது தொட்ட 52 மாத உயர் நிலையிலிருந்து 38% குறைந்துள்ளது. 


3) வால் ஸ்ட்ரீட்டும் கிரீஸும் :


பங்குச் சந்தை வார கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்ததும் முதலீட்டாளர்களின் பதட்டத்திற்கு காரணமாகியுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி துறை வளர்ச்சி எதிர்பாராதவிதமாக இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்ததே பங்குச் சந்தையில் சரிவை சந்தித்ததற்கான காரணம். 


கடந்த ஜூலை மாதத்தில் 53.8% ஆக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் 52.9%ஆக குறைந்துள்ளது. 


சில மாதங்களுக்கு முன் கிரீஸ் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் ஐரோப்பிய ஐக்கிய கூட்டணியிலிருந்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்தக் காரணங்களால் ஐரோப்பியச் சந்தைகள் பாதிப்படைந்தன. அதன் தாக்கம் உலகச் சந்தைகளிலும் எதிரொலித்தது. 
ஆனால் நீண்ட பேச்சு வார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னர் பொருளாதாரச் சரிவிலிருந்தும், ஐரோப்பிய கூட்டணியில் இருந்து வெளியேற இருந்த கிரீஸ் நாட்டை உலகத் தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர்களிடம் போராடி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவருமான அந்நாட்டு இடதுசாரி கட்சி பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் வெள்ளிக்கிழமை தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.


அடுத்த மாதம் தேர்தல் வரும் நிலையில் அவர் பதவி விலகியது உலக அரங்கில் பல கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிரீஸ் ஐரோப்பிய ஐக்கிய கூட்டணி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிடம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் திட்டங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.


4) வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள்: 


அந்நிய முதலீட்டாளர்களை நம்பி இந்திய சந்தை இல்லையென்றாலும், சந்தையின் ஏற்ற இறக்கத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. மேற்கண்ட நான்கு காரணங்களால் பதட்டமடைந்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தங்கள் முதலீட்டை வெளியே எடுத்து வருகிறார்கள். 


நடப்பு மாதமான ஆகஸ்ட் 21, 2015 வரை 5,781 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்து இருக்கிறார்கள். கடந்த ஜூலையில் முதலீடு செய்யப்பட்ட தொகையே ரூ. 922 கோடி தான். சீனாவின் தொடர் வீழ்ச்சியும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவதும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 


-ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ