Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்-அப்பில் ஷேர்லக்!


இன்று மதியம் வாட்ஸ்-அப்பில் ஷேர்லக் அனுப்பிய தகவல்கள் இதோ...

 


1) இறங்கி ஏறிய சந்தை...!


பங்குச் சந்தை மிகப் பெரிய அளவில் ஏற்ற, இறக்கத்துடன்  வர்த்தகமாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரையிலும் இறக்கம் கண்டது. கடந்த எட்டு வருடங்களில் நம் சந்தை இந்த அளவுக்கு இறக்கம் கண்டதில்லை. முதலீட்டாளர்களின் பணம் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் ஒரே நாளில் கரைந்து போயிருக்கிறது.


கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கு கீழ் சென்றது, சீனாவில் பொருளாதார நிலைமை சரியில்லை என்கிற வெளிக் காரணங்கள் சந்தை இறக்கத்துக்கு சொல்லப்பட்டாலும், எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வருகிற வியாழன் அன்று வருகிறது என்பதும் முக்கியமான காரணமாக சொல்லலாம்.
 மற்ற நாட்டு சந்தைகள் அடைந்த இறக்கம் நம்மைவிட மிக அதிகம். ஐஒபிவெஸ்பா 13 சதவிகிதமும், எஃப்டிஎஸ்இ 100   10.7 சதவிகிதமும் ஷாங்காய் காம்போசிட் 15 சதவிகிதமும்  கொஸ்பி 12.9 சதவிகிதமும் எம்ஐசிஇஎக்ஸ் 14.9 சதவிகிதமும் இறக்கம் கண்டிருக்கின்றன. எஸ்என்பி 500-ம், நிக்கியும் மட்டுமே நம்மைவிட சற்று அதிகமான இறக்கத்தைக் கண்டிருக்கின்றன.


2) சந்தை இறங்கியும் சளைக்காத முதலீட்டாளர்கள்!


கடந்த 23-ஆம் தேதி சென்செக்ஸ் 1624 புள்ளிகள் இறங்கி எல்லோரையும் பதைபதைக்க வைத்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மட்டும் கொஞ்சம்கூட மனம் கலங்காமல் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். சாதாரணமாக எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 300 முதல் 400 கோடி ரூபாய்தான் முதலீடாகும். ஆனால், ‘கறுப்பு திங்கள்’ என்று சொல்லப்படுகிறத கடந்த 24-ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 1,500 கோடி ரூபாய் முதலீடாகி இருக்கிறதாம். ‘இதற்கு முன்பு வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட்களின் யூனிட்களை ஆவரேஜ் செய்வதற்காகத்தான் முதலீட்டாளர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். இந்திய பங்குச் சந்தை மீது வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவிட நம் முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஒருவர்.


3) இறங்கிய வேகத்தில் ஏறிய ரூபாய்!


டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களுக்கு சரிந்துகொண்டே வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று காலை முதலே உலக சந்தைகள் அனைத்தும் கண்டபடி சரிந்தததால் ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 164 காசுகள் இறக்கம் கண்டது. இந்த அளவுக்கு சமீபத்தில் இறக்கம் கண்டதில்லை. இப்படியே விட்டால் ரூபாய் 67 மேல் இறங்கி, ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பெரும் நஷ்டத்தை விளைவித்துவிடுமோ என்று கலங்கிப் போனார்கள் பலரும். ஆனால், தக்க சமயத்தில் விளக்கம் தந்தார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். 'நம்மிடம் போதுவான அளவுக்கு அந்நிய கையிருப்பு உள்ளது. தேவைப்பட்டால் இதனைக் கொண்டு ரூபாய் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்துவோம்' என்றார். ரிசர்வ் வங்கியின்  கையிருப்பில் இப்போது 355 பில்லியன் டாலரும் 25 பில்லியன் டாலர் அளவுக்கு ஃபார்வர்டு பொசிஷனிலும் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் சேர்ந்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் கவர்னர் இப்படி சொன்னது, எல்லோர் மனதில் நம்பிக்கையை விதைத்தது. உடனே ரூபாய் மதிப்பு குறைவது நின்றது. இன்று சந்தை ஏற்றம் கண்டதன் விளைவாக இன்று மட்டும் ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ