Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகச் சந்தையின் அச்சுறுத்தலாக மாறுமா சீனா?

உலகச் சந்தை என்பது ஏற்றுமதி இறக்குமதி மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, பங்குச் சந்தை சம்பந்தப்பட்டதும் என்பதால் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் உலகச் சந்தையின் போக்கை பங்குச் சந்தையின் செயல்பாடுகள் நிர்ணயிக்கின்றன. 
 
எந்தவொரு நாடும் உலகச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நிலைமையும் உருவாகிவிட்டது. இதில் அமெரிக்கா என்ன, ஆப்பிரிக்கா என்ன. எந்த பேதமும் இல்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன் உலகச் சந்தையின் அச்சுறுத்தலாக கிரீஸ் இருந்தது. அந்த இடத்தை இப்போது சீனா பிடித்துள்ளது. கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், கடனும் எப்படி உலகச் சந்தையைத் தொடர்ந்து பாதித்தனவோ, அந்த வேலையை இப்போது மிக வேகமாகவும் வலிமையாகவும் சீனா செய்து வருகிறது. 

சீனாவின் மக்கள் தொகையின் காரணமாகவும், அதிகளவில் ஏற்றுமதி செய்து வருவதாலும் உலகின் மிக ப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதனால் பல விஷயங்களில் சீனாவை நம்பி உலக நாடுகள் உள்ளன. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தித்திருக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், சீனாவுக்கு இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்களில் போட்டி நெருக்கடியை கொடுத்து வருவதே.
 
அதுமட்டுமல்லாமல் சீன பங்குச் சந்தையிலும் சரிவு தொடர்ந்து வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் பலரும் சீனாவை நம்பி முதலீடு செய்ய தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று முந்தினம ஷாங்காய் பங்குச் சந்தையில் 8% குறைந்தது, உலகச் சந்தையிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று மீண்டும் 6% குறைந்து வர்த்தகமாகிறது. 
 
இப்படி தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சியையும், சந்தையும் சரிவைச் சந்தித்து வருவதில் அதிலிருந்து சீனா தன்னை மீட்டெடுக்க சில வாரங்களுக்கு முன் தனது செலாவணியான யுவான் மதிப்பைக் குறைத்தது. மேலும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் சில முடிவுகளை எடுத்தது. ஆனால் சீனாவின் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. 

யுவான் மதிப்பைக் குறைத்ததால் சீனாவுக்கு கணக்குப்படி வரவேண்டிய எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. மீண்டும் அதலபாதாளத்திற்குதான் சீனச் சந்தையின் போக்கு இருக்கிறது. உலகச் சந்தையை கலங்கடித்த சீனாவின் இந்த பரிதாப நிலையைப் பார்த்து மற்ற நாடுகள் உள்ளூர மகிழ்ச்சியடையும் வாய்ப்பும் துளியும் ஏற்படவில்லை. 

சீனாவின் இந்த தொடர் வீழ்ச்சி, உலகின் அனைத்து சந்தைகளிலும் பாதிப்பை உண்டாக்கியது. கடந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்தன. அமெரிக்காவில் உற்பத்தி துறை வளர்ச்சியும் எதிர்பாராதவிதமாக குறைந்தது. டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதனால் டாலரை நம்பியுள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இது மேலும் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
இந்தச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் இதனால் பதட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். நாணய மதிப்புகள் மேலும் சரிவைச் சந்தித்தால் லாபம் பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால் தங்களின் முதலீட்டை இப்போதே எடுத்துக்கொண்டு வெளியேற முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். 
என்னதான், இது நிரந்தரமல்ல, பதட்டமடைய வேண்டாம் என்று கூறினாலும் முதலீட்டாளர்களின் பதட்ட நிலை தொடர்ந்து நீடிப்பதே சந்தையின் இறக்கத்திற்கு காரணமாக உள்ளன.
 
ஜெ.சரவணன்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ