Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தைக்கு போனா ஆத்தா வையாது – நம்புங்க!

“சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசு குடு!” 16 வயதினிலே படத்துல சப்பானி அதிக தடைவ பேசி பரட்டையை எரிச்சலடைய வச்ச வசனங்க இது. இந்த வாரம் நம்ம பங்குச் சந்தையில நடந்த சரிவு எனக்கு அந்த டயலாக்கை ஞாபகப்படுத்திடுச்சுங்க.

ஆமாங்க! இந்த வார திங்கட்கிழமை சந்தை சரிஞ்சதைப் பாத்துட்டு பல சப்பானிங்க பேசின டயலாக் என்ன தெரியுமா, “சந்தையே வேணாம்பா; ஆத்தா வையும்; ஆளை விடு!” அப்படின்னு ஓடினவங்க தாங்க நிறைய பேர். உண்மையில் ஒரு விஷயம் சொல்லனுங்க. ஓடினவங்க கொஞ்ச தூரத்திலயே நின்னு சந்தையைத் திரும்பிப் பார்த்து வருத்தப்படறாங்க. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாமோன்னு நொந்துக்கறாங்க. காரணம், சந்தை மீண்டும் ஏறத் தொடங்கினதுதாங்க.


இது ஏற்கனவே பல நிபுணர்கள் சொன்னது தாங்க. பங்குச் சந்தைன்னா நீண்ட காலத்துக்கானது. இங்க குறுகிய கால லாபத்துக்காகவும் பேராசையோடவும் வந்தா ஏமாற்றம்தான் மிஞ்சும்னு. ஆனாலும், சரியர சந்தைல தில்லா நிக்குற மனப்பக்குவம் இன்னும் நம்மில் பல பேருக்கு வரலைங்க. அதனாலேயே நஷ்டத்துக்கு பயந்து குறைந்த லாபத்தோடவோ அல்லது குறைந்த நஷ்டத்தோடவோ நம்மோட பங்கை வித்துட்டு வெளியில வந்துடறோம்.


சமீபத்துல ஒரு படத்துல பாத்த காட்சி எனக்கு நினைவுக்கு வருதுங்க. அதாவது, கதாநாயகனுக்கு ‘டைம் மெஷின்’ அப்படிங்குற ஒரு விஞ்ஞான கருவி கிடைக்கும். அந்தக் கருவியைப் பயன்படுத்தி ஹீரோ தன்னோட கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் போக முடியும். இதுல என்ன சுவாரஸ்யம்னா தவறு நடந்த இடங்களுக்கு பொய் அந்த தவறை திருத்திக்க இந்த கருவியை ஒரு வாய்ப்பா பயன்படுத்திப்பாங்க. ஒரு கட்டத்துல நம்ம ஹீரோ கொஞ்சம் பேராசைப்பட்டு இந்தக் காலத்து 500 ருபாய் நோட்டுக்களை எடுத்துக்கிட்டுப் போய் 50 வருஷத்துக்கு முன்னாடி இருந்த விலையில தங்கத்தை வாங்க முயற்சித்து ஏமாந்து போய் வருவாரு.


இதைப் பார்க்கும் போது அட! இந்த வார சரிஞ்ச நம்ம பங்குச் சந்தை நம்ம எல்லோருக்கும் கிடைச்ச டைம் மெஷின்னு தோணிச்சுங்க. ஆமாம், கிட்டத்தட்ட 1600 புள்ளிகள் ஒரே நாளில் சரிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் நம்ம எல்லோரையும் பின்னோக்கி கொண்டு போயிடுச்சுங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி முதலீடு செய்யற வாய்ப்பை தவறவிட்டுட்டோமே அப்படின்னு வருத்தப்பட்டவங்க எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, அந்த சமயத்துலையும் மார்க்கெட் இன்னும் சரியும் அப்போ வாங்கிக்கலாம்னு பேராசைப் பட்டவங்க இப்ப வருத்தப்பட்டுக்கிட்டு தான் இருக்காங்க. காரணம் கிட்டத்திட்ட மார்க்கெட் பழைய நிலைமைக்கே வந்திடுச்சு. மார்க்கெட்டை சரியா கணிக்கிறேன் பேர்வழின்னு பலபேர் இப்படிதாங்க ஏமாந்து வருந்துறாங்க.


இன்னொரு புள்ளி விவரமும் சொல்றென். ஏப்ரல் 1979ல் இருந்து ஆகஸ்டு 2015 வரைக்கும் இந்தியப் பங்குச் சந்தை ஒரே நாளில் மட்டும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக 19 தடவை குறைஞ்சிருக்கு. அதே மாதிரி ஒரே நாளில் 5 சதவீதத்துக்கும் அதிகமா 40 தடவை குறைஞ்சிருக்கு. இதெல்லாத்துக்கும் உச்சமா, ஏப்ரல் 1992ல் நம்ம பங்குச் சந்தை ஒரே நாளில் 13 சதவீதம் சரிஞ்சுது. இந்தத் தருணங்கள் எல்லாமே நமக்கு கிடைத்த டைம் மெஷின்கள். நாம முதலீடு செய்ய தவறவிட்டு பிறகு வருந்தியிருப்போமே அதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள்.


ஆனா, பலபேர் சந்தையை அப்படி பாக்கருதில்லைங்க. சந்தை சரியும் போது, இவங்களும் சேர்ந்து சரிஞ்சிடுறாங்க. இப்போ கூட நணபர் ஒருவர் பேசும்போது “இப்போ மார்க்கெட் சரிஞ்சிருக்கு, இப்போ பணம்போட நான் என்ன முட்டாளா, ஏறும் போது போடலாம்!” அப்படிங்கறாரு.


ஓவ்வொரு சரிவுக்கும் காத்திருந்து, அதை நீண்ட காலத்துக்குன்னு நினைச்சு முதலீடு செஞ்சா சந்தை நம்மல நிச்சயம் கைவிடாதுங்க. அந்த நினைப்பொட “சந்தைக்கு போனா ஆத்தா நிச்சயம் வையாதுங்க!” நம்புங்க!

- மாதவன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ