Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10. சும்மா வருமா வேலை..?

 

எத்தனை எத்தனை மொழிகளடா..!

 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

'எந்த மொழியில வேணுமானாலும் பேசுங்க, எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை..'

இப்படி நம்மால் சொல்ல முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

 

வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறுகிற பயிற்சி முகாம்.

நாமும் அதில் பங்கு பெறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வெவ்வேறு மொழிகளைப் பேசுகிற

அவர்களிடையே, ஓரிருவர் மட்டும் 'உள்ளே சென்று' சரளமாகப் பேசுவதைக் கவனிக்க முடியும்.

அப்படி ஒருவரைப் பார்க்கும் போதே, நமக்குள் ஒரு மகிழ்ச்சியும் கூடவே சற்றே ஒரு குற்ற உணர்வும் வந்து

ஒட்டிக் கொள்வதையும் உணர்கிறோம்.

 

பல மொழிகளைக் கற்றுக் கொள்வதை, வாழ்க்கையில் ஒரு தவமாகவே வைத்து இருக்கிற மனிதர்களும்

இருக்கிறார்கள். யாரேனும் ஒருவர், தனக்கு ஏழு மொழிகள் தெரியும், எட்டு மொழிகள் தெரியும் என்று சொன்னால், அவரை நாம் வியந்து வியந்து பார்க்கிறோம்.

 

ஒவ்வொருவருமே, பன்மொழி வித்தகர் ஆக முடியும். 'ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை'.

இந்த உலகத்தில், வேறு எதையும் விட, மிக எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று, மொழி.

அது எப்படி அத்தனை உறுதியாகச் சொல்ல முடியும்..? என்ன ஆதாரம்...?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நாட்டின் பல பாகங்களுக்கும் சரக்கு ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளில் 'க்ளீனர்' என்று ஒருவர் இருப்பார்.

அவ்வப்போது வண்டியை சுத்தம் செய்து வைப்பதுதான் இவரது பிரதான வேலை. ('ஊருக்கு வெளியே',

இவரேதான் ஓட்டுனர் வேலையும் பார்ப்பார்!) இவரது கல்வித் தகுதி அனேகமாக 'ஒன்றும் இல்லை'.

அதிகபட்சம் பத்தாவது வரை படித்து இருப்பார். ஆனால் இவர் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே,

பல மொழிகளுக்குத் தன்னைத் 'தயார்' படுத்திக் கொள்கிறார். ஒரு சில வாரங்களில், புரிந்து கொள்கிறார்.

சில மாதங்களில், பேசுகிறார். சில ஆண்டுகளில், பல மொழிகளில் விற்பன்னர் ஆகி விடுகிறார்.

 

'விற்பன்னர்' என்று சொல்லலாமா..? கதை, கவிதை, கட்டுரை, பிரசங்கம்... எதாவது செய்தால்தான், அந்த மொழியில் விற்பன்னர் என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கும் வட்டார வழக்கு (local dialects) என்று உண்டு. அதை யாரால் எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறதோ, அவர்கள் எல்லாருமே அம்மொழியில் விற்பன்னர்கள்தாம்.

 

நம் தாய் மொழியிலே கூட, கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ்(!!) என்று பல நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம். தமிழ் பேசத் தெரிந்த பிற மொழிக் காரர்களுக்கு, இந்த வட்டார மொழிகள் சங்கடத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை அவர்களால் சரளமாகப் புரிந்து கொண்டு உரையாட முடிந்தால், அவர்கள், தமிழில் விற்பன்னர் ஆகி

விட்டனர் என்று பொருள். இத்தகைய 'மேதைமை'யை, முறையான பயிற்சி (formal training) எதுவும் இன்றி, ஒரு

'க்ளீனர்' பணியாளரால் குறுகிய காலத்திலேயே சாதித்துக் காட்ட முடிகிறதே... மொழியைக் கற்றுக் கொள்வது எளிதான காரியம்தானே..?

 

இதையே, வேறொரு உதாரணத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு 'லாயர்', ஒரு 'ஆடிட்டர்', ஒரு 'டாக்டர்', அவ்வளவு ஏன்..

ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் உதவியாளராகப் பணி புரிகிறவர், அந்தத் தொழிலைக் கற்று விற்பன்னர் ஆக முடியுமா..?

 

மொழியில் இது முடியும்.

 

எளிமைதான். ஆனாலும் ஏன் பலர், பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில்லை..? தலையாய காரணம் -

வேலை தேடும் படலத்தில், பன்மொழிப் புலமை, எந்த அளவுக்கு, பயன் தரக் கூடியது என்பதை உணரவில்லை.

புதிய மொழி, ஒரு புதிய உலகத்தையே திறந்து விடுகிறது. அத்தனை 'புதிய' வாய்ப்புகள் வந்து சேர்கின்றன. இதை உணர்ந்து கொள்ளாததால்தான், 'வேல்யூ ஆடட் கோர்ஸ்'களில் இளைஞர்களின் 'காசும் காலமும்' வீணாகிக் கொண்டு இருக்கிறது.

 

அடுத்த காரணம், பிற மொழிகளைக் கற்பதால், தாய்மொழிக்கு ஆபத்து என்கிற வறட்டுச் சிந்தனை. (தயவு செய்து அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.)

 

மூன்றாவது - கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இன்மை. மாநகரங்களில் வசிப்போருக்கு இருக்கிற வசதிகள், குக்கிராமங்களில் இருப்போருக்கு இல்லை என்பது, பல மொழிகளைக் கற்றுக் கொள்கிற விஷயத்தில் மட்டுமாவது முழுக்க முழுக்க உண்மை. நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் உடனடியாக பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள முயற்சிப்பது மிகவும் நல்லது.

 

எதற்காக இத்தனை விரிவாகப் பார்த்தோம்..? ஏராளமான விண்ணப்பங்கள் மற்றும் சுய குறிப்புகளில், 'தெரிந்த மொழிகள்' என்கிற கட்டத்தில், 'தமிழ் & ஆங்கிலம்' தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை. இந்த இரண்டும் தவிர்த்து, மூன்றாவதாக ஒரு மொழி தெரியாது என்றால், சுய குறிப்பில், இந்தக் கட்டமே வேண்டாம்.

சுய குறிப்பு, சரி. சுய குறை..?

 

சரி. இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். எந்த வரிசையில் சொல்வது..?

தாய் மொழி முதலில். அடுத்து, பள்ளியில், கல்வியில் பயின்ற மொழிகள் - அதாவது, இந்தி, ஆங்கிலம் ஆகியன.

தொடர்ந்து, நாமாகக் கற்றுக் கொண்ட மொழிகள் - தெலுகு, மலையாளம், பிரென்சு, ஜெர்மன் போன்றவை.

இந்திய மொழிகளை முதலில் சொல்லி, பிறகு அந்நிய மொழிகளைப் பட்டியல்(!) இடலாம். நமக்கு எந்த அளவுக்கு மொழியில் பரிச்சயம் ஆகி இருக்கிறதோ, அந்த அடிப்படையிலும் வரிசைப் படுத்தலாம்.

 

சிலர், ஒவ்வொரு மொழியிலும், 'எழுத, படிக்க, பேச' என்று மூன்று கட்டங்களாகப் பிரித்து, குறிப்பிடுவதையும் பார்க்க முடிகிறது. இந்த அளவுக்கு 'விஸ்தாரமாக' சுய குறிப்பில் சொல்ல வேண்டியது இல்லை. மேலும், இந்தியில் 'ப்ராதமிக்', 'மத்யமா', 'ராஷ்ட்ரபாஷா' அல்லது ஜெர்மனியில் 'லேனர்ஸ்', 'அட்வான்ஸ்ட்' போன்ற பயிற்சி நிலைகளை எல்லாம் குறிப்பிட்டு, நோகடிக்க வேண்டாம். இவ்விவரங்கள் தேவைப்பட்டால், நேர்முகத் தேர்வின் போது, அவர்களே கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஆகவே, இன்னன்ன மொழிகள் 'தெரியும்' என்று சொன்னாலே போதும்.

 

'இல்லையே.. எந்த நிலை வரை முடித்து இருக்கிறேன் என்று சொன்னால்தானே, இந்த மொழியில் எனக்குள்ள தகுதி அவர்களுக்கு தெரியும்..?' சரியான கேள்வி. ஆனால் நாம் விண்ணப்பிக்கிற பணிக்கு, 'மொழித் தகுதி', அந்த அளவுக்கு முக்கியம் ஆனது எனில், அதை நாம் எடுத்த எடுப்பிலேயே, கல்வித் தகுதிக்கு அடுத்ததாகச் சொல்லி விட வேண்டும். 'அறிந்த மொழிகள்' என்கிற தலைப்பின் கீழ், வராது.

 

நினைவில் கொள்ளவும்: மொழி அறிவு பற்றிய விவரம், முக்கியமான செய்தி (material information) வகையைச் சேர்ந்ததாக இருக்குமேயானால், அதற்குத் தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.

 

இனி வருவது, 'ஹாபி'!

 

(வளரும்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ