Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தை சரிவு! செய்தி சொன்ன ஷேர்லக்

இன்று பங்குச் சந்தை காலை முதலே நல்ல இறக்கம் கண்டதால், வர்த்தகம் முடிந்தபின் 4 மணிக்கு ஷேர்லக்கிற்கு போன் செய்தோம். ''உங்கள் போனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்'' என்றபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்.

சந்தை சறுக்கியது ஏன்?
 
''சந்தை இன்று சரிய என்ன காரணம்?'' இதுதான் நாம் கேட்ட முதல் கேள்வி.
''முக்கியமான காரணம், ஜி.டி,பி. குறைந்ததுதான். இரண்டாம் காலாண்டில் நம் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சியானது கொஞ்சம் குறைந்து 7 சதவிகிதமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. கடந்த காலாண்டில் இது 7.5 சதவிகிதமாக இருந்தது. இரண்டாம் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நிச்சயமாக 7.5 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், .5 சதவிகிதம் குறைந்ததை முதலீட்டாளர்கள் தாங்கிக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.8 சதவிகித வளர்ச்சிதான் இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இப்போது வந்திருக்கும் புள்ளிவிவரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு முக்கியமான விஷயம்தான். சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சி வேகம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். 
இது மட்டுமல்ல, அமெரிக்காவில் வட்டி விகிதம் எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படலாம் என்பதால்  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் சந்தையை விட்டு வெளியேறியபடி இருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாதத்தில் (ஆகஸ்ட் மாதம்) 17,524 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்திருக்கிறார்கள்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு நிலையற்று இருப்பதும் சர்வதேச முதலீட்டாளர்கள் நம் சந்தையை விட்டு விலகிச் செல்ல இன்னொரு காரணம். ஆக இப்படி பல காரணங்கள் இருந்தாலும், நம் நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்தவரையும் உள்ளூர் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையும் நம் சந்தை மீது மிகுந்த நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள்.
 
இப்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், சந்தை இன்னும்கூட இறங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே, கையில் உள்ள காசை மொத்தமாக ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வதே சரி'' என்று நீண்ட விளக்கம் தந்தார்.
 
உயர்ந்தது கார் விற்பனை!
 
''இன்று வெளியான தகவல்கள்படி கார் விற்பனை அதிகரித்திருக்கும் போலிருக்கிறதே!'' என்று கேட்டோம்.
 
''ஆமாம், பல கார் நிறுவனங்களின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது. மாருதியின் நிகர விற்பனை 6.4% உயர்ந்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 1.3 சதவிகிதமும் அசோக் லேலாண்ட் 39 சதவிகிதமும் ராயல் என்பீல்ட் நிறுவனம் 59 சதவிகிதமும்  உயர்ந்துள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலை குறைந்திருப்பது இந்த விற்பனைக்கு முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, நல்ல கார் நிறுவனங்களின் பங்குகளை இப்போது வாங்கலாம்'' என்று பதில் சொன்னார்.
 
புதிய அனல் மின் நிலையம்!
 
''புதிய அனல் மின் நிலையத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாரே தமிழக முதல்வர்?'' என்று வினவினோம்.
 
''ஏறக்குறைய 24,000 கோடி ரூபாய் செலவில் புதிய அனல் மின் நிலையம் ஒன்றை தமிழக அரசு தொடங்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக 3,000 ஏக்கர் நிலம் அரசினால் கண்டறிப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது தவிர, மின் விநியோகத் திறனை மேலும் வலுப்படுத்த 6.791 கோடி ரூபாய் செலவழிக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். மின் திட்டங்களுக்கான அறிவிப்புகள் எப்போதுமே வரவேற்கத்தக்கவைதான். ஆனால், இந்தத் திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நம் ஒரே கோரிக்கை'' என்றார்.
 
15 மாத இறக்கத்தில் பேங்க் இண்டெக்ஸ்!
 
''பேங்க் இண்டெக்ஸ்  சமீபத்தில் இல்லாத அளவுக்கு இறங்கி இருக்கிறதே! என்ன காரணம்?'' என்ரு கேட்டோம்.
 
''நமது ஜி.டி.பி. குறைந்தது, ஜப்பானின் பி.எம்.ஐ. குறைந்தது போன்ற காரணங்களால் பேங்க் இண்டெக்ஸ் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று பேங்க் இண்டெக்ஸ் 4.4% குறைந்து 3059 புள்ளிகளை  அடைந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 3049  புள்ளிகளை அடைந்து பிற்பாடு உயர்ந்தது. பேங்க் இண்டெக்ஸ் உச்சத்தை அடைந்ததில் இருந்து இதுவரை 31 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 
 
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அதன் உச்சபட்ச விலையிலிருந்து 63 சதவிகிதமும் பேங்க் ஆஃப் இந்தியா அதன் உச்சபட்ச விலையிலிருந்து 56 சதவிகிதமும் யுனைடெட் பேங்க அதன் உச்சபட்ச விலையிலிருந்து 55 சதவிகிதமும் யூகோ பேங்க் அதன் உச்சபட்ச விலையிலிருந்து 54 சதவிகிதமும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அதன் உச்சபட்ச விலையிலிருந்து 48 சதவிகிதமும் விலை குறைந்திருக்கிறது. வங்கிப் பங்குகளை பொறுத்தவரை, நல்ல பங்குகளில் மட்டும் தற்போது முதலீடு செய்யலாம்'' என்றவர், ''முக்கியமான ஒருவர் சந்திக்கப் போகிறேன். எனவே, பிறகு பேசுவோம்'' என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ