Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ குறித்த ட்விட்டர் கேள்வி பதில் !

இன்று (02.09.2015) நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் பகுதியில்  மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார் சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக.

 

1. நான் ஆக்ஸிஸ் ஹைபிரிட் ஃபண்ட் சீரிஸ் 24 (குரோத்) ரூ. 5 லட்சம் முதலீடு செய்துள்ளேன். இந்த முதலீடு சரியா?

  உங்களின் முதலீட்டு நோக்கம், வயது போன்றவற்றை குறிப்பிடவில்லை. ஆகவே இந்த முதலீடு சரியா, தவறா என்பதை சரியாக கணித்து கூற இயலாது. நீங்கள் முதலீடு செய்திருப்பது, குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டாகும். அதாவது கிட்டதட்ட 80 சதவிகித ஃபண்டின் தொகை கடன் சார்ந்த முதலீடுகளிலும், மீதமுள்ள தொகை பங்கு சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஃபண்டின் வருமானம், உங்கள் முதலீட்டு காலத்திற்கு, எஃப்.டியைவிட சற்று அதிகமாக இருக்கும்.
 
2. நான் 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஒரு நல்ல ஃபண்டை ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்டிலிருந்து சொல்லவும்.

  நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புவதால், மேலும் ஹெச்டிஎஃப்சி ஃபண்டிலேயே முதல்லீடு செய்ய விரும்புவதால் கீழ்கண்ட ஃபன்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் - ரூ. 3000
ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்ட் - ரூ. 3000

3. 60 வயதை கடந்தவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் ஃபோலியோ எவ்வாறு இருக்க வேண்டும்? சிறிது ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை..

   நீங்கள் மியூச்சுவல் ஃபன்ட் போர்ட்ஃபோலியோவையே நம்பி வாழ்க்கை நடத்துபவர் என்றால் அதிகமாக கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு இருப்பது நல்லது. சிறிது நீங்கள் ரிஸ்க் இருக்கலாம் என்று கூறி இருக்கிறீர்கள். அந்த வகையில் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷனில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
 
4. என் வயது 47. வயது அதிகமாகும்போது போர்ட்ஃபோலியோவில் ரிஸ்கை குறைக்க விரும்புகிறேன். ரிஸ்க் குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்?

  பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு சிறிது சிறிதாக வயதிற்கு ஏற்றாற்போல மாறிக் கொள்வது நல்லது. இது உங்களின் ரிஸ்கை குறைக்கும். உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் அதாவது தினசரி தேவைக்கு அதிகமாக இருந்தால், அதை நீங்கள் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் டிவிடெண்ட் பே அவுட் ஆப்ஷனில் வைத்துக் கொள்வதில் தவறில்லை.


5. என் வயது 32. மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் அதிகம் ஈக்விட்டி ஃபண்டுகளையே வைத்திருக்கிறேன். இது சரியா? எப்படி மாற்றம் செய்ய வேண்டும்?

 உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ, உங்களின் வயது மற்றும் தேவையை பொறுத்து அமைந்திருப்பது நல்லது. தற்போது நீங்கள் இளம் வயதினர் என்பதால் அதிகமாக பங்கு சார்ந்த திட்டங்களில் வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை. உங்களின் தேவையை பொறுத்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு ஏற்றாற்போல் உங்கள் போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்வது நல்லது. நீண்ட கால தேவைகளுக்குக்கான முதலீட்டை ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.

6. ஒரு ஐடியல் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ என்னென்ன அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்?



அ.உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ, உங்களின் வயது மற்றும் தேவையை பொறுத்து அமைந்திருப்பது நல்லது.
ஆ. உங்களின் தேவையை பொறுத்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு ஏற்றாற்போல் உங்கள் போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்வது நல்லது.
இ. நீண்ட கால தேவைகளுக்குக்கான முதலீட்டை ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.
ஈ. நடுத்தர கால தேவைகளுக்கு பேலன்ஸ்டு, எம்.ஐ.பி மற்றும் க்ரெடிடி ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.
உ. குறுகிய கால தேவைகளுக்கு லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்
ஊ. தொடர்ச்சியாக நல்ல வருமானம் தந்திருக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

7. என் போர்ட்ஃபோலியோவில் கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் 95 சதவிகிதம் உள்ளன. தங்க முதலீட்டை மட்டுமே நான் அதிகம் நம்புவதே இதற்கு காரணம். என் முதலீட்டு முறை சரியா?

முதலீட்டில் சரி தவறு என்று எதுவும் இல்லை. உங்கள் நம்பிக்கை எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக தங்கம் ஒரு வளர்ச்சி தரக்கூடிய சொத்து அல்ல. மேலும் நீங்கள் தங்கம் வைத்திருப்பதால் சமுதாயத்திற்கும் ஒரு பெரிய பயன் இல்லை. ஆகவே உங்களின் தங்க முதலீட்டை குறைத்து பங்கு மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

8. என் வயது 46. நான் கடந்த 4 ஆண்டுகளாக என் சேமிப்புகளை கீழ் காணும் விகிதத்தில் சேமித்து வருகிறேன். தங்கம் - 30%, மியூச்சுவல் ஃபண்ட் - 42%, ஃபிக்ஸட் டெபாசிட் - 28%. இது இல்லாமல் ஒரு சொந்த வீடு இருக்கிறது. இந்த முதலீடுகள் சரியா?

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் என்று கூறுவது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் என்று எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தங்கத்தில் உங்களது முதலீட்டை குறைத்து, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் / எஃப்.டிக்களில் உங்களின் முதலீட்டை அதிகரித்துக் கொள்வது நல்லது. தங்கத்தில் 5 - 10 சதவிகிதம் இருந்தால் போதுமானது.

9. என் வயது 28. என் மாத சம்பளம் ரூ. 35,000. கடந்த 3 ஆண்டுகளாக மாதா மாதம் முதலீடாக 7,000 ரூபாயை என்.எஸ்.இ பீஸ் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தவிர வேறு எந்த முதலீடுகளும் இல்லை. இது சரி தானா? இல்லை என்றால் இதே தொகைக்கு ஒரு போர்ட்ஃபோலியோவை அமைத்து கொடுக்கவும்
.
உங்களுக்கு குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பணம் தேவை இல்லாதபட்சத்தில் நீங்கள் நிஃப்டி பீஸ் ஃபண்டிலேயே முதலீடு செய்து வரலாம். தவறில்லை. பணம் தேவைப்படும் என்று நினைத்தால் ரூபாய் 3,500 நிஃப்டி பீஸ் ஃபண்டிலும், மீத தொகையை கடன் சார்ந்த திட்டங்களில் (Religare Invesco Credit Opportunities fund) முதலீடு செய்து கொள்ளலாம்.

10.என் வயது 64, மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறென். என் பென்ஷன் தொகையில் 5,200 ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறேன். இந்த தொகையில் 75% எஃப்.டி மற்றும் கடன் சார்ந்த திட்டங்களிலும், 25 சதவிகிதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய இருக்கிறேன். இது சரியா?

இந்த தொகை உங்களுக்கு தேவை இல்லாதபட்சத்தில் கடன் சார்ந்த திட்டங்களில் 50 சதவிகித தொகையையும், மீத தொகையை ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய்யலாம். ஈக்விட்டி மற்ரும் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷனில் முதலீடு செய்யலாம்.
உங்களுக்கு குறுகிய காலத்தில் பணம் தேவைப்படும் என்றால் நீங்கள் கூறிய படி முதலீடு செய்து கொள்ளுங்கள்.

 11. என் வயது 40. சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். தொழிலில் சில மாதங்களில் மட்டும்தான் அதிக வருமானம் வரும். அந்த சேமிப்பை வைத்து தான் வருமானம் இல்லாத காலங்களில் கடையை நடத்த வேண்டும். வருடத்திற்கு தோராயமாக 25 லட்சம் ரூபாய் வரும். கடையின் செலவுகள் மற்றும் வீட்டு செலவுகள் போக ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதற்கு ஒரு நல்ல போர்ட்ஃபோலியோ செய்து தரவும். தற்போதைக்கு மொத்த தொகையையும் எஃப்.டியில் தான் வைத்திருக்கிறேன்.


 எளிமையாக உங்களது போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டும் என்றால் அந்த 3 லட்சம் ரூபாயை கீழ்கண்டவாறு பிரித்து முதலீடு செய்யுங்கள் :
அ. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் - 50%
ஆ. கடன் சார்ந்த முதலீடுகள் - 50%
இந்த தொகையை 12 ஆக பிரித்து உங்களால் மாதாமாதம் சேமிக்க முடியும் என்றால் மிகவும் உத்தமம். அது முதலீட்டு ஒழுக்கத்தையும் கொண்டு வரும்.
கீழ்கண்டவாறு உங்கள் போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்ளலாம்
அ. மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - 25%
ஆ. ஐசிஐசிஐ புரூ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் - 25%
இ. ப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட் - 25%
ஈ. ரெலிகேர் இன்வெஸ்கோ க்ரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - 25%
25% என்பது மாதத்திற்கு ரூபாய் 6,250 அல்லது வருடத்திற்கு ரூபாய் 75,000 ஆகும்.

12. நான் கடந்த 6 வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டில் ஈக்விட்டி, கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இது வரை வேறு எதிலும் முதலீடு செய்யவில்லை. இது சரியா?

இதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. உங்களைப் பற்றியும், உங்களின் தேவைகளைப் பற்றியும் எதையும் குறிப்பிடவில்லை. இந்த முதலீடு உங்களது நீண்ட கால தேவைகளுக்கு என்றால், அதிலிருந்து பாதியை பிரித்து நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். நீங்கள் ரிஸ்க்கே எடுக்க விரும்பவில்லை என்றால், மேலும் கடன் சார்ந்த் திட்டங்களில் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு போதும் என்றால் கடன் சார்ந்த திட்டங்களிலேயே தொடருங்கள்.

13. என் வயது 58. என் மகனின் வயது 24. என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து மாதம் 25,000 ரூபாயை லிக்விட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் முதலீடு செய்து வருகிறோம். என் மகனுக்கு இன்னும் 5 வருடங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. அந்தச் செலவுகளை சமாளிக்க மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை அமைப்பது எப்படி?

 உங்களது மகனின் திருமணச் செலவுகள் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுங்கள். அதற்கு வேண்டிய தொகையை எம்.ஐ.பி அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் மாதாமாதம் முதலீடு செய்து கொள்ளலாம். நீண்ட கால தேவைகளுக்கு உள்ள தொகையை டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தேவைப்படும் தொகையை லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.

 

14. எனக்கு கடந்த வருடம் திருமணமானது. நான் தற்போது மாதம் ரூ. 10,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு ஒரு நல்ல போர்ட்ஃபோலியோ அமைத்துக் கொடுங்கள். அதிக ரிஸ்க் எடுக்கத் தயார்?

உங்களின் வயது சுமார் 30 என்றும், உங்களின் தேவைகள் எட்டு வருடங்களுக்குப் பிறகு தான் என்றும் எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் கீழ்கண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு ஃபண்டுகளும் ஹைரிஸ்க் ஹை-ரிவார்ட் வகையை சேர்ந்தவைகள்.

1. மிரே அஸெட் எமர்ஜிங் புளூ சிப் ஃபண்ட் - மாதம் ரூ. 5000
2. ப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் - மாதம் ரூ. 5000

15. என் வயது 18. கல்லூரி மாணவரான நான் பகுதி நேர வேலை மூலம் மாதம் ரூ. 8,000 சம்பாதிக்கிறேன். இதில் மாதம் ரூ. 5,000ம் -ஐ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறன். நான் இடையில் சில மாதம் விட்டு விட்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா?

இந்த வயதிலேயே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் கேட்டபடி தாராளமாக முதலீடு செய்ய முடியும். பெரும்பாலான ஃபண்டுகளில் முதன்முறையாக மொத்தமாக முதலீடு செய்யும் போது குறைந்தபட்ச முதலீடு தொகையாக ரூ. 5,000 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதற்கு பிறகு உங்களுக்கு பணம் கிடைக்கும் போது எல்லாம் அதே ஃபண்டில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 கூட  முதலீடு செய்து கொள்ளலாம்.

16. என் வயது 49. அரசு ஊழியர். மாதம் ரூ. 20,000 சேமிக்க முடியும்.  சொந்த வீடு இருக்கிறது. அதைத் தவிர சொத்து என்று ஒன்றும் இல்லை. குழந்தைகளுக்கு திருமணமாகிவிட்டது. கடனும் இல்லை. செய்ய வேண்டிய கடமைகளும் இல்லை. என் 58ஆவது வயதிலிருந்து மாதம் ரூ. 20,000 வருவது போல ஏதாவது போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொடுங்கள்.


கீழ்கண்டவாறு உங்கள் முதலீட்டை அமைத்துக் கொள்ளுங்கள்
மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - மாதம் ரூ. 7,500
ப்ராங்க்ளின் இந்தியா ப்ளூசிப் ஃபண்ட் - மாதம் ரூ. 7,500
பிர்லா சன் லைஃப் எம்ஐபி II வெல்த் 25 ஃபண்ட் - மாதம் ரூ.5,000
9 வருட முடிவில் மேற்கண்ட ஃபண்டுகளில் இருந்து மிகக் குறைந்த வருமானமாக ஆண்டிற்கு 9 சதவிகிதம் கிடைக்கும் என்று எடுத்துக் கொண்டாலும், உங்களுக்குத் தேவையான மாதம் ரூ20,000 எளிதில் கிடைத்துவிடும். உங்களது ஓய்வு கால தொடக்கத்தில் மேற்கூறிய ஃபண்டுகளில் இருந்து வரும் முதிர்வுத் தொகையை எடுத்து, நிரந்தர வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளில் / திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.

17. என் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என் சம்பளமே என் குடும்ப தேவைகளுக்கு சரியாக இருக்கிறது. என் கணவரின் பென்ஷன் தொகையாக மாதம் ரூ. 12,000 வருகிறது. இதை எதில் முதலீடு செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் இதுவரை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததில்லை. எனக்கு எதில் எல்லாம் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று ஒரு போர்ட்ஃபோலியோ அமைத்து கொடுங்கள்?

உங்களின் வயதை குறிப்பிடவில்லை. எனினும் கீழ்கண்டவாறு உங்கள் போர்ட்ஃபோலியோவை கன்சர்வேட்டிவ்வாக அமைத்துக் கொள்ளலாம்.
1. பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்ட் - மாதம் ரூ. 4,000
2. யூடிஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் - மாதம் ரூ. 4,000
3. பிர்லா சன் லைஃப் எம்ஐபி II வெல்த் 25 ஃபண்ட் - மாதம் ரூ. 4,000

 

18. சிறந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ. 3,000 போட 23 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?

சுமாராக ஆண்டு வருமானம் 12 சதவிகிதம் கிடைக்கும் என்று எடுத்துக் கொன்டால் 23 வருட முடிவில் உங்களின்  மொத்த முதலீடு  37.66 லட்சம் ரூபாயாக பெருகி  இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close