Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யுங்கள்: மோடி

பிரதமர் மோடி இன்று (08.09.15) வங்கி மற்றும் நிறுவனத் தலைவர்களைச் சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யுமாறு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதே சமயம், வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டுமென்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மசோதாக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வங்கி மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.


இன்று காலை இந்திய பிரதமர் மோடி, நிறுவனங்கள் மற்றும் முக்கிய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து நாட்டின் பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடினார்.


இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து சிஐஐ தலைவர் சுமித் மஜூம்தர் கூறுகையில் “பிரதமர் ரிஸ்க் எடுத்து முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழிற்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தொழிற்துறைக்கு முக்கிய பங்கு உண்டு,” என்றார்.


இந்தக் கூட்டத்தில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல் மற்றும் ஐடிசி தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் உட்பட பல நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் இருந்தனர்.


பிரதமர் மோடியின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நிறுவன தலைவர்களும் முதலீட்டாளர்களும், முதலீட்டை அதிகரிக்கவும் தொழிலை வளர்க்கவும் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள எஃப்ஐசிசிஐ தலைவர் ஜோத்ஸ்னா சூரி கூறுகையில் “பிரதமர் மோடி, ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய இதுவே சரியான வாய்ப்பு என்று கூறியுள்ளார். மூலதனத்தின் மதிப்பு மிகவும் அதிகம் ஆனால் எத்தனை பேர் துணிந்து ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வார்கள் என்பது சந்தேகம்தான். எங்களில் பெரும்பாலானோர் வட்டி விகித பிரச்னையை முன்வைத்திருக்கிறோம்" என்றார்.


மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கணக்குப்படி, இந்தியா உலக முதலீட்டாளர்களின் சந்தையாக இருக்கும் என்றும், பிரதமர் அதிகளவில் அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP