Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுமைக்கு கிடைத்த கெளரவம்!

சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருது 2015

து புதுமைகள் படைக்கும் காலம். புத்தாக்கத்தின் (Innovation) மூலம் இன்று உலகம் முழுக்க நிறைய புதுமைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

2,000 டாலர் மதிப்புக்கொண்ட ஒரு லேப்டாப்பை 200 டாலருக்கு தரமுடியுமா, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேன்சர் நோய்க்கான மருந்தை சில நூறு ரூபாயில் தரமுடியுமா, டீசலில் ஓடும் பஸ்ஸை சூரிய ஒளியிலிருந்து தயாராகும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஓட்ட முடியுமா என உலகம் முழுக்க இன்று பல புதுமை முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த புதுமை படைக்கும் முயற்சிகளை ஊக்குவித்து, ஊரறியப் பாராட்டும் பணியை கடந்த நான்கு ஆண்டு செய்து வருகின்றது  சென்னையைச் சேர்ந்த பிரபல கவின்கேர் நிறுவனம்.

2015-ம் ஆண்டில் புதுமை படைத்தவர்களுக்கான சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகளை அளிக்கும் நிகழ்ச்சியை கடந்த வாரத்தில் கவின்கேர் நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனுடன் மிகப் பிரமாண்டமாக நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், ‘‘என் தந்தையார் சின்னி கிருஷ்ணன் புதுமைகளை படைப்பதில் நிறைய ஆர்வத்துடன் செயல்பட்டார். பணக்காரர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை சாதாரண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது இந்த சிந்தனையே ‘சாஷே’ என்கிற புதுமையைக் கண்டுபிடிக்க அவரைத் தூண்டியது. ஷாம்புக் காக வந்த ‘சாஷே’ தொழில்நுட்பம் இன்றைக்கு பல பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைக்கு நம் நாட்டில் பல புதுமை முயற்சிகள் நடந்து வருகின்றன. குறைந்த விலையில் பொருட்களை தயாரித்துத் தரமுடியுமா என பலரும் பல சோதனைகளை செய்து வருகின்றனர். விலை குறைவு என்பதால் தரத்தில் குறைந்த தில்லை. இந்த புதுமையான முயற்சிகளை ஊக்குவிப்ப தற்காகவே இந்த விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அறிமுக உரை ஆற்றினார் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் தலைவரும், ஸ்ரீராம் இபிசி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான டி.சிவராமன்.

“புதுமைகளைப் படைப்பதில் நாம் மிகவும் பின்தங்கிவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் புதுமை படைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த முயற்சிகளை வெளிக்கொண்டு வரும் கவின்கேர் நிறுவனமே இதற்கு சிறந்த உதாரணம். இந்த விருது பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருப்பவர் களை பார்த்து நான் ஆச்சரியப் பட்டேன்’’ என்றார் அவர்.

அடுத்து பேசினார் பெங்களூருவில் உள்ள  ஃப்ரிக்சன்லஸ் வென்ச்சர் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனர்களில் ஒருவருமான ரவி குருராஜ். உலகம் முழுக்க நடக்கும் இன்னோவேஷன் முயற்சிகள் பற்றி அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘கற்பனையான ஒரு விஷயம் நிஜத்தில் நடப்பதற்கு முன்பு பல காலமானது. இப்போது கற்பனையான விஷயங்கள் உடனே நிஜமாகி விடுகிறது. இந்த இரண்டுக்குமான இடைவெளி வெகுவேகமாக குறைந்து வருகிறது’’ என்றவர், ‘‘நம் நாட்டில் அடுத்த 36 மாதங்களில் ஏறக்குறைய 25 கோடி பேரிடம் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கப்போகிறது. செல்போன் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கப் போகிறது’’ என்றார்.

உலகம் முழுக்க இன்றைக்கு நடக்கும் இன்னோவேஷன் முயற்சிகளில் சிலவற்றை அவர் எடுத்துச் சொன்னார்.

‘‘கொரியாவில் கார் விபத்துகளைத் தடுக்க ஒரு எளிய வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். பெரிய லாரிகளுக்குப் பின்னால் வரும் கார்கள் லாரிக்கு முன்னே செல்லும் வாகனங்களைப் பற்றி தெரியாமல் ஓவர்டேக் செய்து விபத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனைத் தடுக்க லாரிகளின் பின்னால் ஒரு டிவி திரை இருக்கிறது.

லாரியின் முன்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் கேமரா மூலம் லாரிக்கு எதிரே வரும்  வாகனத்தை லாரியின் பின்னால் இருக்கும் திரையில் பார்க்க முடியும். இதன் மூலம் விபத்துகள் அதிகமாக தடுக்கப்பட்டுள்ளது’’ என்றவர், புதுமை படைப்பதில் நம்மவர் எந்த அளவுக்கு புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னார்.

‘‘என் ஆப்பிள் போன் சமீபத்தில் ரிப்பேர் ஆனது. அதை சரிசெய்ய ஆப்பிள் ஸ்டோருடன் தொடர்பு கொண்டேன். உடனடியாக அவர்களால் உதவ முடியவில்லை. பின்னர், ஆப்பிள் போனை சரிசெய்து தரும் ஒருவரை இன்டர்நெட்டில் பார்த்து அவரை தொடர்பு கொண்டேன். போனில் பழுதாகி இருந்த ஒரு முக்கியமான உதிரிப்பாகத்தை மாற்றியதன் மூலம் 20 நிமிடங்களில் அவர் அந்த போனை சரிசெய்து தந்தார்.

ஆப்பிள் ஸ்டோர் செய்ய முடியாதது எப்படி உங்களுக்கு சாத்தியம் என்று கேட்டேன். ‘‘புதிய ஆப்பிள் போனை வாங்கி, அதை முழுவதுமாக கழற்றி உதிரிபாகங்களை புதியதாக வைத்திருப்போம். வாடிக்கை யாளர்களுக்குத் தேவையான உதிரிப்பாகத்தை மாற்றித் தருவோம்’’ என்றார்.

ஹரீஸ் அகர்வால் என்னும் அந்த இளைஞனின்  புதுமையான முயற்சியைக் கண்டு அதிசயித்துப் போனேன்’’ என்றார். இன்னோவேஷன் பற்றி ரவி குருராஜ் பேசியதை பார்வை யாளர்கள் ரசித்துக் கேட்டனர்.   
   
இதன்பிறகு இந்த ஆண்டுக்கான சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும்போது, இதயத்தை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் உயிர் பிழைக்க வைக்கும் கருவியைக் கண்டுபிடித்த சென்னை ஐஐடி பேராசிரியர் எம்.மணிவண்ணனுக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை எரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த குளோ லைஃப்கேர் எக்யூப்மென்ட்ஸ், வி.ராமகிருஷ்ணனுக்கும், நெசவுத் தொழில்நுட்பத்தில் புதுமை படைத்த பி.ஏ.சேகருக்கும் சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருது வழங்கப்பட்டது.

இந்த விருது பெற மொத்தம் 106 பேர் விண்ணப்பித்திருந்தனர். மூன்று ரவுண்ட் ஆய்வுக்குப்  பிறகு மூன்று பேர் மட்டுமே இந்த  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

புதுமை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவர் எம்.எம்.முருகப்பன். ‘‘இந்த விருது பெற்றவர்களைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் இன்னும் பல புதுமைகளைப் படைக்க வேண்டும். இவர்களைக் கண்டுபிடித்து ஊரறியச் செய்ததற்கு கவின்கேர் நிறுவனத்துக்கு என் பாராட்டுகள்’’ என்றார்.

நீங்கள் செய்யும் தொழிலில் புதுமை படைப்பவரா... அடுத்த வருடம் உங்களுக்கும் விருது தர காத்திருக்கிறது கவின்கேர் நிறுவனம். விருது வாங்க நீங்கள் தயாரா..?

செ.கார்த்திகேயன்

படங்கள்: நிவேதிதன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ