Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டேர்ம் இன்ஷுரன்ஸ் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

இன்று ( 16.09.2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்த  சந்தேகங்களுக்கு பதிலளித்தார் வி.கிருஷ்ணதாசன் , நிதி ஆலோசகர்


டேர்ம் இன்ஷூரன்ஸ்  குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

 


1.பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்க முடியும்? அதிக ஆண்டுகளுக்கு கவரேஜ் வழங்கும் நிறுவனங்களைக் குறிப்பிடுங்கள்.?

"டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் 30 வருடங்களுக்குக் கவரேஜ் வழங்குகின்றன. இதில், பாலிசிதாரர் அதிகபட்சமாக 70 வயது வரை கவரேஜ் பெற முடியும். ஐசிஐசிஐ புரூடென்ஷியல், எல்ஐசி, கோட்டக், ஏகன் ரெலிகர் உள்ளிட்ட பல  நிறுவனங்கள் 75 வயது வரை கவரேஜ் வழங்குகின்றன."

 


2. டேர்ம் இன்ஷூரன்ஸை குறுகிய காலத்திற்கு எடுப்பது சரியா. அதாவது 5 -7 வருடங்களுக்கு எடுப்பது சரியா? 
 
"டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏதாவது அசாம்பவிதம் நிகழும் போது, அவரின் வருமானத்தை ஈடு செய்வதற்காகத்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த பாலிசியை பாலிசிதாரரின் 60 வயது வரை கவரேஜ் கிடைக்கும் வகையில் எடுத்துக் கொள்வது நல்லது.\
 30 வயதுள்ள ஒருவர் 5,7 வருடங்களுக்கு பாலிசி எடுப்பது மிகவும் குறுகிய காலமாக இருக்கும்.
 

3. பொதுவாக குறைந்தபட்சம் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்?

ஒருவர் தன் மாத சம்பளத்தை போல் 150 மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸில் கவரேஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்ற கேள்விக்கு பதிலாக இந்த உதாரணத்தை பாருங்கள்.
ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் தன் சம்பளத்தை போல் 150 மடங்கு என்று கணக்கிட்டு 15 லட்சத்திற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், அவரின் மரணத்திற்கு பின்னும், அவரின் குடும்பத்திற்கு  மாதாமாதம் 10,000 ரூபாய் கிடைக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த 15 லட்ச ரூபாயை 8 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 10,000 ரூபாய் வருமானமாக கிடைக்கும். (15,00,000*8/100=1,20,000. 1,20,000த்தை 12 மாதங்களுக்கு பிரித்தால் மாதம் 10,000 ரூபாய் கிடைக்கும்).

4. நான் இந்தியாவில் உள்ள  ஒரு தனியார் வணிக கப்பலில் வேலை செய்கிறேன்.  இன்றைய தேதிக்கு என் குடும்பத்திற்கு  மாதம் 30,000 ரூபாய் செலவாகிறது. என்  வயது 38, வருமானம் மாதம் 65,000 ரூபாய். நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

மேற்கூறியது போல உங்கள் வருமானத்தை போல் 150 மடங்கு கணக்கிட்டால் 65,000*150 என்றால் 97,50,000 ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

5. என் வயது 35. நான் ஒரு தனியார்  வங்கியில்  மேலாளராக இருக்கிறேன். என் மாத சம்பளம் 45,000. நான் தற்போது 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறேன். இது சரியா?

உங்கள் மாத வருமானத்தின் படி இன்னும் 20 லட்சத்திற்கு கூடுதலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது நல்லது. அதாவது மொத்தமாக 70 லட்சத்திற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருப்பது நல்லது. அதே நேரத்தில் 5 வருடத்திற்கு ஒரு முறை உங்கள் மாத வருமானத்தை போல் 150 மடங்கிற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.


6. டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்?

அ. இன்ஷூரன்ஸ் நிறுவனம் நீண்ட காலம் செயல்பட்டு வருவதாக இருக்க வேண்டும்.
ஆ. அதிக க்ளெய்ம் செட்டில்மென்ட் வழங்கிய நிறுவனமாக இருக்க வேண்டும்.
இ. கூடுதல் கிளைகள் உள்ள நிறுவனமாக இருக்க வேண்டும்.
மேற்கூறியவைகள் இருந்தாலே ஒரு நல்ல டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க போதுமானது.
 

7. நான் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என் வயது 26. எனக்கு இந்தியாவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா? வெளிநாட்டில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்தியாவில் உள்ள என் குடும்பத்திர்கு க்ளெய்ம் கிடைக்குமா?

நீங்கள் வெளிநாட்டில் இருப்பவர் என்றாலும், இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். ஆனால் இதில் செலவு அதிகம், ஏனெனில் இதற்காக நீங்கள் அங்கு உங்கள் செலவில் மருத்துவ பரிசோதனையை எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தியாவில் இருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செலவு இல்லை. ஆனால், பல நாடுகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ்களுக்கான ப்ரீமியம் இந்தியாவைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், ப்ரீமியம் தொகையைப் பொறுத்து நீங்கள் பாலிசிகளை அந்த நாடுகளில் எடுத்துக்கொள்வதா அல்லது இந்தியாவிலிருந்து எடுப்பதா என்று முடிவு செய்துகொள்ளலாம்.

8. என் வயது 55. இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். தற்போது மத்திய அரசு பணியில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். எனக்கு எந்த நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் வழங்கும். தோராயமாக பிரீமியத்தையும் கணக்கிட்டு சொல்லங்கள்?

நல்ல ப்ரீமியம் மற்றும் நம்பகத் தன்மையுடனான கவரேஜ் அறிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு அவிவா, டாடா ஏஐஜி போன்றவை. உங்களுடைய வயதிற்கு, ரூ 50 லட்சம் ரூபாய் கவரேஜ் வழங்கும் பாலிசி வேண்டும் என்றால், 10 வருட பாலிசிக்கு ஆண்டு பிரீமியமாக ரூ. 27,000 செலுத்த வேண்டியிருக்கும்.

9. நான் கடந்த 3 வருடங்களாக 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் செலுத்தி வருகிறேன். தற்போது இந்த தொகையை ரூபாய் 75 லட்சமாக உயர்த்திக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு என்ன செய்வது? வேறு ஒரு டேர்ம் பாலிசி 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதா அல்லது இந்த பாலிசியிலேயே உயர்த்திக் கொள்ள முடியுமா?

நீங்கள் அதே இன்ஷூரன்ச் நிறுவனத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு புதிய பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை நம்பகத் தன்மையான வேறொரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் இதைவிட குறைவான ப்ரீமிய தொகையில் 75 லட்சம் ரூபாய்க்கு பாலிசி வழங்கினால், இந்த நடப்பு பாலிசியை நிறுத்திவிட்டு, அந்த நிறுவனத்தில் புதிய பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி மாற்றும்போது, உங்கள் நடப்பு பாலிசி கணக்கை புதுப்பிக்கும் சமயத்தில் செய்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் நடப்பு பாலிசியின் முழு பயனையும் நீங்கள் அடைய முடியும்.

10. பொதுவாக டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியினால் எந்த மாதிரியான விபத்துக்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும்?

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில், பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக இறக்கும்பட்சத்தில் க்ளெய்ம் எடுக்கப்பட்ட தொகை முழுவதுமாக கிடைக்கும். காரணம், எதுவாக இருந்தாலும் இந்த இழப்பீடு வழங்கப்படும். ஆனால் பாலிசி எடுத்ததிலிருந்து முதல்  12 மாதங்களுக்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்து கொண்டால் க்ளெய்ம் தொகை வழங்கப் படமாட்டாது.
 
11. என் வயது 27 , நான் இப்பொழுதே 25 வருட காலத்திற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வருடா வருடம் பிரீமியம் கூடுமா ?

பிரீமியம் அதிகரிக்காது. அதாவது நீங்கள் இப்போது எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்களோ அந்த தொகை தான் இன்ஷூரன்ஸ் கவரேஜ் காலம் முடியும் வரை வசூலிக்கப்படும்.

12. சில ஏஜென்ட்கள் டேர்ம் பாலிசியை ஊக்குவிப்பதில்லை கட்டிய பணம் திரும்ப வராது என்ற தவறான கண்ணோட்டத்திலேயே வாடிக்கையாளர்களை  அணுகுவது ஏன்?

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை விட மற்ற வகை பாலிசிகளில் தான் அதிக கமிஷன் கிடைக்கும். எனவே தான் டேர்ம் பாலிசிகளை பற்றி விவரங்களை கொடுப்பதில்லை, அல்லது அதை பற்றி சொல்வதில்லை. அதுமட்டும் இல்லாமல் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரருக்கு, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் காலத்திற்கு பின், பாலிசிதாரர் கட்டிய பிரீமியம் பணம் திரும்ப கிடைக்காது. இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஏஜென்ட்கள் டேர்ம் பாலிசிகளை பரிந்துரைப்பதில்லை.

13. என் வயது 46 மாத வருமானம் ரூ. 35,000 நான் டேர்ம் பாலிசி எடுக்கவேண்டும்,                                 என்னதொகைக்கு எடுக்கவேண்டும்  ஆன்லைனில் பாலிசி எடுப்பது நல்லதா ?

உங்கள் மாத சம்பளத்தை போல் 150 மடங்கு என்று கணக்கிட்டால், நீங்கள் சுமாராக 55 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். ஆன்லைனில் பாலிசி எடுக்கும் போது பாலிசிபஜார் போன்ற வலைதளங்களை பயன்படுத்தி நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். குறைந்த பிரீமியம் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், க்ளெய்ம் செட்டில்மென்ட் சிறப்பாக வழங்கியுள்ள, நல்ல நிர்வாக செயல்பாடுகள் உள்ள நிறுவனங்களில் பாலிசி எடுப்பது நல்லது.
உதாரணமாக ஹெச்டிஎஃப்சி, எல்.ஐ.சி, டாடா ஏ.ஐ.ஜி போன்ற நிறுவனங்கள்.
 
 14. இன்ஷூரன்ஸ் என்றால் எண்டோவ்மென்ட் பாலிசிதான் சிறந்தது என்கிறார் நண்பர் அது சரியா?

" எண்டோமென்ட் பிளான் பாலிசிகளின் முதிர்வு தொகை அதிகமாகத் தெரியும். ஆனால் அதனுடைய வருமானம் என்பது அதிகபட்சம் 7 சதவிகிதம்தான் இருக்கும். இது மிகவும் குறைவான வருமானமே. இந்தத் தொகையை வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் எண்டோமென்ட் பாலிசியில் கவரேஜ் என்பது நீங்கள் செலுத்தும் ஆண்டு பிரீமியத்தில் அதிகபட்சமாக 25 மடங்குதான் கவரேஜ் கிடைக்கும்.

இந்த கவரேஜ் தொகை, பாலிசிதாரர் மரணம் அடைந்த பிறகு, அவரின் குடும்பத் தேவைக்குப் போதுமானதாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, எண்டோமென்ட் பாலிசிகள் முதலீடு அல்லது இன்ஷூரன்ஸ் கவரேஜ் என எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது.

15. ஒரு தனி நபர் எவ்வளவு டேர்ம் பாலிசிகளை வைத்துக் கொள்வது நல்லது?

"பாலிசி எடுக்க விரும்பும் நபரின் தேவை என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவரின் கவரேஜ் தொகையைத் தீர்மானம் செய்ய முடியும். அதாவது பாலிசிதாரருக்குத் தேவைப்படும் கவரேஜ் தொகைக்கான பாலிசியை ஒரே பாலிசியாக எடுக்கலாமா அல்லது இரண்டு பாலிசிகளா எடுக்கலாமா என்பதைப் பிரீமியத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய முடியும். அதாவது ஒரு பாலிசியாக அல்லது இரண்டு பாலிசியாக எடுக்கும் போது பிரீமியம் எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டும். எதில் குறைவான பிரீமியம் என்பதைப் பொறுத்து பாலிசிகளின் எண்ணிக்கையை முடிவு செய்து கொள்வது நல்லது. மேலும் பாலிசிதாரர் கவரேஜ் தொகையை அதிகரிக்கும் போது புதிய பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சமயத்தில் பழைய பாலிசியின் பிரீமியத்தை விடப் புதிய பாலிசியின் பிரீமியம் குறைவாக இருக்கும் போது பழைய பாலிசியை புதுப்பிக்காமல் விடுவது நல்லது.
 
16.என் வயது 47. ஆண்டு வருமானம் ரூ. 16 லட்சம். டேர்ம் பாலிசி ரூ.85 லட்சத்திற்கு உள்ளது. இந்த தொகை சரியா அல்லது அதிகரிக்க வேண்டுமா?
 
உங்கள் ஆண்டு வருமானமான 16 லட்சத்தை 12 மாதங்களுக்கு பிரித்தால் தோராயமாக 1.3 லட்சம். ஆக இது போல் 150 மடங்கு என்றால் 2 கோடி ரூபாய்க்கு நீங்கள் டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ