Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

 

 

இன்று ( 23.09.2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்த சந்தேகங்களுக்கு  பதிலளித்தார்  எஸ்.சரோஜா, இயக்குநர் (நுகர்வோர் பிரச்னைகள்), சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப், சென்னை.


நுகர்வோர் பிரச்னைகள் மற்றும் உரிமைகள்  குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

 

 

 

1. கடந்த மாதம் ஆன்லைன் ரீடெயில் வலைதளம் ஒன்றில் வாட்ச் வாங்கினேன். சரியாக ஓடவில்லை. ஆன்லைன் ரீடெய்லர் சொன்ன இடத்தில் சர்வீஸ் செய்தும் பலனில்லை. தற்போது யாரிடம் புகார் தெரிவிப்பது?


நேரடியாக நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர்  அமைப்பை நாடி உங்கள் பிரச்னையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம்.


2. நுகர்வோருக்கு என்ன மாதிரியான உரிமைகள் இருக்கின்றன.?


நுகர்வோருக்கு எட்டு உரிமைகள்  உள்ளன. அவை, பாதுகாப்பு உரிமை, பொருட்களைத் தேர்வு செய்தல், தகவல் அறிதல்,  பிரதிநிதித்துவம், நுகர்வோர் கல்வி பற்றிய உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் போன்றவை ஆகும். இவற்றில்  முதல் ஆறு உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.


3. பொதுவாக நுகர்வோர்கள் செய்யும் தவறுகள் என்ன?


வாங்கும் பொருட்களின் பில்களின்  ஒரிஜினலை எப்போதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் எந்த பொருளை வாங்குவதற்கு முன்பும், அந்த பொருள் வாங்குவதற்கு ஏதாவது பத்திரங்கள், பேப்பர்களில் கையெழுத்திடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும்.


நாம் பொருள் வாங்க இருக்கும் போது, கடைக்காரர் அல்லது சேவை வழங்குபவர், வழங்குவதாக சொல்லும் அனைத்தும் எழுத்துப் பூர்வமாக இருக்க வேண்டும்.இது போன்ற விஷயங்களில்தான் விழிப்புணர்வோடு இல்லாமல் பெரும்பாலான நுகர்வோர் தவறுசெய்கிறார்கள்.

 

4. என் நண்பரின் நுகர்வோர் பிரச்னைக்கு நான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வாதாடலாமா ?


நிச்சயமாக, நீங்கள் வாதாடலாம். ஆனால் உங்களுடைய நண்பர் அவருக்கு பதிலாக வாதாட உங்களை அதிகார பூர்வமாக (authorize ) பரிந்துரைக்க வேண்டும்.

 

5. நுகர்வோர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டால் யாரிடம் புகார் செய்வது? உடனடி தீர்வு ஏதேனும் உண்டா?

ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கும்போது நாம் நுகர்வோர் ஆகிறோம். இவற்றில் ஏதேனும் குறை ஏற்பட்டால் மட்டுமே நாம் நுகர்வோர் குறை தீர் மன்றத்தை அணுகலாம். ஆனால், நுகர்வோர்கள் தரக் குறைவாக நடத்தப்பட்டாலோ, அவர்களின் மீது தவறான வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டாலோ உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் செய்யலாம்.

6. வீட்டிற்கு வந்து பொருட்களை விற்கும் நபர்களிடம் பொருட்களை வாங்கி, அதனால் ஏமாற்றப்பட்டால் இதற்காக தீர்வு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாமா? அணுகலாம் என்றால் என்ன ஆவணங்கள் தேவைப்படும்?

நிச்சயமாக அணுகலாம். அதற்கு முக்கியமாக, பொருட்களை வாங்கியதற்கான ரசீது மற்றும் வாரன்டி கார்டு (இருந்தால்), குறையை சரிசெய்யச் சொல்லி சம்psந்தப்பட்ட நிறுவனத்துக்கு நீங்கள் எழுதிய கடிதத்தின் நகல் ஆகியவற்றை உடன் வைத்துக் கொண்டு நுகர்வோர் குறை தீர் மன்றத்தை அணுகலாம்.
கடைக்குச் சென்று பொருள் வாங்கும்போது கட்டாயம் ரசீது பெறுவது எப்படி அவசியமோ, அதே போல வீட்டிற்கு வந்து பொருள் விற்பவர்களிடமும் ரசீது பெறுவது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

மேலும், அந்த பொருட்களின் தரம் மற்றும் விற்பனையாளர்கள் சொல்லும் விஷயத்தின் உண்மை தன்மையை தீர விசாரித்தப் பிறகு அந்த பொருளை வாங்கினால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். 

7. நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும்போது எது மாதிரியான விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அணுக வேண்டும்?

ஒரு விற்பனையாளரின் மீது குறை சொல்கிறோம் என்றால், அதை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதார பூர்வமான ஆவணங்களை (ரசீது, கடிதப் போக்குவரத்து விவரங்கள், புகார் கடிதத்தின் நகல் மற்றும் வேறு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பின் அவை அனைத்தும்) சமர்பிப்பது ஒரு நுகர்வோரின் கடமையாகும்.

அந்த வகையில் ஒரு பொருளை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டால், நுகர்வோர் அது சார்ந்த முழுமையான விவரங்களை குறிப்பிட்டு, பின்னர் அதை மாற்றிக் கொடுக்கச் சொல்கிறாரா அல்லது அதற்கான பணத்தை திரும்பத் தரச் சொல்கிறாரா அல்லது
அதை சரி செய்து தரச் சொல்கிறாரா என்கிற விவரங்களை தெளிவாக நுகர்வோர் குறை தீர் மன்றத்திடம் தெரியப்படுத்துவது அவசியம். இது தவிர இந்த பிரச்னையால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்காகவும் நஷ்டஈடு கேட்கலாம். நஷ்ட ஈடானது இவ்வளவுதான் என வரையறுக்கப்படவில்லை என்றாலும், நியாயமான கோரிக்கையையே குறைதீர் மன்றம் எதிர்பார்க்கும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

8. வாராண்டி, கியாரண்டி என்ன வேறுபாடு? எது சிறந்த சலுகை?

வாராண்டி என்பது வாக்குறுதி வழங்குவது ஆகும். அதாவது வாங்கும் பொருளில் உள்ள பாகங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதைச் சரி செய்து தருவது அல்லது அந்தப் பாகத்தை மாற்றித் தருவதற்கான உறுதி வழங்குவதுதான் வாராண்டி ஆகும்.
கியாரண்டி என்பது வாங்கும் பொருளில் குறிப்பிட்ட சில வருடங்கள் அல்லது மாதங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என அக்ரிமென்ட் கொடுப்பது ஆகும். உதாரணமாக ஒரு பொருள் வாங்கும் போது 60 நாட்கள் மணி பேக் கியாரண்டி, 2 வருடம் வாராண்டி எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது 60 நாளில் வாங்கிய பொருளில் பிரச்னை ஏற்பட்டால் பொருளை கொடுத்து விட்டுப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்பது கியாராண்டி. அதுவே அந்தப் பொருளில் இரண்டு வருடத்துக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதைச் சரி செய்து தருவது வாராண்டி காலம் ஆகும்.
 

9. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு புகழ்பெற்ற நகைக் கடையில் 1 பவுன் எடையுள்ள நகை வாங்கினேன் தற்போது அந்த நகையை அதே கடையில் விற்கச் சென்ற போது 7 கிராம் தான் என்று கூறுகிறார்கள். இந்தப் புகாரை யாரிடம் தெரிவிப்பது?
 
நகை வாங்கியதற்கான ரசீதில், அதில் நீங்கள் வாங்கும் போது எத்தனை கிராம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் 8 கிராம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் தற்போது அந்த நகையின் எடை எவ்வளவு உள்ளது என்பதை வேறு கடையில் எடை போட்டு பார்க்கவும். எடையில் ஒரு கிராம் வித்தியாசம் இருந்தால் நகை வாங்கிய கடையில் அது குறித்து ஒரு புகார் கடிதத்தை அளிக்க வேண்டும். அதற்கு அந்தக் கடை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை எனில் நுகர்வோர் நீதிமன்றம் அல்லது நுகர்வோர் அமைப்பை அணுகலாம்.

10.நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?


பணம் கொடுத்து பொருள் வாங்கி அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அது குறித்து நீங்கள் பொருள் வாங்கிய நிறுவனத்திடம் முதலில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அந்தப் பிரச்னை குறித்து எந்தவிதமான நடவடிக்கையையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லையெனில் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். இங்கு புகார் பதிவு செய்வது மிகவும் எளிதுதான். புகார் கடிதத்தில் உங்களின் பெயர், நீங்கள் புகார் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடுவது அவசியம். மேலும் அதில் அந்த நிறுவனத்தின் மீது எந்தக் காரணத்துக்காக புகார் கொடுக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். புகார் கொடுக்கும் உங்களின் க்ளெய்ம் தொகை 20 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும் போது மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் புகார் அளிக்கலாம். அதே க்ளெய்ம் தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி வரை எனில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்திலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எனில் தேசிய நுகர்வோர்  குறைதீர் ஆணையத்திலும் வழக்குப் பதிவு செய்யலாம்.
புகார் கொடுக்கும் நிறுவனத்தின் அலுவலகம் இருக்கும் இடத்திலோ அல்லது கிலை அலுவலகம் இருக்கும் இடத்திலோ அல்லது பிரச்னை உருவான இடத்திற்கு அருகில் உள்ள குறைதீர் மன்றம் அல்லது ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்யலாம்.

சென்னை மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம்/ ஆணையத்தின் முகவரி.
தலைவர்,
மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்/சென்னை மாவட்ட (வடக்கு/தெற்கு) நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம்,
ஃப்ரேசர் பாலம் சாலை,
வ.உ.சி. நகர்,
பார்க் டவுன்,
சென்னை - 600 003
தொலைபேசி:  044-2534 0050

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ