Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

14.சும்மா வருமா வேலை..?


        
அடுத்த கட்டம்!


・    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

'இன்னும் எதாவது சொல்ல வேண்டி இருக்குதா...?'
'இரு.. அதுதானே யோசிச்சிக்கிட்டு இருக்கேன்...'
'எவ்வளவு நேரமா யோசிப்பீங்க...? நான் போவணும் இல்லை...?'
'அட.. ரொம்பத்தான் அலட்டிக்கறியே தம்பி... ஒண்ணு பண்ணு. அதை எங்கிட்ட குடு... வேற என்ன எழுதணும்னு
யோசிச்சு வைக்கிறேன். பொறவு, நீயே வந்து எழுதிக் குடு. என்ன...?'

புரியவில்லை அல்லவா...? சில ஆண்டுகளுக்கு முன்பு... கல்வியறிவு பெருகாத நாட்களில், கிராமத்தில் இருந்த
'நாலு எழுத்து' படிச்ச புள்ளைங்களா கேட்டா சொல்லும். 'பெருசுங்க' ஒவ்வொருத்தருக்கும், அவங்க சொல்லச் சொல்ல,
ஒரு 'கடுதாசி' எழுதி முடிக்கறதுக்குள்ளே, 'போதும்... போதும்'னு ஆயிடும்.

சுய குறிப்பு எழுதுவதும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். என்ன...? இதை 'நமக்கு நாமே' எழுதிக் கொள்ளலாம்.
வயது, படிப்பு, அனுபவம், பழக்க வழக்கங்கள் தவிர்த்து, சொல்லிக் கொள்வதற்கு வேறு என்ன இருக்கிறது...?
இங்குதான் நமக்கு 'மேல்மூச்சு கீழ்மூச்சு' வாங்கும்.

பொதுவாக தமிழ் நாட்டில், எதையுமே பத்திரமாக ஆவணப்படுத்தி வைத்துக் கொள்கிற பழக்கம் இல்லவே இல்லை.
'நான் அஞ்சாம் கிளாஸ் படிக்கறச்சே, ............. கையாலயே பரிசு வாங்கி இருக்கேன்'.
'அப்படியா...? ஃபோட்டோ எதாவது இருக்கா...?'
'ப்ச்... அப்போ ஒரு ஃபோட்டோ குடுத்தாங்கடா. எங்கயோ விட்டுட்டேன்...'

ஒன்று நாம் தவற விட்டிருப்போம். அல்லது, (பள்ளியில்) அவர்களே தராமல் விட்டிருப்பார்கள்.
இப்படித்தான் பலருடைய 'சாதனைகள்', பதிவு பெறாமலே போய் விடுகின்றன.

ஏற்கனவே சொன்னோம். சுய குறிப்பில் இடம் பெறும் ஒவ்வொரு செய்தியும், 'நிரூபிக்கக்படக் கூடியதாக'
இருக்க வேண்டும். சான்றிதழோ புகைப்படமோ நாளிதழில் வந்த செய்தியோ... ஏதோ ஒன்று. இருந்தாக வேண்டும்.

'சாதனை' என்று எதைக் குறிப்பிடலாம்...?
இதுவரை சுமார் இருபது முறை ரத்ததானம் செய்து இருக்கிறேன்.
சிறிய அளவில் ஒரு மோட்டார் தயாரித்து இருக்கிறேன்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், வெள்ள மீட்புக் குழுவில் பணியாற்றி இருக்கிறேன்.
நோய்த் தடுப்பூசி முகாமில் தன்னார்வலராகப் பணியாற்றி இருக்கிறேன்.

மேற்சொன்ன விவரங்கள் அனைத்துமே, 'சாதனைகள்'தாம்.
ஆனாலும் நமக்குள் இரண்டு குழப்பங்கள்.
1. இது போய் எப்படி 'சாதனை' ஆகும்..?
சாதனைகள் எல்லாம், பிரபலங்களுக்கு மட்டுமே ஆனது என்றும், நாம் ஆற்றுகிற காரியங்கள் எல்லாம்
'எதுக்கும் ஆவாது' என்றும் நாமாகத் தீர்மானித்துக் கொண்டு உள்ளோம். இந்த அறியாமையில் இருந்து
நாம் வெளியே வர வேண்டும். சுய குறிப்பைப் பொறுத்த மட்டில், 'சாதனை' என்கிற சொல்,
ஆங்கிலத்தில் 'achievement' என்கிற சொல்லுக்கு இணையாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
'adventure' அதாவது சாகசம் என்கிற பொருளில் இல்லை. இதனை நாம் நன்கு நினைவில் இருத்த வேண்டும்.

2. நீங்கள் சொல்வது போல், இதனை 'சாதனை' என்றே ஒப்புக் கொள்கிறேன். ஆனால், என்னுடைய கல்வித் தகுதிக்குத் தராத வேலையை, இந்த 'சாதனையை' வைத்தா கொடுத்து விடப் போகிறார்கள்...?
இதை மட்டும் வைத்து தரப் போவதில்லைதான். நமது கல்வித் தகுதிகளுடன், இந்தச் சாதனைகள் சேரும் போது,
அதற்கு ஒரு மெருகு கூடுகிறது.... நம்மைப் பற்றிய ஒரு 'இமேஜ்' உருவாகிறது பாருங்கள்.. அதுதான் நமக்கு வேலை பெற்றுத் தரும்.

ஆகவே இந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

மற்றபடி, நம்முடைய ஊர், விலாசம், பெற்றோர் பற்றிய தகவல்கள், தொடர்பு எண், 'உறுதி மொழி' ('உண்மையாக உழைப்பேன்...') ஆகியன வெல்லாம், பிழை இன்றி எழுதப் பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை, விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இணைக்கச் சொல்லிக் கேட்டு இருந்தால்,
'சமீபத்தில்' எடுக்கப்பட்டதாக இருக்கிறதா என்று பார்த்து, இணைக்கவும்.
நமக்கே அது யார் என்று தெரியாத நிலையில் இருக்கும் படத்தை அனுப்பி,
'என்னைத் தெரிகிறதா..?' என்று புதிர் போடுகிற புகைப்படங்கள் வேண்டாமே...
நமக்கு நல்ல வேலையும், சம்பளமும் கேட்டு விண்ணப்பிக்கிற ஒரு இடத்தில்,
'புது போட்டோவுக்கு எங்கே போறது..?' என்று மல்லுக்கு நின்றால் நன்றாகவா இருக்கும்..?

கையொப்பம், தேதி ஆகியனவற்றில் கவனம் செலுத்துங்கள். கிறுக்கலாக எழுதி, அல்லது, வெறுமனே ஒரு கோடு மட்டும் கிழித்து, உங்கள் அலட்சிய மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம். ('நாளைக்கு நம்மளை வேலைக்குக்
கூப்பிடணும்தானே...? அப்ப, கையெழுத்தை 'ஒழுங்கா' போடு!' - அம்மா/ அப்பா) 

நிறைவாக, உறையின் எழுதும் விலாசம், தவறு ஏதும் இன்றி சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

உறையின் மீது, நம்முடைய முழு விலாசத்தையும் (தொடர்பு எண்ணையும்) தெளிவாக எழுதவும்.
(அதைவிட உனக்கு என்ன வேலை..? - அப்பா)

விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி நாள் வரை காத்து இருக்க வேண்டாம்.
முன்னரே அனுப்பினால் தவறு ஏதும் இல்லை.
அஞ்சலில் சேர்த்து விட்டு, காத்திருங்கள் அழைப்புக்காக - நம்பிக்கையுடன்.
ஆம். நம்பிக்கை. அது வர என்ன செய்ய வேண்டும்...?

- (வளரும். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ