Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

15. சும்மா வருமா வேலை..?நம்பிக்கை - கற்பனை அல்ல.
 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


'எதுக்கும் கவலைப்படாதே.. எழுந்து நில்லு. துணிஞ்சு நில்லு.
உலகம் உன் கையில.. வானம் உன் பையில..'

'எத்தனை முறை விழுந்தே...? அத்தனை முறையும் எழுந்தியே... இப்பவும் எழுந்திரு..'

'நீ நினைச்சா நடக்காதது எதுவும் இல்லை. நீ முயன்றா முடியாதது ஒண்ணுமே இல்லை...'

'நீ யாரு..? பசிபிக் கடலையே 'பச்சக்'னு மொண்டு குடிச்சுடுவே... எவரஸ்ட் உன் கணுக்கால் உயரம்..'

'வா.. 'புதுச்சா ஒரு ஒலகம் படைச்சிக் காட்டுவோம்.. கெலிச்சுக் காட்டுவோம்.. '

உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மோசடி வார்த்தை - 'தன்னம்பிக்கை'.

அதிர்ச்சியாக இருக்கிறதா...?

அதீத கற்பனை. அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அறிவுரைகள்.
இல்லாத ஒன்றை இருப்பதாக, இயலாத ஒன்றை இயல்பானதாக சிருஷ்டித்து,
சுத்த 'சினிமாதனமான' கற்பனையில், ஏதோ ஒரு மயக்கத்தில், மீள முடியாத போதையில் மிதக்க வைப்பதற்கு  'தன்னம்பிக்கை' என்கிற சொல் பயன்படுத்தப் படுகிறது.

தவறான, பொய்யான, கனவுலக வாழ்க்கைக்கு இளைஞர்களைத் தள்ளி விடுவதே, சில அரைகுறை அறிவு ஆசாமிகளின்
எழுத்தும் பேச்சும்தான். 'தன்னம்பிக்கை ஊட்டுகிறேன் பேர்வழி' என்று சொல்லிக் கொண்டு, இவர்கள் கக்குகிற
பிதற்றல்களைக் கேட்டு, ஏராளமான இளம் தலைமுறையினர் கள்ளுண்ட போதையில் பித்துப் பிடித்தாற் போல்
அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

போதாக் குறைக்கு, 'வெற்றி என்பது என் வீட்டு வாசற்படி..' என்பது போன்ற பித்துக் குளித்தனமான திரைப் பாடல்கள்;
'நான் எப்படி மேல வந்தேன் தெரியுமா..?' என சரடு விடும் முழு நேர பட்டிமன்றப் பேச்சாளர்கள்... பாவம் இன்றைய இளைஞர்கள்.

தன்னம்பிக்கை. எதையோ படித்து, யாரோ சொல்லி வருவது அல்ல.
தனது தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே தன்னம்பிக்கை முளைக்கும்.

ஒரு பெரியவர். படித்தவர். ஆனாலும், 'எனக்கு கம்ப்யூட்டர்னாலே பயம். ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது.
மெயில் அனுப்பறேன் பாருன்னு சொல்றாங்க. எப்படிப் பார்க்கறது... இந்த வயசுக்கு மேல எங்கே போயி கத்துக்கறது...'
இப்படியே சில மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள். அவருடைய பேரன், அவரை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தான்.
அவ்வளவுதான். இப்பொழுது...?
'சதா சர்வ காலமும் மெயில், ஃபேஸ்புக்குனு இருந்தா எப்படி..?' என்று அவரது மனைவி ஓயாமல் புகார் கூறிக் கொண்டு இருக்கிறார்.

அறிந்து கொண்டார். கணினி பற்றிய அச்சம் போய் விட்டது. அறிவு வருகிற போது, அச்சம் தானாக விலகி விடுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவி. தேர்வு என்றாலே தீராத பயம். 'நல்லா தைரியமா இரு..' என்று யார் யாரோ 'தன்னம்பிக்கை'
சொல்லிப் பார்த்தார்கள். ஊஹூம்.. பயம் விட்டபாடில்லை.

ஒரு ஆசிரியை. அவர்கள் வீட்டுக்கு ஏதோ காரணமாய் வந்தார்கள். விஷயம் கேள்விப்பட்டார்கள்.
'இவ்வளவுதானே...? ஒரு.. பத்து நாளைக்கு என் வீட்டுக்கு அனுப்பி வை.. பார்த்துக்கறேன்..'
சரி.. என்ன நடக்குதுன்னு பார்ப்போமே... என்று அனுப்பி வைத்தார்கள்.
அந்த மாதம் நடந்த பள்ளித் தேர்வில், அதிசயமாக நல்ல மதிப்பெண்கள் வாங்கி விட்டாள்.

'வேற ஒண்ணும் இல்லைம்மா.. மத்தவங்க எல்லாம் தைரியம் குடுத்தாங்க. நான் ஆனா, 'வேலை' குடுத்தேன்.
இன்னைக்கு இதைப் படி.. இன்னைக்கு இதை முடி... இப்படியே.. பத்து நாள்ல அவளோட 'போர்ஷனை' படிச்சுப்
புரிஞ்சுக்க வச்சுட்டேன். அப்புறம் என்ன...? பரிட்சை நல்லா எழுதிட்டா.. பயமும் போயிருச்சி...'

தேர்வுன்னா என்ன...? கேள்விக்கு பதில் எழுதணும். அது முடியும்னா, அப்புறம் எங்கே இருந்து பயம் வரப் போகுது..?
அது இல்லாம, சும்மாவாச்சும் பயப்படாதேன்னா எப்படி...?

ஆம். நமது திறமை, தகுதி வளர வளர, நமக்கான வாய்ப்புகளும் வெற்றிகளும் அதிகரிக்கும்.
இதுதான் ஒரே சமன்பாடு.

நூறு பக்கங்கள் கொண்ட புத்தகம். இதுதான் தேர்வுக்கான பாடத் திட்டம். நூறு பக்கங்களும் எனக்கு அத்துபடி என்றால்..?
போலீஸ் வேலைக்குப் போகிறேன். அவர்கள் எதிர்பார்க்கும் உடற்தகுதி அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே எனக்கு
இருக்கிறது என்றால், எப்போது என்னைக் கூப்பிடுவார்கள் என்றுதானே காத்துக் கொண்டு இருப்பேன்...? 'ஐயய்யோ.. என்னைக் கூப்பிடப் போகிறார்களே என்று பயமா இருக்கும்..?

நான் அர்ச்சுனன் என்றால், என் கையில் வில்லைக் கொடுத்து, 'அதை நோக்கி அம்பு விடு' எனும் போது, என் கைகள் நடுங்கிக் கொண்டா இருக்கும்..?

எனக்கு நன்றாக நீச்சல் தெரியும்; நான் ஏன் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு அஞ்சப் போகிறேன்...?

தன்னம்பிக்கை என்பது போதனையால் வருகிற போதை அல்ல.

முழுக்க முழுக்க அறிவு, திறமை காரணமாக வருகிற துணிச்சல்.

வீட்டில் மிக முக்கியமான திருநாள். இன்னும் ஓரிரு நாட்கள்தாம் இருக்கின்றன.

'வரவேண்டிய இடத்தில் இருந்து' எதிர்பார்த்த பணம் வந்து சேரவில்லை. அங்கிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ
பணம் வந்து சேர்கிற வரை, பதட்டம் இருக்கத்தானே செய்யும்...? இதிலே 'நம்பிக்கை' என்பது, பணம்தான். வேறு எதுவுமே

இல்லை. யாரிடமாவது கேட்டு வாங்கி, சமாளித்தாக வேண்டும். அட... எதிர்பார்த்த படியே பனம் வந்து விட்டதா..?
'தன்னம்பிக்கை'யும் தானாக வந்து விட்டது!

பிரச்னையின் தீர்வுக்கு என்ன வழி..? அதைக் கண்டு பிடித்து செயல் படுத்தவேண்டும். அதற்குத் திறமை, சமயோசிதம்
வேண்டும். 'ரிசல்ட்'... அதற்கு ஏற்ற செயல். இதற்கு, 'தன்னம்பிக்கை' என்று பெயர் இல்லை.

வேலை தேடும் இளைஞர்களுக்கு நமது 'யோசனை' இதுதான்.

வேலை வரும் என்று காத்துக் கிடப்பதிலேயே காலத்தை வீணடிக்க வேண்டாம்.
செலவில்லாமல் தனது திறமைகளை வளர்த்துக் கொள்கிற, கூர்மையாக்கிக் கொள்கிற வழிகளைக் கண்டு பிடியுங்கள்.

'எதாவது ஒரு வேலை.. எங்கேயாவது போ.. ஏதோ ஒண்ணு பண்ணிக் கிட்டே இரு... ஒரு நா.. ஒரு மணி நேரம் கூட சும்மாவே இருக்கக் கூடாது..' என்று யாராவது சொன்னால், அதை வேத வாக்காகக் கொள்ளுங்கள். ஏனென்றால்,
இதுதான் யதார்த்தம். இதுதான் 'வேலைக்கு ஆவும்'.

படிப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். பணியின் மூலம்தான் நாம் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு மெஷின் பற்றி நமக்குத் தெரிந்தது நிறைய இருக்கலாம்.

ஆனால், ஒரு மெஷினில் வேலை செய்கிற ஒருவருக்கு
அது பற்றிய அறிவு நிச்சயம் மிக அதிகம். ஆகவே, தெரிந்து வைத்து இருக்கிற நம்மை விட, கற்று வைத்து இருக்கிற
இன்னொருவர், 'தன்னம்பிக்கை'யுடன் செயல் புரிவார். காரணம், அவரது அனுபவம்.

அறிவு, ஆற்றல், அனுபவம்... இவற்றின் தனிமமோ அல்லது கூட்டோ 'தன்னம்பிக்கை' ஆகிறது.

இவற்றை வளர்த்துக் கொண்டால், தன்னம்பிக்கையும் கூடவே வளரப் போகிறது.

தன்னம்பிக்கை எழுத்தும் பேச்சும் தவறல்ல; போதாது. அவ்வளவுதான்.  நினைவில் கொள்வோம்.
தன்னம்பிக்கை 'ஊட்டி' வருவதல்ல; உழைத்துப் பெறுவது.

இன்னொரு அடிப்படைக் கூறு இருக்கிறதே.. அதையும் பார்ப்போம்.

Positive thinking.

நேர்மறைச் சிந்தனை!

(வளரும்) 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ