Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றுமதிக் கடன் குறித்த ட்விட்டர் கேள்வி- பதில்

இன்று ( 07.10.2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் ஏற்றுமதிக் கடன்  குறித்த சந்தேகங்களுக்கு  பதிலளித்தார்  ஶ்ரீதரன் , எஸ்பிஐ, உதவி பொது மேலாளர் (ஓய்வு).


ஏற்றுமதிக் கடன்   குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

 

 

 

1. ஏற்றுமதிக் கடனை லிபார் வட்டியில் வாங்குவது லாபகரமாக இருக்கும் என்று என் நண்பன்  சொல்லியது உண்மையா?


ஆம். உண்மைதான். ரூபாயில் கடன் வாங்குவதைக் காட்டிலும் அந்நிய செலாவணியில்  (ஃபாரக்ஸ்) வாங்கும் கடன் லாபகரமானதுதான். ஏனெனில் அந்நிய செலாவணியில் வாங்கும் கடனுக்கான வட்டி லிபார் (LIBOR -London Inter Bank Offered Rate)  உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. ஏற்றுமதிக் கடனுக்கான வட்டி எவ்வளவு? இது வீட்டை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கான வட்டியை விட குறைவாக இருக்குமா?


ஏற்றுமதிக் கடனுக்கான வட்டி வங்கிக்கு வங்கி மாறும். ஆனால் ஏற்றுமதி கடனுக்கான வட்டி, வீட்டை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கான வட்டியை விட குறைவுதான்.

3. ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மதிப்பில் எவ்வளவு சதவிகிதம் கடன் கிடைக்கும்?


வங்கியைப் பொறுத்த வரை கடன் தொகை என்பது அந்தக் கடன் திருப்பி செலுத்தப்படும் காரணிகள் மற்றும் எந்த அளவுக்கு அது பாதுகாப்பான கடனாக இருக்கும் என்பதை பொறுத்து மாறக்கூடியது. பொதுவாக 75% வரை கடன் கிடைக்கும். கடன் விண்ணப்பம் தெளிவாகவும் தகுதியானதாகவும் இருந்தால்  80லிருந்து 85 சதவிகிதம் வரை கூட கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.


4. ஏற்றுமதிக் கடன் வாங்குவதற்கு வெளிநாட்டு ஆர்டர் இருந்தால் மட்டும் போதுமா?

ஏற்றுமதிக் கடன் வாங்குவதற்கு ஆர்டர் மட்டும் போதாது. அதற்கு கீழ்வரும் விஷயங்களெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு திருப்தி என்றால் மட்டுமே கடன் கிடைக்கும். .
- வெளிநாட்டு இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை
- ஏற்றுமதி செய்யப்படும் பொருள் இந்திய அரசு வர்த்தக ஒழுங்குமுறைகளின்படி அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
- ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் (பொருளாதார, நிதி தொடர்பான மற்றும் அரசியல் சார்ந்த) ஆபத்துக் காரணிகளின் நிலை என்ன என்பது பார்க்கப்படும்.
- பணப் பரிவர்த்தனை முறைகள் என்ன? ஆவணங்கள் வந்து சேர்ந்ததும் பணம் வழங்கப்படுகிறதா அல்லது இறக்குமதியாளருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை இறக்குமதியாளருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றால், எவ்வளவு காலம், ஏனெனில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி பொருளுக்கான பணத்தைப் பெறுவதற்கான கால வரையறையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
- ஆர்டரில் குறிப்பிட்டபடி பொருளை சரியாக ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளரின் திறன் பார்க்கப்படும்.

5.பழைய ஏற்றுமதி ஆர்டர்களின் அடிப்படையில் புதிதாக கடன் பெற முடியுமா?


ஏற்றுமதி ஆர்டர் எவ்வளவு நாள் பழையது என்று பார்க்கப்படும். அனைத்து ஆர்டர் ஒப்பந்தங்களிலும் பொருட்களை ஏற்றி அனுப்ப வேண்டிய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆர்டரை அனுப்பி முடிப்பதற்கு தேவையான கால அவகாசம் இருக்கிறது என்றால், முன்பே கடன் விண்ணப்பிக்காததற்கு திருப்திகரமான காரணங்களும் இருக்குமானால் பழைய ஆர்டர்களுக்கு கடன் வழங்குவது பற்றி வங்கி பரிசீலனை செய்யும்.

6. ஏற்றுமதிக் கடனுக்கு எதாவது மானியம் உண்டா? உண்டு என்றால் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

அந்நிய வர்த்தக கொள்கைகளின்படி குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்களுக்கு அரசால் மானியமும் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஏற்றுமதி பொருள் மற்றும் ஊக்கத் தொகை வகைகளுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைபிடித்து பெற்றுக்கொள்ளலாம்.

7. நான் அமெரிக்காவுக்கு பன்னீரை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். பன்னீர் தயாரிக்க ஆலை நிறுவ கடன் கிடைக்குமா?

கிடங்கு, தொழிற்சாலை போன்றவற்றை அமைப்பதற்கு கடன் வாங்க முடியும். ஆனால் அது ஏற்றுமதி தொடர்பான கடனாக இல்லாமல் நீண்டகால அடிப்படையிலான சாதாரண கடனாக தான் கிடைக்கும்.

8. ஏற்றுமதிக்கான கடன்களை யார் எல்லாம் வழங்கி வருகிறார்கள்?


வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிகள் (Exim Bank of India) ஆகியவை வழங்கி வருகின்றன.

9. ஏற்றுமதிக் கடனை அதிகபட்சம் எவ்வளவு கால அவகாசங்களில் திரும்பக் கட்டலாம்?


ஏற்றுமதிக் கடன் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

ஏற்றுமதிக்கு முந்தைய கடன்(pre shipment), ஏற்றுமதிக்கு பிந்தைய கடன் (post shipment). இவற்றை திருப்பி கட்டுவதற்கான கால அவகாசம் உங்கள் வியாபாரத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
ஏற்றுமதிக்கு முந்தைய கடனுக்கான அதிகபட்ச அவகாசம் 12 மாதங்கள். ஏற்றுமதிக்குப் பிந்தைய கடனுக்கான அவகாசம் அதிகபட்சமாக 9 மாதங்கள்.

10. என் வயது 24. நான் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறேன். நான் இப்போது ஆலிவ் பழம் வாங்கி இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறேன். எனக்கு 10 லட்சம் ரூபாய் கடன் தேவை. யாரிடம் கடன் வாங்குவது?

நீங்கள் வழக்கமாக தொடர்பில் இருக்கும் வணிக வங்கிகளிடமே உங்கள் நிலைமையை சொல்லி கடன் கேட்கலாம். வங்கியிலிருந்து உதவி கிடைக்கும், ஒருவேளை உதவி கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சிறு தொழில் மேம்பாட்டு வங்கியை (SIDBI) தொடர்பு கொள்ளலாம்.

11. ஏற்றுமதிக்  கடன் வாங்குவது எப்படி? என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்?

உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கி கிளையை நாடுங்கள். அந்த வங்கிக் கிளை அந்நிய செலாவணி வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்ட கிளையாக இருந்தால் அவர்களே உங்களுக்கான கடனை வழங்குவார்கள். இல்லையென்றால் அந்த வங்கியின் அனுமதிக்கப்பட்ட வேறு கிளைகளுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்புவார்கள்.
ஏற்றுமதிக் கடனுக்காக வங்கியை அணுகும் போது நீங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

1. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக அலுவலகம் (DGFT) வழங்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதி எண் (Importer Exporter code).

2. கிடைத்த ஆர்டர் அல்லது பொருட்களை வாங்குபவரின் (இறக்குமதியாளர்) வங்கி அளித்த லெட்டர் ஆஃப் கிரெடிட்.

3. உங்கள் நிதி மற்றும் வங்கி விவரங்கள் (Balance Sheet for the past 3 years)மற்றும் பணிசார்ந்த அனுபவங்கள்.

4. உங்களுக்கு ஏற்றுமதி துறையில் உள்ள திறமை மற்றும் தகுதியை வெளிப்படுத்தும் விதமாக உள்ள ஆவணங்கள்.

5. நீங்கள் வாங்கப் போகும் கடனுக்கு, நீங்கள் பிணையமாக கொடுக்கப் போகும் சொத்துக்களின் விவரம்.


12. கஸ்டம்ஸ் க்ளியரிங் ஏஜென்ட் வேலையில் 8 வருட பணி அனுபவம் இருக்கிறது. சென்னையில் அலுவலகம் வைக்க இருக்கிறேன். இதற்கு கடன் வாங்க முடியுமா?


இது சேவை சார்ந்தவை என்பதால் ஏற்றுமதிக்  கடனின் கீழ் வராது. ஆனால் நீங்கள் வங்கியில் சாதாரணமாக கடனுக்கு விண்ணப்பிப்பது போல விண்ணப்பித்தாலே கடன் கிடைக்கும். எனவே குறிப்பிட்டு ஏற்றுமதிக் கடனின் கீழ் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

13. ஏற்றுமதிக் கடன் வழங்க என மத்திய அரசு சிறப்பு திட்டம் ஏதாவது வைத்திருக்கிறதா?

ஏற்றுமதிக் கடன் பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி எல்லா வங்கிகளிலும் அளிக்கப்படுகிறது. ஏற்றுமதிக் கடனுக்கான விதிமுறைகள் எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவையே. அந்நிய வர்த்தக கொள்கைகளின்படி மத்திய அரசு சில ஏற்றுமதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.

14. நான் என்ஆர்ஐ. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பாஸ்மதி அரிசியை வாங்கி நான் வசிக்கும் ஈரானில் விற்பனை செய்து வருகிறேன். சுருக்கமாக சொன்னால், என் குடும்பம் எனக்கு பாஸ்மதி அரிசியை அனுப்பும், அதை நானே ஈரானில் மொத்தமாக விற்பனை செய்கிறேன். இப்போது விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்தியாவில் ஏற்றுமதி செய்யும் என் மனைவிக்கு எப்படி கடன் வாங்குவது. என் மனைவிக்கு ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது?

நீங்கள் ஒரு நிறுவனமாகவோ அல்லது தனி நபராகவோ பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்வதாக எங்கும் குறிப்பிடவில்லை. நிறுவனமாகவோ அல்லது தனி நபராகவோ அரசால் அங்கீகரிக்கப்பட்டு, முறையாக அனுமதிகளை வாங்கி ஏற்றுமதி செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் இருக்கும் வங்கியை அணுகி, வங்கி கேட்கும் ஆவணங்களை எல்லாம் சரியாக சமர்ப்பித்து ஏற்றுமதிக்கான கடனை பெறலாம்.

 
15.நான் தேங்காயை ஏற்றுமதி செய்கிறேன். தேங்காய்களை பாதுகாப்பாக வைக்க ஒரு கிடங்கு அமைக்க ரூ. 35 லட்சம் தேவை.  சில வங்கிகளில் விண்ணப்பித்து கடன் கிடைக்கவில்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை? தயவு செய்து விளக்கவும்?


தேங்காயை சேமிக்க ஒரு கிடங்கை நிறுவுவது என்பது ஏற்றுமதி செயலில் வராது. எனவே ஏற்றுமதிக் கடனின் கீழ் இந்தக் கடன் வராது. ஆனால் சாதாரணமாகவே, நீங்கள் வங்கிக்கு விண்ணப்பித்து கடன் வாங்கலாம்.
உங்கள் விண்ணப்பம் சில முறை நிராகரிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள். வங்கி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். எனவே வங்கியாளரிடம் நிதானமாக என்ன தவறு என்று தெரிந்து கொண்டு சரியாக விண்ணப்பியுங்கள், நிச்சயம் வங்கியிலிருந்து உதவி கிடைக்கும்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ