Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி பணமாற்று சேவைகள்..!

- கே ஆர் வைகுண்டம், மதுரை .


சேமிப்பவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே பாலமாக அமைவது வங்கிகளின் தலையாய சேவை என்பதைப் பார்த்தோம். இதற்கடுத்தபடியாக பணமாற்றத்தை வங்கிகளின் முக்கிய சேவையாகச் சொல்லலாம்.

தனி நபர்களும் சரி, வர்த்தக அல்லது தொழில் நிறுவனங்களும் சரி, பணம் கொடுக்க, வாங்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பண மாற்றம் நடக்கும் வகைகள் இவ்வாறு:

1) ரொக்கமாக       

2) வங்கிக்குள் பணமாற்றம் (அக்கௌண்ட் டிரான்ஸ்ஃபர்)           

3) காசோலை மூலமாக

4) மின்னணு பணமாற்றம் (எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்)                                 

5) கார்டுகள் மூலமாக

பண நோட்டுக்கள் / நாணயங்கள்

பல தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்தாலும் பண நோட்டு உபயோகம் தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. அன்றாடச் செலவுகளுக்கு பல இடங்களில் நோட்டாகவோ நாணயமாகவோ தான் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது

பண நோட்டு அச்சடிக்கும் உரிமையை ரிசர்வ் வங்கி மட்டுமே பெற்றுள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ஏஜண்டுகளாக செயல்பட்டு தங்களுடைய கிளைகள் மற்றும் ஏ டி எம் கள் வாயிலாக பண நோட்டுகள் மற்றும் நாணையங்கள் மக்களைச் சென்றடையச் செய்கின்றன. மிகவும் சேதப்பட்ட நோட்டுகளை பொது மக்களிடமிருந்து மாற்றத்துக்கு ஏற்று புழக்கத்திலிருந்து நீக்கும் பணியையும் வங்கிகள் செய்கின்றன. தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கு உள்ள வங்கியின் ஏ டி எம் மட்டுமில்லாமல் வேறு எந்த வங்கியின் ஏ டி எம்மையும் பயன்படுத்தி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 

வங்கிக்குள் அக்கௌண்ட் டிரான்ஸ்ஃபர்

வங்கிக்குள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு பணம் டிரான்ஸ்ஃபர் செய்வது எளிது. பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய எல்லாக் கிளைகளையும் கணினி மயமாக்கி கோர் பேங்கிங் முறையில் இணைத்திருக்கின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒரு கிளையின் வாடிக்கையாளராக மட்டுமே இல்லாமல் வங்கியின் வாடிக்கையாளராகி விடுகிறார். ஒரே வங்கியின் எந்த கணக்கிலிருந்தும் எந்த கணக்குக்கும் நொடியில் பணமாற்றம் செய்ய முடியும். ஏ டி எம் கார்ட் ஆன் லைன் வசதி உள்ள வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகாமல் தாங்களே தங்கள் கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்குப் பணமாற்றம் செய்யலாம்.

நாட்டில் ஒரே ஒரு வங்கி இருந்தால் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் ஒரே வங்கியில் கணக்கு இருக்கும். டிரான்ஸ்ஃபர் முறையிலேயே எல்லாப் பணமாற்றங்களும் எளிதாக நடை பெற்று விடும். ஆனால் நாட்டில் பல வங்கிகள் இருப்பதை நாம் அறிவோம். நம் கணக்கு ஒரு வங்கியிலும் நாம் யாருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கிறோமோ அவருடைய கணக்கு இன்னொரு வங்கியிலும் இருந்தால் என்ன செய்வது?

இரண்டு வழிகள் வழக்கத்தில் உள்ளன. ஒன்று கிளியரிங்க் என்னும் காசோலை பரிமாற்றம். இன்னொன்று எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர் எனப்படும் மின்னணு பணப் பரிமாற்றம். டெபிட் கார்டுகளும், க்ரெடிட் கார்டுகளும் எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் வகையைச் சார்ந்தவையே. ஆனால் அவை பணமாற்றத்தில் ஒரு முக்கிய அங்கத்தை வகிப்பதால் அவற்றைத் தனியாகக் காணலாம்.  
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ