Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்லதே நினைப்போம்! சும்மா வருமா வேலை..? -16


           
நல்லதே நினைப்போம்!


பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


'நேர்மறைச் சிந்தனை!
துறை சார்ந்த புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
பணி அனுபவம் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெறலாம்..
இவ்வாறு நேர்மறைச் செயல்களில் ஈடுபடுவதால், நேர்மறைச் சிந்தனைகள் உண்டாகும்.
ஆனால்.....?

'இது என்னது...? பத்தாயிரம் போஸ்ட்ஸ் இருக்காம்... ஏற்கனவே.., பத்து லட்சம் பேரு அப்ளை பண்ணி இருக்காங்களாம்.
அதாவது, அப்ளை பண்ணவங்கள்ல, ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் பேருக்கு இந்த வேலை கிடைக்கப் போறது இல்லை... இந்த லட்சணத்துல, என்னை வேற அப்ளை பண்ணச் சொல்றே...?'

'இங்க பாருப்பா... இதெல்லாம் சும்மா... 'லக்கு' இருக்கறவங்க பாஸ் பண்ணுவாங்க.. நமக்கு அது இருந்தா
நாம ஏன் 'இப்பிடி' இருக்கப் போறோம்...?'

போட்டியில் எத்தனை பேர் பங்கு கொள்கிறார்கள்... என்று கணக்கு பார்த்து, தன்னை 'விடுவித்துக் கொள்கிற' நினைப்பு கொண்டவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும்,  அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப வெற்றி தோல்வி அமையும் என்பதை உணர்ந்து, ஆர்வத்துடன் போட்டியில் ஈடுபடுகிறவர்கள், தொடர்ந்து முன்னேறிய வண்ணம் இருக்கிறார்கள்.

கவனிக்க வேண்டிய அம்சம் - 'முன்னேறிய வண்ணம்' இருப்பது.
நூறு பேருக்கு மத்தியில் பத்தாவதாக வருகிறவர், அடுத்த முறை இன்னமும் கடினமான போட்டியில் எட்டாவதோ ஏழாவதோ வந்தால், முன்னேறி இருக்கிறார்தானே..? இதற்கும் அடுத்த முறை, ஐந்தாவதோ நான்காவதோ..... அடுத்ததில் மூன்றோ இரண்டோ.... இனி, முதல் இடத்துக்கான போட்டிதான்.

உலக சாம்பியன் தகுதியில் முதல் இடத்தில் இருக்கும் எல்லாருமே இப்படித்தான் படிப்படியாக முன்னேறி முதல் இடத்தை அடைந்து இருக்கிறார்கள். காரணம், எந்தவொரு துறையிலுமே இப்போதைக்கு யாரேனும் ஒருவர் முதல் நபராக இருக்கத்தான் செய்கிறார். அடுத்து அடுத்த நிலையிலும் யாரேனும் இருக்கத்தானே செய்வார்கள்..?
எடுத்த எடுப்பிலேயே எல்லாரையும் தள்ளி விட்டு, தன் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பது, யதார்த்தத்தில் சரியில்லை. அவ்வாறு நடப்பதும் இல்லை.

சிறிது சிறிதாகக் கற்றுத் தேர்ந்து, மேலும் மேலும் உழைத்து உழைத்து, தன்னுடைய இலக்கை எட்டுவதுதான் எல்லாருக்குமான பொதுவானது.. இதை சரியாக உணர்ந்து கொள்ளுதலே, நேர்மறைச் சிந்தனையில் முதல் படி.

'நம்பிக்கை' பற்றிப் பேசினோமே.. அதுவேதான் நேர்மறைச் சிந்தனைக்கும். கற்பனையான, சினிமா தனமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு, ஏதோ ஒரு மயக்கத்தில் மிதப்பதை, நேர்மறைச் சிந்தனை என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளல். (self-deceit) இன்னும் ஒருபடி 'மேலே போனால்',
தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்ளல்.
 


போலி அறிவுரைகள், 'வெற்றியாளன்' என்று தன்னைத் தானே பிரகடனப் படுத்திக் கொள்கிறவர்களின்,
சுய புராணங்கள், நம்முடைய குறிக்கோளுக்கு ஒத்து வராதவர்களின் 'கதைகள்'.. ஆகியன,
நம்மைத் 'தவறான நேர்மறைச் சிந்தனை' நோக்கி அழைத்து சென்று விடும்.
இது, எதிர்மறைச் சிந்தனையை விடவும் ஆபத்தானது.

தான் படித்து, நல்ல வேலைக்குப் போய், தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய நிலையில் இருக்கிற ஒருவருக்கு, சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்ற ஒருவரின் அனுபவங்கள், எந்த விதத்தில் அறிவுபூர்வமான வழிகாட்டியாக இருக்க முடியும்...?

வேறு விதமாகவும் பார்க்கலாம். கலைத் துறையில் பிரகாசிக்க நினைக்கிறவ்ர்களுக்கு, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவரின் அனுபவங்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்க முடியும்...? எங்கிருந்து வருகிற, எது போன்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.

'கட்டாயம் வெற்றி பெறுவேன்' என்று திடமாக நம்புகிற ஒரு தீவிரவாதியின் சிந்தனையும்,
'தங்கப் பதக்கம் வென்றே தெருவேன்' என்று சற்றும் தளராமல் நம்புகிற ஒரு கால் பந்தாட்ட வீரனின் சிந்தனையும், 'நேர்மறைச் சிந்தனை' என்கிற ஒரே புள்ளியில் எப்படி சங்கமிக்க முடியும்...?

நோக்கம் உயரியதாக பாராட்டக் கூடியதாக இருக்க வேண்டும். நேர்மறை என்பதற்கான அடிப்படை அதுதான்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகி, எல்லாரையும் 'ஆட்டி வைக்க' வேண்டும் என்பதற்கும், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து,
நல்லன செய்ய வேண்டும் என்பதற்கும், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறதா இல்லையா..?

ஐ.ஏ.எஸ். என்கிற இலக்கு ஒன்றுதான். நோக்கம் காரணமாக, முன்னது - எதிர்மறை; பின்னது - நேர்மறைச் சிந்தனை.

அடுத்தது, செயல் புரியத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை,
உந்துதலைத் தருவதாக இருந்தால் மட்டுமே அது நேர்மறைச் சிந்தனை. 'நடக்கும் போது நடக்கும்; யாராவது இதனை எடுத்துச் செய்யாமலா போவார்கள்..?' போன்ற கருத்துடன் கலந்து நிற்கிற எந்த உயரிய எண்ணமும் எதிர்மறைதான்.

'எத்தனை வண்டிகள் போகிற சாலை..? இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கிறதே...? இப்போதைக்கு, மண்ணைக் கொட்டி
நிரப்புவோம்' என்று உடனடியாகக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுகிறது ஒரு சிந்தனை; 'யாரு இந்த 'ஏரியா' கவுன்சிலர்..? அவருடைய ஃபோன் நம்பர் என்ன..? என்று தேடிப் பிடித்து புகார் தெரிவிப்பதுடன் தனது பங்கு முடிந்து விட்டது என்று மகிழ்ச்சி கொள்கிற எண்ணம் ஒன்று. (இதையே கூட எத்தனை பேர் செய்கிறார்கள்..?)

மேற்சொன்ன இரண்டு சிந்தனைகளையும் ஒப்பிட்டால், எது நேர்மறை என்பது சொல்லாமலே புரிகிறது. இல்லையா...?

நிறைவாக, செய்ய முடிவதாக இருக்க வேண்டும். (should be capable of being achieved) என் ஊரில் இருக்கிற அத்தனை இளைஞர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பணியில் அமர்த்த வேண்டும் என்று எண்ணுவதை விட, அத்தனை பேருக்கும், அயல் நாட்டுப் பணி பற்றி வகுப்பு எடுக்கப் போகிறேன் என்று எண்ணுவது, சாத்தியம் ஆகக் கூடிய சிந்தனை. அல்லவா...?

இப்படிப் பல்வேறு கூறுகள் கொண்ட நேர்மறைச் சிந்தனை, அப்படி ஒன்றும் அடிப்படைத் தேவையெல்லாம் இல்லை.

ஆச்சரியமாக இருக்கிறதா..? சரியான திசை நோக்கிய முயற்சி இருந்து, 'நேர்மறைச் சிந்தனை' இல்லாமல் போனாலும் தவறு ஒன்றும் இல்லை. மாறாக, சிந்தனை நேராக இருந்து, அதற்கு ஈடான முயற்சி இல்லாது போனால்...?

ஆக, தேவைப்படுவதெல்லாம் தீவிர முயற்சி. கூடவே, நல்ல சிந்தனையும் இருந்தால், மிக நல்லது.

சரி. இனி, அடுத்த கட்டத்துக்கு நகர்வோமா...?

வேலை தேட ஆரம்பிக்கும் போதே, அரசு வேலையா... தனியார் துறையா.. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா..
(பல பேர் இப்படித்தான். தவறு இல்லை.)  என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுதல் நல்லது.
அரசுப் பணிதானா...? மிக நல்லது.

நமக்கு ஏற்றபடி,
ஒரு நல்ல அரசுப் பணி கிடைக்க,
என்ன செய்ய வேண்டும்...?
எங்கிருந்து தொடங்கலாம்..?

- (வளரும்)




 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ