Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்டோபர் 13... ஆன்லைன் ஆஃபர் ... கவனிக்க 13 விஷயங்கள்!

இ-காமர்ஸ் நிறுவனங்கள் தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதத்தை குறிவைத்து ஆஃபர் தாக்குதல் நடத்துவது சென்ற ஆண்டு முதல் ட்ரெண்டாகியுள்ளது. சென்ற ஆண்டு ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆஃபர் களத்தில் குதித்தன. இந்த ஆண்டு ஸ்னாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய மூன்று நிறுவனங்களும் அக்டோபர் 13ம் தேதியை குறிவைத்து களமிறங்கியுள்ளன.

நாளை துவங்கவுள்ள ஆஃபர்களில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆன்லைனில் பொருளை வாங்குபவர்கள். சென்ற வருடம் ஃப்ளிப்கார்ட் ஆஃபரால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், பொருள் மாறி டெலிவரி ஆனது துவங்கி பணம் திரும்ப கிடைக்கவில்லை, சர்வர் வேலை செய்யவில்லை என பல புகார்கள் பதிவாகின.இந்த ஆண்டும் அது போல் நடக்காமல் இருக்க 13 விஷயங்கள் இதோ!

ஆன்லைன் ஆஃபர்கள் கவனிக்க வேண்டிய 13 விஷயங்கள்:

1.ஆஃபர்கள் ஆப்ஸில் மட்டுமே கிடைக்கும் என்று ஃப்ளிப்கார்ட்டும், இணையதளத்தில் வருவதற்கு 15 நிமிடம் முன்பே ஆப்ஸில் ஆஃபர் வந்துவிடும் என்று அமேசானும் கூறியுள்ளது.அதனால் ஆப்ஸில் பொருட்களை வாங்கும் போது இணைய வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் வாங்கும் பொருளின் விலை கடந்த மூன்று மாதங்களுக்குமுன் என்ன விலையில் இருந்துள்ளது என ஒப்பிட்டுப் பாருங்கள். இதே விலைதான் என்றால், இன்னமும் விலை குறையும். எனவே, அவசரப்பட்டு வாங்காமல் சற்று யோசித்துப் பிறகு வாங்கலாம்.

3. ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருளை இன்றைய ரீடெயில் விலையுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அதிலிருந்து விலை எவ்வளவு வேறுபட் டுள்ளது என்பதையும் பாருங்கள். நீங்கள் வாங்கும் பொருளுக்கு குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி கிடைத்தால், ஆன்லைனில் நீங்கள் அந்தப் பொருளை வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனெனில், தற்போது பண்டிகைக் காலம்  என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 - 25% தள்ளுபடி கிடைக்கும்.

4. ஆஃபரில் தருகிறார்கள் என்று தேவையில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படுவதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். நீங்கள் மொத்தமாக வாங்கிய பொருளில் சேமித்த பணத்தை அடுத்தப் பொருளை வாங்கி வீணடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. இந்த ஆஃபர் தினத்தில் சில பொருட்களைப் பற்றிய ரெவியூ படித்துவிட்டு, அது நன்றாக இருந்தால், உடனே அந்த பொருளை வாங்கிவிடுவது கூடாது. காரணம், அனைத்து விற்பனை யாளர்களும் தங்கள்  பொருளை ரெவியூ மூலம் பிரபலப்படுத்துவார்கள். அதனால் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் இந்தப் பொருளை வாங்கிய அனுபவம் பற்றி விசாரித்து வாங்குங்கள்.

6. ஒரு பொருளை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் சரியான தள்ளுபடி இருக்கும்போது அதே விலைக்கு அப்போதே வாங்கிவிடுங்கள். ஒருசில மணி நேரம் கழித்து வாங்கினால், அதன் விலை அதிகரித்துவிடும். காரணம், இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை விலையை மாற்றியமைக்கின்றன.

7.ஆன்லைன் டூல்களை பயன்படுத்துங்கள் ஒரு பொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக என்ன விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பதை அறிய உங்கள் கூகுள் க்ரோமில் BuyHatke எனும் இணைப்பு உள்ளது அதனை பயன்படுத்தி அதன் விலை ஏற்ற இறக்கத்தை பார்த்து கொள்ளுங்கள்.அதன் பின் பொருளின் ஆஃபர் விலையோடு ஒப்பிட்டு பார்த்து முடிவெடுங்கள்.

8.Makkhichoose என்ற இணைப்பை பயன்படுத்தி ஒரே தலத்தில் இருந்து அனைத்து இ-காமர்ஸ்தளங்களிலும் எவ்வளவு ரூபாய்க்கு ஒரு பொருள் விற்க்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பின் பொருளை வாங்குங்கள்.

9.ValueTag என்ற இணைப்பு உங்களுக்கு மிகக்குறைவான விலை எந்த இணையதளத்தில் இருக்கிறது என்பதை அறிய உதவுகிறது. இதன் மூலம் எளிதில் ஆஃபரில் பெஸ்ட் ஆஃபரை தேர்ந்தெடுக்கலாம்.

10.ஆப்ஸில் வாங்குகிறீர்கள் என்றால் ஆப்ஸ் முதலில் சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனத்தினுடையது தானா என உறுதி செய்யுங்கள் போலி ஆப்ஸ்கள் மூலம் செய்யும் பர்சேஸில் நீங்கள் பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. அதனால் ப்ளே ஸ்டோரில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து ஆப்ஸை டவுன்லோட் செய்யுங்கள்!

11.இணையதளங்களை பயன்படுத்தும் போது கூடிய மட்டும் உங்கள் வீட்டு அல்லது அலுவலகத்தில் உங்களுக்கான கணினியாக பார்த்து ஆஃபரில் பொருட்களை வாங்குங்கள். தனியார் ஃப்ரெளசிங் மையத்தில் பர்சேஸில் ஈடுபடாதீர்கள். ஏனேன்றால் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால் இதனை தவிர்ப்பதும் நல்லது.

12.ஆஃபர் தவிர சில வங்கி கார்டுகள் மூலம் பர்சேஸ் செய்தால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அது போன்ற வசதிகளை பயன்படுத்தி கூடிய மட்டும் பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

13.சென்ற வருடம் போல் கிரெடிட் / டெபிட் கார்டுகளில் கேன்சலான பொருளுக்கான பணம் திரும்ப வருவதில் சிக்கல் குழப்பம் நீடித்ததால் கூடிய மட்டும் கேஷ் ஆன் டெலிவரி ஆஃபரை பயன்படுத்துவது சிறந்தது.

எப்படியோ ஆஃபர் மூலம் சிறந்த பொருட்களை நாம் ஆர்டர் செய்தாலும் அது சரியாக நம்மை வந்தடைகிறதா? அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் சொதப்பல்கள் இந்த ஆண்டும் தொடருமா? இல்லை தங்களை இந்த ஆண்டு மேம்படுத்தி இருக்குமா இந்நிறுவனங்கள் என்பதை நாளை காலை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ச,ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ