Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக் கடன் கவனிக்க வேண்டிய 4 கட்டணங்கள்!

 
 
வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடன் மூலமாக  வாங்குகிறார்கள். தற்போது வீட்டுக் கட னுக்கான வட்டி விகிதம்  குறைந்துள்ளது. இதனால் புதிதாகக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டின் மதிப்பில் 80-90 சதவிகிதம் வரைதான் கடன் கிடைக்கும். மீதமுள்ள தொகையை கடன் வாங்குபவர் செலுத்த வேண்டும். 
 
 கடன் வாங்குபவர்கள் வட்டி விகிதம் குறித்துத்தான் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அவர்கள் பல கட்டணங்கள் செலுத்த வேண்டும். அது  என்னென்ன கட்டணங்கள் என்பதை பார்ப்போம். 
 
1. செயல்பாட்டுக் கட்டணம்! 
 
இந்தக் கட்டணம் கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே வாங்கப்படும். இந்தக் கட்டணமும் எந்தக் காரணத்துக்காகவும் திரும்பத் தரப்படமாட்டாது. சில வங்கிகள் இந்தக் கட்டணத்தைக் கடன் வழங்குவதற்கு முன் வாங்கி விடும். கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் சில நேரங்களில் சிறப்பு சலுகையாக சில வங்கிகள் இந்த கட்டணத்தை ரத்து செய்யும். எனவே அந்த சமயத்தில் கடன் வாங்கினால் உங்களுக்கு சில ஆயிரங்கள் மிச்சமாக வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கடன் தொகையில் 0.5 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக  இருக்கும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். 
 
2. சொத்து அடமான கட்டணம்! 
 
வங்கிக் கடன் மூலமாக வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கும் போது வீட்டின் பத்திரத்தை கடனுக்கு ஈடாக வங்கியின் பெயருக்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் அடமான பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அரசின் விதிமுறைகளின் படி குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படும். தமிழகத்தில் ஒரு சதவிகித தொகை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் செலுத்துக் கட்டணங்களில் அதிகத் தொகை கொண்ட கட்டணமாக இது இருக்கும். 
 
3. சட்டக் கருத்து  கட்டணம்! 
 
வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன் அந்தச் சொத்தில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு சட்ட ஆலோசகரை நியமித்திருக்கும். இதற்குக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணத்தைக் கடன் வாங்குபவர்தான் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்கு வங்கிகள் பிராஜெக்ட் கடன் வழங்கி இருக்கும் அது போன்ற வீடுகளுக்கு சட்டக் கட்டணம் இருக்காது. இது கட்டணம் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும்.  
 
4. முன்கூட்டி கட்டும் கடனுக்கு அபராதம்! 
 
குறிப்பிட்ட காலத்துக்குக் கடன் வாங்கி விட்டு அதனை  முன்கூடியே செலுத்தினால் அபராதம் கட்ட வேண்டி வரும். மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் அபராதம் கூடாது என ஆர்பிஐ கூறியுள்ளது. அதுவே நிலையான வட்டி விகிதத்தில் 10, 15 ஆண்டுகளுக்கு கடன் வாங்கியிருந்தால் அபராதம் இருக்கிறது. இந்த மீதமுள்ள கடன் தொகையில் 2 சதவிகிதம் அளவுக்கு அபராதம் இருக்கும். 
 
இரா.ரூபாவதி.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ