Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காசோலை பண பரிமாற்றம் - கிளியரிங்

- கே ஆர் வைகுண்டம், மதுரை - 625017

நாம் யாருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அவருக்கு காசோலை கொடுக்கலாம். காசோலை என்பது இன்னாருக்கு பணம் கொடுக்கவும் என்று நம் வங்கிக்கு நாம் கொடுக்கும் ஆணை. காசோலையை நம்மிடருந்து பெறும் நபருக்கு வேறு வங்கியில் கணக்கு இருக்கலாம். அவர் காசோலையை தன்னுடைய வங்கிக்கணக்கில் வைப்பு செய்ய ஒப்படைப்பார். அவ்வங்கி தன்னிடம் இவ்வாறு வரும் எல்லாக் காசோலைகளையும் சேர்த்து தினமும் ஒரு முறை அவ்வூரில் உள்ள கிளியரிங் ஹவுஸ் எனப்படும் காசோலை தீர்வகத்தில்/ காசோலை மாற்று மையத்தில் சேர்ப்பிக்கும்.

பெரு நகரங்களில் கிளியரிங் ஹவுஸை ரிசர்வ் வங்கி நடத்துகிறது. மற்ற இடங்களில் ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ஏஜண்டுகளாக கிளியரிங் ஹவுஸ் நடத்துகின்றன. ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனிடம் ஒப்படைக்கும் காசோலைகளின் தொகையை அவ்வங்கிக்கு, எந்த வங்கிகளின் வாடிக்கையாளார்கள் இந்தக் காசோலைகளைக் கொடுத்தார்களோ அந்த வங்கிகள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் இது போலவே மற்ற வங்கிகளிடமிருந்து பெற வேண்டியது கொடுக்க வேண்டியது இருக்கும்.

கொடுக்க வேண்டிய மொத்தத் தொகைக்கும் பெற வேண்டிய மொத்தத் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிந்து ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் வைத்திருக்கும் கணக்கில் வைக்கவோ எடுக்கவோ செய்யப்படுகிறது.

சுருங்கச் சொன்னால் கிளியா¢ங் என்பது ரிசர்வ் வங்கியில் ஒவ்வொரு வங்கியும் வைத்திருக்கும் கணக்குகளுக்குள் செய்யப்படும் பணமாற்றமே. ஒவ்வொரு காசோலையின் தொகையும் பணம் கொடுக்கவேண்டியவருடைய வங்கியின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு பணம் பெற வேண்டியவருடைய வங்கியின் கணக்கில் வைப்பு செய்யப்படுகிறது. வங்கிக்கு பணம் கிடைத்து விட்டால் வங்கி நம்முடைய கணக்கில் வைப்பு செய்கிறது. பணமாற்றம் முடிகிறது. எவ்விதமான பணமாற்றத்தை எடுத்துக் கொண்டாலும் இது ஒரு முக்கியமான அம்சம்.

அதாவது நமக்கு பணம் கிடைக்க வேண்டுமென்றால் நம்முடைய வங்கிக்குப் பணம் கிடைக்க வேண்டும். வங்கிக்குக் கிடைத்து விட்டால் நமக்குக் கிடைத்து விடுகிறது. 

காசோலை வேறு ஓர் ஊரில் உள்ள வங்கிக் கிளையின் மேல் இருந்தால் என்ன செய்வது? அண்மைக் காலம் வரை இவ்விதக் காசோலைகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அஞ்சல்/ கூரியர் அனுப்பப்பட்டு அந்த ஊரிலிருக்கும் கிளியரிங் ஹவுசில் சேர்க்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது ஸ்பீட் க்ளியரிங் என்னும் முறை வந்துள்ளது. இது பெயருக்கு ஏற்றாற் போல வேகமாக செயல்படுகிறது. கோர் பேங்கிங் முறையில் வங்கிகள் தங்களுடைய எல்லாக் கிளைகளையும் இணைத்திருப்பதைக் கண்டோம். வங்கியின் எந்தக் கிளையிலிருந்தும் வேறு எந்தக் கிளையைச் சேர்ந்த கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ வைக்கவோ செய்யலாம்.

இதனால் பெங்களுரு வாடிக்கையாளருக்கு டில்லியைச் சேர்ந்த காசோலை கிடைத்தால் அதை டில்லிக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த வங்கியின் பெங்களுரு கிளையே டில்லிக் கணக்கைப் பார்த்து பணம் எடுத்து பெங்களுரு கிளியரிங் ஹவுஸ் மூலமாக வாடிக்கையாளருடைய வங்கிக்கு அனுப்பி அந்த வங்கி தன் வாடிக்கையாளருடைய கணக்கில் வைப்பு செய்யும்.

பெரு நகரங்களில் நூறு வங்கிகள் இருக்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் நூற்றுக்கணக்கான கிளைகள் இருக்கலாம். காசோலைகளை வங்கி வாரியாக கிளை வாரியாகப் பிரிக்க வேண்டிய வேலையை வங்கி ஊழியர்கள் கைப்பட செய்ய வேண்டாம். காசோலைகளில் காந்த மை கொண்டு எந்த வங்கியைச் சார்ந்தது எந்தக் கிளையைச் சார்ந்தது போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்த மை 'எழுத்துக்களை' 'படித்து' வங்கி வாரியாக கிளை வாரியாக பிரிக்கும் திறன் கொண்ட கருவிகள் உள்ளன. இது எம் ஐ சி ஆர் முறை எனப்படுகிறது.

காசோலையை டிரங்கேஷன் செய்வது இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன முறை. ஸ்கேனிங் முறையில் காசோலையின் நகல் எடுக்கப்படுகிறது. இந்த நகல் கணினி பாதுகாப்பு முறையில் காசோலையின் விவரங்களை யாரும் மாற்ற முடியாதபடி அமைக்கப்படுகிறது. இந்த நகல் இந்த வங்கியிடமிருந்து தான் வந்தது என்று உறுதி அளிக்கும் வகையில் அந்த வங்கியின் வசத்தில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு 'கணினி கையெழுத்து' இடப்படுகிறது. இதன் பிறகு அசல் காசோலைக்குப் பதிலாக இந்த நகல் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. காசோலை மீது பணம் கொடுக்க வேண்டிய வங்கி இந்த உத்தரவாதமிட்ட நகலை சரி பார்த்தே காசோலைக்கு ஈடான தொகையை மாற்றம் செய்து விடுகிறது.

 காசோலைகளை ஒரீடத்திலிருந்து ஒரீடம் அனுப்ப வேண்டிய தேவையே இல்லை. வாடிக்கையாளர் கையெழுத்து உள்ள மூல ஆவணம் டிரங்கேஷன் செய்த வங்கியின் கைவசம் இருக்கும். தேவைப்பட்டால் இந்த அசல் காசோலையை ஆய்வுக்குக் கொணர வேண்டிய பொறுப்பு அவ்வங்கிக்கு உள்ளது. டிரங்கேஷன் முறை காசோலை மாற்றத்தை அதி விரைவு படுத்துகிறது.


நாம் யாரிடமிருந்து பொருள் வாங்குகிறோமோ அவர் நம்மை நன்கு அறிந்தவராக இருந்தால் பிரச்சினை இல்லை. நம்முடைய கணக்கிலிருந்து காசோலை கொடுத்தாலே ஒப்புக் கொள்வார். ஆனால் நம்மை முன் பின் அறியாதவர்களிடமிருந்தோ, அரசு நிறுவனங்களிடமிருந்தோ பொருளோ சேவையோ வாங்க வேண்டி இருந்தால் என்ன செய்வது? நம்முடைய காசோலையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

 ஒரு வேளை கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டால் என்ன செய்வது - பொருள் கை விட்டு போன பின்  ஆளை பிடிக்க முடியாமல் போய் விடுமே - என்ற நியாயமான ஐயம் இருக்கலாம். இத்தருணங்களில் வங்கியிடமிருந்து டிமாண்ட் ட்ராஃப்ட் எனப்படும் வங்கியே வழங்கும் வரைவோலையை வாங்கி அனுப்பலாம். நாம் வங்கிக்கு, பணம் அனுப்ப வேண்டியவருடைய பெயர், இருக்கும் ஊர், அனுப்ப வேண்டிய தொகை இவற்றைத் தெரிவித்து, நம்முடைய கணக்கிலிருந்து  இந்தத் தொகையையும் வங்கியின் பணமாற்றத்துக்கான கட்டணத்தையும் எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து விட்டால் வங்கி இவ்வித காசோலையை தயாரித்து நமக்குக் கொடுக்கும். இந்த காசோலை பணம் இல்லை என்ற காரணத்தால் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்று அனைவரும் அறிவர். ஆதலால் காசோலையை தயங்காமல் ஒப்புக் கொண்டு பணம் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யும் வரை காத்திருக்காமல் பொருளையோ சேவையையோ உடனே கொடுத்து விடுவர்.

டிமாண்ட் டிராஃப்ட்கள் வெளியூருக்குப் பணம் அனுப்பவதற்குப் பயன்படுகின்றன. உள்ளூரில் இதைப் போன்று நம்மை நம்ப முடியாதவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பொதுவாக பேங்கர்ஸ் செக் அல்லது பே ஆர்டர் எனப்படும் காசோலைகள் - கேட்புக் காசோலைகள் என்று சொல்லலாம் - இவை பயன்படுத்தப்படுகின்றன. இவையும் டிமாண்ட் டிராஃப்ட் போன்றவையே. ஆனால் வங்கியின் வேறோரு கிளையை பணம் கொடுக்குமாறான ஆணைக்குப் பதிலாக, எந்தக் கிளை இந்தக் காசோலையைத் தயாரித்ததோ அந்தக் கிளையிலேயே பணம் பெற வேண்டியவர் காசோலைக்கு ஈடான பணம் பெறலாம். 

நவீன எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் முறைகளைக் கீழே காணலாம். உடனுக்குடன் பணம் அனுப்பும் இம்முறைகள் வந்த பிறகு டிமாண்ட் டிராஃப்ட், பே ஆர்டர் போன்றவைகளின் உபயோகம் குறைந்து வருகிறது. எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் முறைகள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் ரிசர்வ் வங்கி இவற்றின் உபயோகத்தை ஊக்குவிக்கிறது. எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களுக்கான கட்டணங்கள் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இதனுடன் ஒப்பிடும்பொழுது டிமாண்ட் டிராஃப்ட் பே ஆர்டர் இவைகளுக்கான கட்டணம் மிக அதிகம். வாங்கிய பிறகு இந்தக் காசோலைகளை பணம் பெறுபவர்க்கு அனுப்ப கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. அவர் காசோலையை வைப்பு செய்ய தன்னுடைய வங்கிக்குச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் விவரம் தெரிந்தவர்கள் முடிந்த வரை எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களையே உபயோகிக்கின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close