Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17.இந்த வேலை போல வருமா...?

17. சும்மா வருமா வேலை..?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 

இந்த வேலை போல வருமா...?

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர், 'அரைக் காசு சம்பளம்னாலும், அரசாங்க சம்பளம் ஆச்சே...!' என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிந்தவர்கள் ஏராளம். இடையில், தனியார் துறையின் அபரிமிதமான வளர்ச்சி, குறிப்பாக, கணினித் துறையில் நம் நாடு கண்ட முன்னேற்றம் காரணமாக, அரசுப் பணிக்கான 'கவர்ச்சி' குறைந்து போனது.

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக, அனேகமாக உலக நாடுகள் அனைத்திலும் கடுமையான பொருளாதார நெருக்கடி. கிரீஸ் போன்ற பாரம்பரியம் மிக்க வளமையான ஐரோப்பிய நாடுகள் கூட, திவால் ஆகி விடுகிற அளவுக்கு எங்கு பார்த்தாலும் வீழ்ச்சி.

முதலீடுகள் வறண்டு போயின; உற்பத்திகள் சுருங்கிப் போயின; சந்தை நடவடிக்கைகள் தேக்கம் கண்டன; வேலை வாய்ப்புகள் அருகிப் போயின. 

உலகப் பொருளாதரம் சுணக்கம் காண்கிற பொழுது, இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்யும்...? மென்பொருள் துறையில் கை நிறைய, பை நிறைய கிடைத்த சம்பளம், குறைந்து விட்டது. வேலை வாய்ப்புகளும் முன்பு போல் இல்லை. என்ன செய்வது...? 'சரித்திரம் திரும்புகிறது'.

இன்று பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரிகள்! இன்ஷூரன்ஸ், பொதுத் துறை வங்கிகள் மற்றும் மத்திய மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன. ஆனாலும் இந்த எண்ணிக்கை போதாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு, பத்து லட்சம் பேர் விண்ணப்பித்து வருகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், பத்து லட்சம் என்பது மிகப் பெரிய எண்ணிக்கைதான். சந்தேகம் இல்லை. ஆனால்......

குரூப் 4 தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...? குறைந்த பட்ச கல்வித் தகுதி, அதிகபட்ச வயது வரம்பு என்ன...? பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும். சரி. ஒரு வேளை, ப்ளஸ் டூ அல்லது அதற்கு மேல் முடித்து இருந்தால்...? நல்லது. எஸ்.சி' எஸ்.டி. பி.சி. பிரிவினரைச் சேர்ந்த, +2 அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருந்தால், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது உச்ச வரம்பே கிடையாது. அதாவது 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இப்போது பார்ப்போம். தமிழ்நாடு முற்றிலும், ப்ளஸ் டூ அல்லது அதற்கு மேல் படித்த, 58 வயதுக்கு உட்பட்ட, நல்ல வேலையில் இல்லாத ஆண், பெண்கள் பத்து லட்சம் பேர் மட்டும்தான் இருப்பார்களா..? தோராயமான கணக்குப் படி, சுமார் இரண்டு கோடி வரை 'தேறுவார்கள்'. விண்ணப்பித்தவர்களோ, பத்து லட்சம் மட்டுமே. அவர்களிலும் பாதிப் பேர் மட்டுமே தேர்வு எழுதியவர்கள். ஏன் இத்தனை குறைவு...?

போட்டித் தேர்வுகள் பற்றி போதுமான அளவுக்கு விழிப்புணர்வு இல்லாமை; தேர்வாணையத்தின் நேர்மையான செயல்பாடுகள் குறித்து அறியாமை; தன்னாலும் தேர்வில் வெற்றி பெற்று பணி பெற முடியும் என்கிற நம்பிக்கை தோன்றாமை.... இவை மூன்றும் சேர்ந்ததனால் இந்த நிலைமை.

வாரம் தோறும் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' என்கிற வார இதழ், மத்திய அரசால் வெளியிடப் படுகிறது. அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள், போட்டித் தேர்வுகள் பற்றிய விவரங்கள் இந்தப் பத்திரிகையில் முழுதாக வெளியிடப்படுகின்றன. இப்படி ஒன்று வெளி வருகிற செய்தியே பலருக்குத் தெரியவில்லை.

இது தவிர, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் பற்றிய அறிவிக்கை, பிரபல நாளிதழ்களிலும் வெளியிடப் படுகின்றன. தேர்வுக் கட்டணமும் மிகக் குறைவு. என்ன ஒன்று... 'ஆன்-லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் கூட ஆன்-லைனில்தான் பெற முடியும்.

தேர்வு முடிந்த ஓரிரு நாட்களில், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் டி.என்.பி.எஸ்.சி. வெப்-சைட்டில் வெளியிடப்படுகின்றன. ஆகவே ஒவ்வொருவரும் தனக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதை, தனக்குத் தானே தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா முழுவதும், எல்லாப் போட்டித் தேர்வுகளும், சுயாட்சி பெற்ற தேர்வாணையங்கள் மூலமே நடக்கின்றன. தேர்வு நாள், தேர்வுக்கான பாடக் குறிப்பு, மாதிரி வினாத் தாள் என்று அத்தனையும் வெளிப்படையாக அறிவிக்கப் படுகின்றன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உட்பட அனைத்திலும் வெளிப்படைத் தன்மை. பல லட்சம் இளைஞர்கள், இந்த வழியில்தான் பணியில் சேர்ந்து வருகிறார்கள். மறந்து விட வேண்டாம்.

இணைப்புகள் தேவையற்ற, குறுகிய நீளமே கொண்ட, எளிதில் பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யத் தக்க  படிவங்கள்; நாடு முழுவதும் (டி.என்.பி.எஸ்.சி. எனில், மாநிலம் முழுதும்) பரவலாக மிகுந்த எண்ணிக்கையில் தேர்வு மையங்கள்; சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலனுக்காக, கட்டணச் சலுகை, தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், நேர்முகத் தேர்வுக்குச் சென்று வர பயணக் கட்டணம் மற்றும் சட்டப்படியான இட ஒதுக்கீட்டுப் பயன்கள்.....

கிராமம், நகரம், மாநகரம் என்கிற பாகுபாடு இல்லாமல், எல்லாப் பகுதிகளிலுமே, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போட்டித் தேர்வுகள் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனாலும்..., ஒரு மிக நல்ல செய்தி.


டி.என்.பி.எஸ்.சி. தொடங்கி, ஐ.ஏ.எஸ். தேர்வு என்று அறியப் படுகிற யூ.பி.எஸ்.சி.யின் குடியுரிமைப் பணிக்கான (சிவில் சர்வீசஸ்) தேர்வு வரை, அத்தனை போட்டித் தேர்வுகளிலும், கிராமப்புற இளைஞிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கின்றனர்; தேர்வு எழுதுகின்றனர்; தேர்ச்சி பெறுகின்றனர்; பணியிலும் சேர்ந்து வருகின்றனர்.

அரசுப் பணியில் சேர்வதற்கான முதல் படி - ஒன்று விடாமல் அத்தனை போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பது. நிறைவு நாள் வரை காத்து இருக்காமல், விளம்பரம் (அறிக்கை) வந்த உடனேயே விண்ணப்பத்தை சமர்ப்பித்து விடுவது நல்லது.

கல்விச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை (ஜெராக்ஸ் காபி) எப்போதும் தயாராக வைத்து இருக்கவும். பல தேர்வுகளுக்கு, விண்ணப்பத்துடன் இணைப்புகள் எதுவும் கேட்பது இல்லைதான். சில தேர்வுகள் / நிறுவனங்களில் கேட்கப்படலாம். அது போன்ற சமயங்களில், தயாராக இருக்கும் சான்றிதழ் நகல்கள், மிகவும் உதவிகரமாக இருக்கும். 

ஆக, இனிமேல் நாம் தவறாமல் அத்தனைப் போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க இருக்கிறோம். சரி. இந்தத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயார் ஆவது..? என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும்..?
 
பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்றுதான் கற்றுக் கொள்ள வேண்டுமா..? எத்தனை காலத்துக்குச் செல்ல வேண்டும்...? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்..? அல்லது, நாமாக வீட்டில் இருந்தபடியே தயார் ஆக முடியுமா...?

- வளரும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ