Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற சுழற்சியில் பங்குச் சந்தை முதலீடு...!

 ஏற்ற சுழற்சியில் பங்குச் சந்தை முதலீடு...!

நாணயம் விகடன் மற்றும் இன்டெக்ரேடெட் நிறுவனம்,என்எஸ்இ பங்குச் சந்தை, என்எஸ்டிஎல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மற்றும் கோவையில் " செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலோகேஷன்" என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உ ணர்வுக் கூட்டங்களை நடத்தின.
 
முதலில் பேசத் தொடங்கி இன்டெக்ரேடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஶ்ரீராம் வைத்தியநாதன் "அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது பணவீக்கம்தான், எனவே நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் போது பணவீக்கத்தை விட கூடுதலாக கிடைக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்" என்றார்.
 
அவரைத் தொடர்ந்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் ஜி.மாறன் " அனைத்து வகையான முதலீடுகளுக்கும் ஒரு சுழற்சி உண்டு. அப்படி தங்கம், ரியல் எஸ்டேட் கடந்த சில வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்துவிட்டன. இவை இப்போது மந்த நிலையில் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஏற்ற, இறக்க சுழற்சி காலம் உண்டு. தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு இறக்க சுழற்சியில் உள்ளன. பங்குச் சந்தை ஏற்ற சுழற்சியில் இருக்கிறது. மேற்கூறிய அனைத்து முதலீடுகளிலும் முதலீடு செய்யுங்கள். ஆனால் சரியான விகிதங்களில், உங்களால் ரிஸ்க் தாங்கக் கூடிய அளவில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை நேரடி பங்கு முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் தாராளமாக நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ரிஸ்க்கை பரவலாக்கி  கொள்ளுங்கள்" என்றார்.
 
அடுத்து பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி "நல்ல அஸெட் அலோகேஷன் போர்ட்ஃபோலியோ மூலம்  பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை சுலபமாக பெற முடியும்.  தற்போதைய நிலையை புரிந்து கொண்டு, எதில் எல்லாம் முதலீடு செய்யலாம், எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். நல்ல வருமானம் கிடைக்கும் " என்று முடித்தார்.
 
நிதி ஆலோசகர் பத்மநாபன், "மியூச்சுவல் ஃபண்ட் என்பது மேல் தட்டு மக்களுக்குதான் என்பது முற்றிலும் தவறு. சாதாரண நடுத்தர வருமான பிரிவினர் கூட இதில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரிஸ்க் பரவலாக்கலைத் தருவதோடு, நிபுணத்துவத்தோடு பல தரப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் கண்காணிப்படுகிறது." என்றார்.
 
இன்டெக்ரேடெட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், "உங்கள் முதலீடுகளை சொத்துக்களாக வளர்த்தெடுக்கும் வல்லமை மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபிக்களுக்கு உண்டு. பிள்ளைகளின் கல்யாணம், மேற்படிப்பு போன்ற தேவைகளை நிவேற்ற குறைந்தபட்சம் 10 வருடங்களுக்காவது  எஸ்ஐபி முதலீட்டை தொடர்ந்து செய்யுங்கள். " என்று கூறினார்.
 
ஐஇபி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் குருராஜன் இன்ஷூரன்ஸை பற்றியும், என்எஸ்டிஎல் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் ஆரோக்கியராஜ் டீமேட் கணக்குகள் பற்றியும்  விளக்கினார்கள்.
 
இறுதியாக, முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள்  எடுத்துக்காட்டுகளுடன்  விடையளித்தனர்.
 
மு.சா.கெளதமன்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP