Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்கு வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

இன்று ( 22.10.2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் பங்கு வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ்  குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்  ரெஜி தாமஸ், துணைத் தலைவர், கார்வி ஸ்டாக் புரோக்கிங்


பங்கு வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ்  குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக



1. பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் என்றால் என்ன?


 டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது விலை மற்றும் வால்யூம் தரவுகளைப் பற்றி படிப்பது ஆகும்.(Study of Price and volume datas). இதன் அடிப்படையில் வருங்கால விலை மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நிர்ணயித்து பங்கு வர்த்தகம் மேற்கொள்ள  உதவுகிறது.

2. டெக்னிக்கல் அனாலிசிஸில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?


 இதில், விலை மாற்றங்கள் (தினசரி), வால்யூம் (ஒரு நாளுக்கு எத்தனை பங்குகள் வர்த்தகமாகிறது). இவை இரண்டையும் அதிகம் கவனிக்க வேண்டி இருக்கும்.

3. ஒரு பங்கின்  வாங்க வேண்டிய விலையை டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் சரியாக கண்டு பிடிக்க முடியுமா?


 டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது ஒரு பங்கின் விலை, ஒரு குறிப்பிட்ட விலைக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு  எப்போது வரும் என்று கணிப்பது தான். எனவே டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம்  பங்குகளின் விலையை  சரியாக கண்டு பிடிக்க முடியும்.


4. ஒரு நிறுவனப் பங்கு மீதான வர்த்தகம் மிக அதிகமாக வர்த்தகமாகிறது (வால்யூம் அதிகரிக்கிறது) என்றால் என்ன அர்த்தம்?


வால்யூம் அதிகரிக்கிறது என்று தெரிந்த பின் எதற்காக அதிகரிக்கிறது என்று பாருங்கள். சில சமயங்களில் பாசிட்டிவான செய்திகள் வெளியாகும் போதும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் போதும் அந்த நிறுவனப் பங்கின் விலை அதிகரிப்பதோடு, வால்யூமும் அதிகரிக்கும். இதுவே அந்த நிறுவனம் தொடர்பாக ஏதாவது நெகடிவ் செய்திகள் வந்தால் விலை குறைந்து வால்யூம் அதிகரிக்கும். எனவே, எதற்காக திடீரென வால்யூம் அதிகரிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

வால்யூம்கள் அதிகரிக்க முக்கிய இரண்டு காரணங்கள்


1. ஸ்பெகுலேட்டர்களின் ஆர்வம் அந்த பங்கின் மீது அதிகரிப்பது/குறைவது
2. அந்த நிறுவனம் தொடர்பாக வெளியாகும் டேட்டாக்கள் (காலாண்டு முடிவுகள், ஆண்டு முடிவுகள், புதிய கான்ட்ராக்ட்கள்...)

5. ஒரு பங்கின் டிரெண்டை டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் எப்படி கணிப்பது?  கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?


 ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை அதிகரிக்கும் போது, அதன் வால்யூமும் வழக்கத்தை விட கூடுதலாக இருந்தால், அந்த பங்கின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். அதாவது அந்த பங்கின் மீதான ஆர்வம் சந்தையில் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.
இதுவே ஒரு நிறுவனத்தின் விலை குறைந்து வால்யூம் அதிகரிக்கிறது என்றால் அந்த பங்கின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது, அதாவது விலை இன்னும் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம். இந்த சந்தை நடவடிக்கைகள் மூலம் பங்குகளின் டிரெண்டை கணிக்கலாம்.

6. ஒரு பங்கின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் நிலையை எப்படி கணிப்பது? அதற்கு எதாவது  ஃபார்முலா இருக்கிறதா?


 ஒரு நிறுவனத்தின் பங்கின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸை கணிக்க எந்த ஃபார்முலாவும் கிடையாது. ஆனால் பொதுவாக சந்தையில் நடக்கும் சில சம்பவங்களை வைத்து சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸை கணிக்கலாம்.
உதாரணமாக : ஒரு பந்து ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து கீழே விழும் போது தரையில் பட்டு மீண்டும் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு போகும். அப்படி போகும் போது மேலே ஒரு சீலிங் இருக்கிறது என்றால் அந்த சீலிங்கை தாண்டி உயர செல்ல இயலாது. அதே போல் தான் சீலிங்கில் மோதிய வேகத்தில் (விசை) மீண்டும் தரைக்கு வந்து மோதும். இந்த உதாரணத்தில் சீலிங் தான் ரெசிஸ்டன்ஸ், தரை தான் சப்போர்ட். பந்தின் வேகத்தை கூட்டுவதும் குறைப்பதும்  ஸ்பெகுலேட்டர்களின் ஆர்வம் அந்த பங்கின் மீது அதிகரிப்பது / குறைவது மற்றும் அந்த நிறுவனம் தொடர்பாக வெளியாகும் டேட்டாக்கள் (காலாண்டு முடிவுகள், ஆண்டு முடிவுகள், புதிய கான்ட்ராக்ட்கள்...)
இந்த உதாரணத்தில் பந்திற்கு பதிலாக ஒரு பங்கை வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நல்ல செய்திக்கு (ஒரு குறிப்பிட்ட விசை) குறிப்பிட்ட அளவுக்கு பங்கின் விலையை உயர்த்தும் வலிமை உண்டு, அந்த அளவுக்கு மேல் பங்கின் விலை, முதலில் வந்த அந்த நல்ல செய்தியால் அதிகரிக்காது. அதே போல் தான் கெட்ட செய்திகளும். இதை வைத்து ஒரு பங்கின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸை கணிக்கலாம்.
எந்த நல்ல செய்திக்கு எவ்வளவு விலை ஏறும் என்பது சந்தையின் போக்கு, வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நடவடிக்கைகளில் தான் இருக்கிறது. எனவே தொடர்ந்து சந்தையை கவனித்து வந்தால் அந்த அளவு உங்களுக்கு புரியும்.

7. சார்ட் பேட்டர்ன் (Chart pattern) என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? இந்த சார்ட் பேட்டனால் என்ன நன்மை?


டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது மனிதனின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் ஒரு அளவே.(Technical analysis is the measure of human phsycology, or human sentiments).
உதாரணமாக 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்த அசம்பாவிதத்திற்கும், இந்திய பங்குச் சந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது, நம் சந்தை சற்றே கடுமையாக இறக்கம் கண்டது, அதே போல் சமீபத்தில் சீனாவில் பிரச்னை என்பதற்கும் இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக இறக்கம் கண்டது.
இந்த இரண்டு சம்பவத்திற்கும் இந்திய சந்தைக்கும் தொடர்பு இல்லாத போது மீண்டும் மீண்டும் சந்தை இறக்கம் காண்கிறது என்றால், இதில் உள்ள மனித (முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்) குணாதிசயத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த குணாதிசயங்களை ஒரு படத்தில் பார்த்தால் இன்னும் நன்றாக புரியும் அல்லவா.
நம் குணாதிசயங்களை அப்படியே வெளிப்படுத்தும்  படம் தான் மேலே சொல்லப்பட்ட சார்ட்கள். இந்த சார்ட்டில் லைன் சார்ட் (line chart), பார் சார்ட் (bar chart), கேண்டில் ஸ்டிக் சார்ட் (Candle stick chart) என்று பல வகையான சார்ட்கள் இருக்கின்றன.  இந்த சார்ட்கள் எல்லாம் எந்த சமயத்தில் எப்படி சந்தை மாற்றமடைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். இந்த சந்தையின் நடத்தைகளை வைத்து வருங்கால மாற்றங்களை கணிக்கலாம்.

8. மூவிங் ஆவரேஜ் என்றால் என்ன?. இதை எப்படி கணிப்பது?


சந்தை நிறைவடையும் போது ஒரு குறிப்பிட்ட பங்கின் விலையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு எடுத்துக் கொண்டு, அத்தனை நாட்களால் வகுத்தால் அது தான் ஆவரேஜ் என்று சொல்லப்படும். இதே செயலை தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (10 நாட்கள், 50 நாட்கள், 100 நாட்கள், 200 நாட்கள்) எடுத்தால் அது தான் மூவிங் ஆவரேஜ்.

9. ஒரு பங்கு அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகிறது என்றால் அதை தைரியமாக வாங்கலாமா?


பங்குகளின் வால்யூமை மட்டும் வைத்து பங்குகளை வாங்கக் கூடாது. எதனால் குறிப்பிட்ட பங்குகளின் வால்யூம் அதிகரிக்கிறது என்பதை கவனித்து தெரிந்து கொண்டு வாங்கலாம். உதாரணமாக ஒரு பங்கின் விலை அதிகரிக்கத் தொடங்கி, அதோடு வால்யூமும் அதிகரிக்கிறது என்றால் வாங்கலாம். 

10. ஒரு பங்கின் விலை கடந்த காலங்களில் பெரிய இறக்கம் கண்டதில்லை. அப்படிப்பட்ட பங்குகளில் வர்த்தகம் செய்யலாமா?

இது போன்ற பங்குகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து பயனடையலாம். இப்படிப்பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு  உகந்தது அல்ல

11. பங்கு டெக்னிக்கல் அனாலிசிஸில் லைன் சார்ட்கள் (Line Charts), பார் சார்ட்கள் (Bar Charts) என்ன வித்தியாசம்?
 
ஒரு பங்கின் விலையை நான்காக எடுத்துக் கொள்ளலாம். 1. ஆரம்ப விலை (open) 2. நிறைவு விலை (close) 3. அதிகபட்ச விலை (high) 3. குறைந்தபட்ச விலை (low).
லைன் சார்ட்டில் இந்த நான்கு விலைகளில் எதாவது ஒன்றைத் தான் லைன் சார்ட்டில் குறிப்பிட முடியும். ஆனால் பார் சார்ட்டில் இந்த நான்கையுமே குறிப்பிட முடியும்.

12. டிரெண்ட் லைன் ஆங்கிள் எதற்கு பயன்படுகிறது?

டிரெண்ட் லைன் ஆங்கிள் எந்த கோணத்தை காட்டுகிறதோ அந்த கோணத்தில் சந்தை நகர்கிறது என்று கணிக்கலாம்.

பொதுவாக, 45 டிகிரி கோணத்தில் சந்தை ஏற்றமடைந்தால் அந்த ஏற்றம் நீண்ட நாட்களுக்கு சீராக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதே போல் தான் சந்தை இறக்கத்திலும். ஒருவேளை டிரெண்ட் லைன் ஆங்கிள் 45 டிகிரிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அப்போது சந்தையின் ஏற்றம் அல்லது இறக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று கணிக்க முடியாது.

 13. பங்கு வர்த்தகத்தில் ஸ்டாப் லாஸ் மிக முக்கியம் என்கிறார் என் நண்பர். அதை எப்படி நிர்ணயிப்பது?

ஒரு பங்கை வாங்க இருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு ஸ்டாப் லாஸ் வைக்க வேண்டும் அதற்கு பை சைட் ஸ்டாப் லாஸ் என்று பெயர். பொதுவாக பை சைட் ஸ்டாப் லாஸ் என்பது சப்போர்ட்டுக்கு சற்று குறைவாக இருக்க வேண்டும்.
அதே போல் ஒரு பங்கை விற்க இருக்கிறீர்கள் என்றால் அதற்கும் ஒரு ஸ்டாப் லாஸ் வைக்க வேண்டும். அதற்கு செல் சைட் ஸ்டாப் லாஸ் என்று பெயர். பொதுவாக செல் சைட் ஸ்டாப் லாஸ் ரெசிஸ்டன்ஸை விட சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ