Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாமும் வளர்ந்து நாடும் வளர.... ஏற்றம் தரும் ஏற்றுமதி!

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரது பொருளாதாரத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அந்நாட்டின் ஒவ்வொருவரது பொருளாதாரமும் ஏற்றம் பெற வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தோடு நாணயம் விகடனும், FIEO( Federation Of Indian Export organization) இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து ஏற்றுமதி தொழில் மூலம் எப்படி ஏற்றம் பெறுவது என்று அக்டோபர் 17-18 தேதிகளில் கோவையில் ஏற்றம் தரும் ஏற்றுமதி என்ற இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.


ஒரு நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அந்நாட்டிற்கான தேவைகளும் அதிகரிக்கும். அவர்களின் அவசியத்தை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான பொருளை ஏற்றுமதி செய்தால் தொழிலில் எப்போதுமே வெற்றிதான். ஆனால் அதற்கு ஏற்றுமதி தொழில் பற்றிய அடிப்படையும் அதற்கான தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை.


உலகளவில் ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள சீனாவை (12.57%) முந்தி இந்தியா வளர வேண்டுமென்றால் ஏற்றுமதி தொழில் முனைவோர்கள் அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி FIEO அமைப்பின் இணை துணை பொது இயக்குநர், திரு. உன்னி கிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.
"நம் நாட்டில் வியாபாரம் தொடங்கி ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன, அதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் ஆசிய நாடுகளில் 50%, வட அமெரிக்கவோடு 14% , ஐரோப்பாவோடு 18% வரை ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால் இனி, ஏற்றுமதி தொழில் இந்தியாவிற்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனால் நாம் அனைவரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முனைப்புடன் செயல் பட வேண்டும். நமது உற்பத்திப் பொருளை உலக தரத்தோடு வடிவமைக்க வேண்டும், உற்பத்தி செய்த பொருளை சிறந்த முறையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வியாபாரம் செய்ய வேண்டும்" என்று கூறினார்.


அடுத்ததாக பேசிய FIEO அமைப்பின் துணை இயக்குநர் செல்வ நாயகி கூறுகையில், ஒருவர் ஏற்றுமதி செய்யும் முன்பு அவர்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின் உற்பத்தி செய்த பொருளை வியாபாரம் செய்வதற்கு ஏற்ற  நாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் வழி வழியாக வரும் பொருள்களைவிட்டு புதிய முயற்சியில் புதிய வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். ஏற்றுமதி தொழில் முனைவோர்கள் அவர்கள் செய்வதறிந்து செயல்படுவது அவசியம் என்றார்.


பின்னர் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை விஷயத்திலிருந்து தொடங்கி பல விஷயங்களை வழக்கறிஞர் எஸ்.சிவராமன் பேசினார். ஏற்றுமதியின் தொழில் முறை குறித்தும், ஒரு நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படையையும், அதில் இருக்கும் சட்டத்திட்டங்களை விளக்கினார்.


அடுத்து பேசிய ஆர்.கதிரேசன் ,வணிக வரித்துறை ஓய்வதிகாரி அவர்கள், தமிழ்நாடு மதிப்பிற்கூட்டு வரி (TNVAT),மத்திய மதிப்பிற்கூட்டு வரி (CST)வாங்கும் முறை குறித்தும் ,அதை சமர்ப்பிக்கும் முறை குறித்தும் விளக்கினார்.


அவரைத் தொடர்ந்து, இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை மற்றும் நாம் அனுப்பும் பொருளுக்கான காப்பீடு போன்றவை குறித்து ECGCயின் ஓய்வு பெற்ற துணை பொது மேலாளர் ஆர்.சத்திய நாராயணன் பேசினார். "நாம் நுகர்வோரைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்வது அவசியம், சரியான காலத்தில் சரியான பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும், நாம் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் காப்பீடு செய்வது மிகவும் அவசியம்" என்றார். பின்னர் ஏற்றுமதியில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகள் பற்றியும், அதில் உள்ள சிக்கல்கள் (commercial risk, political risk) குறித்தும் விளக்கினார்.


பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதி தொழிலில் லாபம் கண்டு வரும், புளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன், ஏற்றுமதி தொழிலின் தன் சொந்த அனுபவங்களை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டு நம்பிக்கை அளித்தார்.


ஏற்றுமதி தொழில் செய்வதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான மற்றும் பாராட்டப்பட வேண்டிய தொழில் என்று கூறிய அவர், எந்த விதமான பொருள்களை எந்த காலத்தில எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அவற்றை ஏற்றுமதி செய்யும் முறைகள் என்ன, என்னென்ன கவனிக்க வேண்டும் போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் ஏற்றுமதி செய்யப்படும் பல பொருள்கள் பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் விளக்கினார்.


இரண்டாம் நாள் தொடர்ந்த பயிற்சி முகாமில் வழக்கறிஞர் சிவராமன், மற்றும் கமாலுதின் இருவரும் பல முக்கிய அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தனர். ஏற்றுமதிக்கு முன், ஏற்றுமதியின் போது, ஏற்றுமதிக்குப் பின் என நம்முடைய பொருட்களை எப்படி நாம் பார்த்துக்கொள்வது எப்படி ஆர்டரை டெலிவரி செய்து பணத்தை வாங்குவது போன்றவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.
"ஏற்றுமதிக்கு முன்னரே பாதி அல்லது முழுபணத்தையும் பெற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் ஏற்றுமதியில் பணத்தை ஏமாறாமல் இருக்க முடியும். இதை வான்வழியாக நடக்கும் ஏற்றுமதிகளில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்."


"இயந்திர பாகங்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள், நுகர்வோரிடமிருந்து 25% தொகையை தயாரிப்பிற்காக முதல் கட்டமாக பெற்றுக் கொள்ளலாம். பின் முழுமையான பொருளின் புகைப்படத்தை மின்அஞ்சல் மூலம் அனுப்பி மீண்டும் ஒரு 25% தொகையை பெறலாம். பின்பு நுகர்வோர் தரப்பிலிருந்து எவரேனும் வந்து பொருளை சோதனை செய்யச் சொல்லி மீத 50% தொகையையும் பெறலாம்."


அடுத்ததாக நீங்கள் பணம் பெறுதலில் தெரிந்து கொள்ள வேண்டியது,டெலிகிராபிக் டிரான்ஸ்பர்(telegraphic transfer). இப்படி ஒரு வார்த்தை உங்கள் நுகர்வோர் அனுப்பும் மின்அஞ்சலில் குறிப்பிட்டிருந்தால் அவரிடம் அவர் எப்போது அந்த தொகையை செலுத்துவார் என கேட்டுக் கொள்ளவேண்டும். அத்துடன் உங்கள் நிறுவனத்தின் பெயர்,முகவரி,உங்கள் வங்கி கணக்கு எண்,வங்கியின் பெயர்,வங்கியின் ஸ்விஸ் கோடு(swiss code)ஆகியவற்றை அனுப்பி அதில் பணத்தை செலுத்த வலியுறுத்தி மீண்டும் ஒரு மின்அஞ்சல் அனுப்ப வேண்டும்."


ஏற்றுமதிக்கான பொருட்களை கப்பலில் ஏற்றிய பின்,அதை சோதனை செய்யும் கப்பல் நிறுவனம். அதற்காக பில் ஆஃப் போர்டு என்னும் ஒரு சான்றிதல் அளிக்கும். இந்த சான்றிதலை நுகர்வோர் கப்பல் நிறுவனத்திடம் காண்பித்தால் மட்டுமே அவரால் அந்த பொருளை வெளியே எடுக்க முடியும். எனவே இந்த சான்றிதலை நுகர்வோரின் நாட்டிலுள்ள வங்கியிடம் ஒப்படைத்துவிடலாம். பின் இந்த தகவலை நுகர்வோரிடமும் தெரிவிக்க வேண்டும். பின் நுகர்வோர் அங்கு சென்று பணத்தை செலுத்தினால் மட்டுமே அவரால் அந்த சான்றிதலை பெற்று பொருளை எடுத்துச் செல்ல முடியும். இதை டாக்குமெண்ட் அகேயின்ஸ்ட் பேமெண்ட் என்பர்.
வாடிக்கையாளர் நம்பகமுடையவராக இருக்கும் பட்சத்தில் அவர் பணம் செலுத்த கால அவகாசம் கேட்டால் அதை வங்கி நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் அவரிடம் டாக்குமெண்ட் அகேயின்ஸ்ட் அக்சேப்டென்ஸ் என்னும் விதி முறையின் கீழ் கையெழுத்து வாங்கி பில் ஆஃப் லேடிங்கை ஒப்படைப்பார்கள்.


ஏற்றுமதியில் ஈடுபடும் போது நீங்கள் முதலில் கவனமாக தேர்வு செய்ய வேண்டியது உற்பத்திக்கான மூலப்பொருள் விலைகுறைவாகவும் அதே சமயம் தரம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அவற்றை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் அவற்றில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். ப்ராண்டட் பொருட்களை தாராளமாக ஏற்றுமதி செய்யலாம் ஆனால் அதை விநியோகம் செய்ய தகுந்த விநியோகிஸ்தரை கண்டறிதல் அவசியம்.


"நீங்கள் ஏற்றுமதி செய்யும் நாட்டில்,பிரைவேட் லிமிடெட் என்பதற்கு இணையாக பயன்படுத்தப்படும் வார்த்தையை அறிந்து கொள்தல் அவசியம்.அதே போல் அவர்கள் நாட்டு ரூபாயின் மதிப்பையும் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் எந்த நாட்டில் என்ன வகையான பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டவை என்றும். எல்லா நாடுகளுக்கும் என்னென்ன சான்றிதழ்கள் அவசியம் எனவும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று படிப்படியாக ஏற்றுமதி தொழில் குறித்து பயிற்சி அளித்தனர்.


மொத்தத்தில், ஏற்றுமதி பற்றி முற்றிலும் ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கூட புரியும் வகையில், எளிமையாகவும் சிறப்பாகவும் இந்தப் பயிற்சி அமைந்தது. "ஏற்றுமதி தொழிலை மேற்கொள்வதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கியிருப்பதுதான் இந்த பயிற்சி வகுப்பின் சிறப்பு. இந்த வகுப்புக்கு ஏற்பாடு செய்து ஊக்கமளித்த நாணயம் விகடனுக்கு நன்றி” என்று பங்கேற்பாளர்கள் மனதாரப் பாராட்டிச் சென்றனர்.


தொகுப்பு: சா.கவியரசன், அனுஷியா பாண்டியன் - படங்கள்: க.சத்தியமூர்த்தி
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ