Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி

பண்டிகைகளையொட்டி அக்ரி கமாடிட்டி பொருட்களின் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. இந்த வாரம் சென்னா விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

சென்னா (chana):


கடந்த மாதத்தில் சென்னாவின் விலை 20 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகி வந்தது. இதற்கு காரணம் சென்னா அதிகம் விளையும் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததும், வரத்து குறைந்ததும்தான். மேலும் ஆயுதபூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் சென்னாவுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. அரசு தரப்பிலும் சென்னா உற்பத்தி இந்த நிதி ஆண்டில் குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் சென்னா உற்பத்தி 5.63 மில்லியன் டன்னாகக் கணிக்கப்பட்டது. ஆனால் 2015-16 நிதி ஆண்டில் 5.56 மில்லியன் டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால்தான் கடந்த மாதத்தில் சென்னா விலை உயர்ந்து வர்த்தகமானது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக சென்னா விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 

இதற்கு முக்கிய காரணம், பயிறுகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்தான். பருப்பு வகைகள், சென்னா உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே இருந்தது. இதனால் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடிவெடுத்த அரசு, வர்த்தகர்கள், வியாபாரிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் என அனைவரின் இடத்திலும் சோதனை நடத்தி பதுக்கப்பட்டிருந்த பெருமளவு பருப்பு பொருட்களை வெளிக்கொண்டு வந்தது. மேலும் பயிறு வகைகளின் இறக்குமதி வரியைக் குறைத்து அதிகளவில் இறக்குமதியும் செய்தது. அதே நேரத்தில் விலையைக் கட்டுக்குள் வைக்க ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தியது. மேலும் கிடங்குகள் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் கிடங்குகளில் வைக்கப்படும் இருப்பின் அளவையும் குறைத்துள்ளது. இந்தக் காரணங்களால் இனி வரும் நாட்களிலும் சென்னா விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

மஞ்சள் (Turmetric):


பண்டிகைக் காலம் என்பதால் பெரும்பாலான பொருட்கள் விலை உயர்ந்தே வர்த்தகமானது. முன்னணி வர்த்தக பொருளாக உள்ள மஞ்சளும் கடந்த வாரத்தில் விலை உயர்ந்து வர்த்தகமானது. ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளையொட்டி மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது, விற்பனை அளவிலும் விலை அளவிலும் மஞ்சள் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைந்தது. அதே சமயம் ஏற்றுமதிக்கான தேவை குறைந்து காணப்பட்டதால் மஞ்சள் விலை உயர்வு கட்டுக்குள் இருந்தது. மஞ்சள் ஏற்றுமதி 8.5% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அதிகம் விளையும் சங்க்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் விளைச்சல் நன்றாக இருந்ததாலும், மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானதாலும் சந்தைக்கு வாராவாரம் வரும் வரத்து அதிகரித்தது. தெலங்கானாவில் மட்டும் மஞ்சள் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பண்டிகைகள், விழாக்களை ஒட்டி மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் விலை குறையும் வாய்ப்பு குறைவுதான். 

ஏலக்காய் (Cardamom):


முக்கிய ஸ்பாட் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், ஏலக்காய் உற்பத்தி வரும் பருவத்தில் அதிகரிக்கும் என்ற கணிப்பினாலும் கடந்த வாரம் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி வாராவாரம் முக்கியச் சந்தைகளுக்கு வரும் ஏலக்காய் வரத்து 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏலக்காய் அதிகம் விளையும் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவும் சாதகமான சூழலும் இருந்து வருகிறது. 
இந்த நிலையில் ஏற்கெனவே கிடங்கில் உள்ள பழைய இருப்பை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஏலக்காய் வியாபாரிகள் இருப்பதால் விலை குறைந்தது. இது ஏலக்காய் விவசாயிகளுக்கு கவலையளித்துள்ளது.

ஆனால் வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏலக்காய்க்கான தேவை அதிகரித்து வருவதாக தெரிகிறது. ஏனெனில் ஏலக்காய் ஏற்றுமதி முந்தைய வாரத்தைக் காட்டிலும் 82% அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 1,29,004 கிலோ ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வரும் பருவத்தில் ஏலக்காய் உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வரத்தும் அதிகரிக்கும். அதனால் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு குறைவுதான். ஏலக்காய்க்கான தேவை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டால் விலை உயர்ந்து வர்த்தகமாகலாம். 

-ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ