Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி : கார்ட் சேவைகள்


- கே ஆர் வைகுண்டம், மதுரை - 625017

 நாம் ஒரு பொருளைப் பார்த்து வாங்க நினைக்கிறோம். ஆனால் கடைக்காரருக்கு நம்மைத் தெரியாது. கடன் கொடுக்க மாட்டார். நம்முடைய காசோலையைக் கொடுத்தாலும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விடுமோ என்று அஞ்சுவார். எல்லாவற்றையும் வாங்கும் அளவுக்கு எல்லா சமயத்திலும் ரொக்கம் கைவசம் இருப்பதும் இயலாது. பாதுகாப்பு இல்லை. கணக்கிலிருந்து பணம் எடுத்து வெளியில் வைத்தால் வட்டி வரவு குறைந்து விடும். இத்தருணங்களில் கார்டுகள் கை கொடுக்கின்றன.

கடைக்காரருக்கு ஏ டி எம்மிலிருந்து பணம் எடுத்து வந்து ரொக்கமாகக் கொடுத்தாலும் சரி, நேரடியாக நம்முடைய கணக்கிலிருந்தே எடுத்து அவருக்கு கொடுக்க வேண்டுமானாலும் சரி கார்டுகள் தேவை. கார்டுகள் உபயோகித்துப் பணம் எடுக்கும் ஏ டி எம் கள் வங்கிகளுடையவை. கடைகளில் கார்டுகளைக் கையாளும் ஒரு கருவியைப் பார்க்கலாம். இந்தக் கருவி ஒரு வங்கியுடையது. ஏ டி எம்களும் சரி, கடைகளில் காணும் கருவிகளும் சரி, வங்கியின் கணினியுடன் தொலை பேசித் தொடர்பால் இணைக்கப்படிருக்கிறன.


கார்டுகளில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் இரண்டும் முக்கியமானவை. இவற்றின் உட்பிரிவுகளாக பலவகை கார்டுகள் உள்ளன.

டெபிட் கார்டில் நம்முடைய கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு அது உறுதி செய்யப்பட்ட பிறகே விற்பனை முடிவடைந்து நமக்குப் பொருள் கிடைக்கும். 

கிரெடிட் கார்டில் நம்முடைய வங்கி கடைக்காரருக்கு பணம் கொடுத்து விட்டு அந்தப் பணத்தை நம்மிடமிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெற்றுக் கொள்கிறது. அதாவது நமக்கு சிறிது காலத்திற்குக் கடன் கொடுக்கிறது.

ஆனால் பல விதமான கடைகள், சேவை நிறுவனங்கள் உள்ளன. அவர்களுடைய கணக்குகள் வெவ்வேறு வங்கிகளில் உள்ளன. நம்மில் பலரிடம் வெவ்வேறு வங்கிகளின் பற்பல கார்டுகள் உள்ளன. எந்தக் கார்டிலிருந்தும் எந்தக் கடைக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவை வரலாம். எந்த வங்கியின் ஏ டி எம் மிலிருந்தும் பணம் எடுக்க வேண்டி வரலாம். இப்படி பல்வேறு கார்டு வழங்கும் வங்கிகளையும் பல்வேறு கார்டுகளைக் கையாளும் கருவிகளை வழங்கிய வங்கிகளையும் இணைப்பது எப்படி? இந்த சேவையை சில பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இவற்றில் வீசா, மாஸ்டர் கார்ட் இவை இரண்டும் முக்கியமானவை. எந்த வங்கி வழங்கிய கார்டாக இருந்தாலும் சரி, வீசா /  மாஸ்டர் கார்ட் முத்திரை இருந்தால் கொடுத்த பொருளுக்கான பணம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை கடைகளுக்கு இந்நிறுவனங்கள் அளிக்கின்றன. இதனால் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கூட கடைகள் கார்ட் ஏற்றுக்கொண்டு விற்பனை செய்ய முடிகிறது.

டெபிட் கார்ட் உபயோகித்தால் நம்முடைய கணக்கிலிருந்து பணம் எடுத்த பிறகே நமக்குப் பொருள் கிடைக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடன் கிடையாது. கடன் வேண்டாதவர்கள் இதை உபயோகிப்பதையே விரும்புவார்கள். வங்கிகள் பலருக்கு கிரெடிட் கார்டுகள் கொடுக்காமல் நிராகரித்து விடுகின்றன. அவர்களும் டெபிட் கார்டையே உபயோகிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகளில் ஒரு மாதம் போல் கடன் கிடைக்கும். அதற்குப் பிறகும் கிடைக்கும். ஆனால் ஒரு குறைந்த பட்சத் தொகையையாவது மாதா மாதம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்ட் கடன்களில் வட்டி விகிதமும் மிக அதிகமாகவே இருக்கும். அதனால் கிரெடிட் கார்ட் கடனை வேறு எந்த உபாயமும் இல்லாத தருணங்களில் மட்டும் உபயோகிப்பது நல்லது.

கிரெடிட் கார்டுகளை உபயோகித்து ஏ டி எம் களில் பணம் எடுக்கலாம். ஆனால் வங்கிகளின் கட்டணம் மற்றும் உடனே அடைக்காவிட்டால் கட்ட வேண்டிய வட்டி இரண்டுமே மிக அதிகம். இதையும் தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை டெபிட் கார்டுகளை உபயோகித்தே ஏ டி எம் களிலிருந்து பணம் எடுக்க வேண்டும்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ