Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

18.மறுபடியும் ஒண்ணாங் கிளாஸ்!

 


மறுபடியும் ஒண்ணாங் கிளாஸ்!

 

  - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி        

'நீங்க சொன்னபடிக்கே.., போட்டித் தேர்வுக்கு அப்ளை பண்ணிட்டேன். இதுக்கு மேல, என்ன பண்ணனும்.. என்னென்ன புஸ்தகம் வாங்கணும்... எங்கே போய்ப் படிக்கணும்... எல்லாம் நீங்கதான் சொல்லணும்..'



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படி யாரையாவது கேட்டுத் தெரிஞ்சுக்கணும். நாம யாரை கேட்கறமோ, அவங்க இந்தப் போட்டித் தேர்வு எழுதி, பாஸ் பண்ணி, வேலைக்குப் போனவங்களா இருக்கணும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். சுத்தீ... பார்த்தீங்கனா.., இந்த மாதிரி 'ஆளுங்க' உங்க கண்ணுலபடுவாங்க. நம்ம சொந்தக்காரங்க, நம்ம கூடப் படிச்சவங்க, நம்ம தெருவுலயே பக்கத்துல, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்க.. யாரேனும் ஒருத்தர் நிச்சயமா இருப்பாரு.
அவர் கிட்ட கேளுங்க... சரியா வழி காட்டுவாரு. 

பொதுவா இவங்க எல்லாருமே சொல்லக் கூடிய விஷயங்கள்னு சிலது இருக்கு. அது என்னென்ன...?

தொடக்கம். எந்த ஒண்ணுக்குமே, ஆரம்பம்னு ஒண்ணு இருக்கணும்தானே..? அதே மாதிரி, போட்டித் தேர்வுக்குத் தயாரிக்கணும்னா, எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்..?

பாடப் புத்தகங்கள்ல இருந்துதான் தொடங்கணும்.
முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள எல்லாப் பாடங்களையும் முறையாக முழுமையாகப் படிக்க வேண்டும்.

''என்னது..? முதல் வகுப்பில் இருந்தா..? கிண்டல் பண்றீங்களா..? படிச்சு முடிச்சுட்டு, வேலைக்கு வழி கேட்டா,
மறுபடி ஒண்ணாங் கிளாஸ்ல இருந்து படிக்க சொல்றீங்க...?'

கொஞ்சம் பொறுங்க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அதாங்க டி.என்.பி.எஸ்.சி.யுடைய 'வெப்சைட்'ல போய்ப் பாருங்க. குறிப்பா, குரூப் 4 தேர்வுக்கு பாடத் திட்டம் குடுத்து இருக்காங்க. அதன் முடிவுல அதிகார பூர்வமா அறிவிச்சி இருக்காங்க. என்னவா..? 'தேர்வுக்கான கேள்விகள், பள்ளிப் பாடங்களில் இருந்து, நேரடியாகக் கேட்கப்படும்'.

இந்திய வரலாறா.. பூகோளமா.. அறிவியலா... இலக்கியமா.. இலக்கணமா.. எதுவா இருந்தாலும், அதுக்கான கேள்விகள்
எங்கிருந்து வரும்...? கற்பனையா, அல்லது தேர்வர்களுக்கு மனம் போன போக்குல கேள்வி கேட்க முடியுமா..?
ஏதேனும் ஒரு 'மூலம்' அதாவது 'சோர்ஸ்' இருக்கணும் இல்லையா..? அது எது..? அதுதான், பள்ளிப் பாடப் புத்தகங்கள்.

அப்படின்னா, கேள்விகள் எளிதா இருக்கணுமே..? ஆமாமாம். எளிதுதான்.
என்ன...? பதில்தான் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. ஏன் அப்படி..?

பள்ளியில படிக்கும் போது ('டிகிரி'யிலயும் அப்படித்தான்) பல பாடங்களை 'சாய்ஸ்'ல விட்டுருப்போம்.
இப்போ போட்டித் தேர்வுக்குப் போய் உட்கார்ந்தா, எதை யெல்லாம் 'சாய்ஸ்'ல விட்டமோ,
சரிய்ய்யா அதுல இருந்துதான் கேள்வி கேட்கறாங்க.
(அது எப்படி அவங்களுக்கு அவ்வளவு துல்லியமா தெரியுது...?)
அப்புறம் சரியான பதில் எப்படி ஞாபகத்துக்கு வரும்...?
(பதில் தெரியாதுங்கறதுதான் நெசம். மறந்து போச்சுன்னு சொல்றதெல்லாம் சும்மா.. ஒரு 'ஈகோ'தான்.)

பரிட்சையில சாய்ஸ்ல விடுறமே... அதுக்கு அப்புறம், அந்தப் பாடங்களை நம்ம 'லைஃப்'ல எப்பவாவது படிக்கிறோமா..?
படிக்கறதை விடுங்க. பாடப் புத்தகங்களை தொடவாவது செய்யறமா..? ஏழாவது போயிட்டமா..? ஆறாவது புஸ்தகத்தைப் பார்க்கறது கூடப் பாவம். பத்தாவது வந்துட்டா, ஒன்பதாம் வகுப்புப் புஸ்தகத்தை வீட்டுல வச்சிக்கி கிட்டு இருக்கறதே பெரிய குத்தம்.

இன்னைக்கு 'பெரிய கிளாஸ்', அடுத்த வருஷம் 'சின்ன கிளாஸ்' ஆயிடும். அதனால, முந்தைய வருஷ  பாடத்தை எடுத்துப் படிச்சா, நம்முடைய 'ஸ்டேடஸ்' போயிரும்! இதுல யாரும் விதி விலக்கு இல்லை. (பார்த்த படத்தை  திரும்பப் பார்க்கலாம். கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன கேள்வியையே, நடிகர் நடிகைகள் கிட்ட திரும்பத் திரும்பக்
கேட்டு 'ரசிக்கலாம்'. அதெல்லாம் தப்பு இல்லை.)

சரி...., அது ஏன் ஒண்ணாவதுல இருந்து படிக்கணும்னு சொல்றோம்..? (ஆறாம் வகுப்பில் இருந்து படித்தாலே போதும் என்பவர்களும் உண்டு.) ஒரு தொடர்ச்சி ('கன்டின்யுவிடி') வேணும் இல்லை..? அதுக்காக. அது மட்டும் இல்லை.

முதல் வகுப்புப் பாடத்துலயே கூட, நாம 'மறந்து போன', அதாவது, நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கலாம்.

அதை எல்லாம் விட்டுட்டு எப்படிப் படிக்க முடியும்..?

படிக்கும் போது, முதல் வகுப்பை முழுசா படிச்சு முடிச்சுட்டுத் தான், இரண்டாம் வகுப்புக்குப் போகணும்.
அப்புறம் மூணாவது... அப்புறமா நாலாவது. இப்படித்தான் படிக்கணும். இடையிடையே 'தாவக்' கூடாது.

நினைவில் வைத்துக் கொள்ள முடியாத விவரங்களை, குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் கணிதம், அறிவியல், பூகோளப் பாடங்கள், மறந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அவ்வப்போது
குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டால், ஒவ்வொரு முறையும் பாடப் புத்தகங்களைத் தேடிப் போக வேண்டாம்.

எந்தப் பாடத் திட்டத்தைப் பின்பற்றுவது..? சமச்சீர் கல்வியா..? அல்லது நாம் படித்த போது இருந்ததா..?
குழப்பத்துக்கு இடமே இல்லை. எதையும் படிக்கலாம். ஆனால் ஒன்று முதல் பத்து வரை ஒரே பாடத் திட்டத்தை
பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு திட்டத்தில் ஆறாம் வகுப்பில் வருகிற தகவல், மற்றதில் ஐந்தாவதில் அல்லது ஏழாவதில் இருக்கலாம்.
அது விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவே, ஒரே திட்டத்தையே படிக்க வேண்டும் என்கிறோம். மற்றபடி,
எந்தத் திட்டமாக இருந்தாலும், புவி ஈர்ப்பு விசையை நியூட்டன்தான் கண்டு பிடிப்பார்;
இந்தியாவுக்குச் சுதந்திரம் 1947இல் தான் கிடைக்கும்!

மொழிப் பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மிக முக்கியம். 
அதிலும் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தரப் பட்டு இருக்கும், நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, அருஞ்சொற்பொருள் மற்றும் மனப் பாடப் பகுதிகள் போட்டித் தேர்வுகளில் மிகுந்த பயன் அளிக்கக் கூடியன.
மதிப்பெண்களை அள்ளித் தருகிற இவற்றில் அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.

கணிதப் பாடங்களைப் பயிற்சி செய்தல் வேண்டும். வாய்ப்பாடு (அது என்ன 16 உடன் நிறுத்தி விடுவது?),
கணித சூத்திரங்கள், எளிய வழிமுறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில் போர்கள், ஆண்டுகள், உடன்படிக்கைகள்.. முக்கியம். (அதான் தெரியுமே...!)

அறிவியலில், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள், சமன்பாடுகள், வினைகள், விளைவுகள்.... புரிந்து படித்தல் வேண்டும்.
(பள்ளியில் படிக்கும் போதே 'புரிந்து கொள்ளுதல்'தான் பிரசினையே!)

'சிரமம்' பார்க்காது, படிக்க ஆரம்பித்து விட்டால், பழையன எல்லாம் நினைவுக்கு வந்து விடும்.  தேர்ச்சிக்கான வாய்ப்புகள், பிரகாசமாகி விடும்.

பூட்டிக் கிடக்கும் அரசுப் பணிக்கான கதவுகள் திறக்க வேண்டுமா..? அதற்கான திறவுகோல் (சாவி) பாடப் புத்தகங்களின் பக்கங்களில் ஒளிந்து கிடக்கிறது.
தேடி எடுங்கள்.

இதற்கு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன...?
சுவாரஸ்யமான ஒரு விஷயத்துக்கு பழகிக் கொள்வது.
அது என்ன...?

(வளரும்)



 



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ