Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்டு டெபாசிட் & கோல்டு பாண்ட் திட்டம்... முதலீட்டுக்கு ஏற்றதா?

ங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கும் விதமாக கோல்டு டெபாசிட் திட்டம் மற்றும் கோல்டு பாண்ட் திட்டத்தை 2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது மத்திய அரசாங்கம். இந்த திட்டங்களுக்கு ஒப்புதலை மத்திய அமைச்சரவை தற்போது அளித்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களில் முதலில் கோல்டு டெபாசிட் திட்டம் குறித்து பார்ப்போம். 

கோல்டு டெபாசிட் திட்டம்!

இந்தத் திட்டத்தில் கையில் வைத்திருக்கும் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வது. இந்த டெபாசிட்டுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் டெபாசிட் முதிர்வடையும்போது தங்கமாக அல்லது பணமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் குறித்த விரிவாக தெரிந்து கொள்ள:http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10690

கோல்டு பாண்ட் ஸ்கீம்!

இந்தத் திட்டத்தின்படி, முதலீட்டு நோக்கில் பிசிக்கலாக தங்கம் வாங்குபவர்கள் அதற்குப் பதிலாக கோல்டு பாண்டுகளை வாங்கும் விதமான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு 2015-16 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புக்கு கோல்டு பாண்டுகளை மத்திய அரசாங்கம் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்தின் மூலமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2015 செப்டம்பர் மாதத்துக்குள் 3.6 கோடி ரூபாய் திரட்டவும் இலக்கு வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை சில முக்கியத் திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதலீட்டு நோக்கில் காயின் மற்றும் பாராக வாங்கப்படும் தங்கத்துக்குப் பதிலாக, இந்த கோல்டு பாண்டுகளை முதலீட்டாளர்கள் வாங்கலாம். இப்படி வாங்கப்படும் பாண்டுகள் ஒரு வருடத்துக்கு 300 டன் தங்கத்துக்கு ஒப்பானதாக இருக்கும் என மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

எவ்வளவு லாபம்?

கோல்டு பாண்டின் மதிப்பு தங்கத்தின் விலையின் அடிப்படையில் இருக்கும். இந்த பாண்ட் முதிர்வு பெறும்போது அன்றைய தங்கத்தின் மதிப்புக்கு இணையான தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தேதியில் ஆர்பிஐ கூறும் ரூபாயின் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விலை நிர்ணயம்!

கோல்டு பாண்ட் முதிர்வு பெறும் தேதியில் என்சிடிஇஎக்ஸ், லண்டன் புல்லியன் மார்க்கெட்டில் கூறப்படும் விலை எடுத்துக் கொள்ளப்படும்.

வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனம், அஞ்சல் அலுவலகம் மூலமாக விற்பனை செய்யப்படும். இந்த கோல்டு பாண்டுகள் முதிர்வு பெறும்போது வாங்கிய இடத்திலேயே கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கோல்டு பாண்ட் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பாண்டுகளை விற்பனை செய்பவர்களுக்கு கமிஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

எந்த அளவுகளில்?

2, 5 மற்றும் 10 கிராம் மதிப்பிலான கோல்டு பாண்டுகள் கிடைக்கும்.

ஆவணங்கள்!

கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு கேஒய்சி விதிமுறைகள் பொருந்தும். முகவரி மற்றும் புகைப்படச் சான்று, பான் கார்டு, புகைப்படம் கொடுத்து கேஒய்சி விதிமுறைகளை முடித்த பின்புதான் பாண்டுகளை வாங்க முடியும். கோல்டு பாண்டுகள் ஆர்பிஐ-யின் மூலமாக விற்பனை செய்யப்படும். இந்த பாண்டுகளை இந்திய குடிமக்கள் மட்டும்தான் வாங்க முடியும். ஆனால், ஒரு நபர் அதிகபட்சமாக 500 கிராம் தங்கம் மட்டுமே வாங்க முடியும்.

முதிர்வுக் காலம்!

கோல்டு பாண்டுகளின் முதிர்வுக்காலம் குறைந்தபட்சம் 5 முதல் 7 வருடங்கள்  ஆகும். ஏனெனில், முதலீட்டாளர்கள் நடுத்தரக் காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக இந்தக் கால அளவு வைக்கப்பட்டுள்ளது.

அடமானம்!

பிசிக்கல் தங்கத்துக்குப் பதிலாக வாங்கப்படும் கோல்டு பாண்டுகளை அடமானம் வைக்க முடியும். தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறும்போது பின்பற்றப்படும் விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். தங்கத்தின் மதிப்பில் அடமானக் கடன் வழங்கப்படும்.

வரி!

பிசிக்கல் தங்கத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு உண்டான வரிகள் இதற்கும் பொருந்தும். நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டியிருக்கும்.

டீமேட் கணக்கும் நிர்வாகக் கட்டணமும்!

இந்தத் திட்டத்தில் கோல்டு பாண்டுகளை வாங்க டீமேட் கணக்கு அவசியம். டீமேட் கணக்கை பராமரிக்கக் கட்டணமும் கட்ட வேண்டும்.  

இந்தத் திட்டங்களுக்கு மக்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரா.ரூபாவதி

20 செப்டம்பர் 2015 இதழிலில் வெளியான கட்டுரை. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ