Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழுவாக இயங்குவோம்! வெற்றி பெறுவோம் !




இன்றைக்கு எந்த ஒரு வேலையையும் துல்லியமாக குறித்த நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்க குழுவாக இயங்க வேண்டியிருக்கிறது . அப்படி குழுவாக இயங்கும் போது விட்டுக்கொடுத்தல், குழுவைச் சேர்ந்த நபர்களுடன் இணக்கமாக இருத்தல் போன்ற சில பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. குழுவிலிருந்து பிரிந்து தன்னுடைய இஷ்டப்படி ஒருவர் செயல்பட ஆரம்பித்தாலே அங்கே இருக்கும் சமநிலை சிதைந்து போவதோடு குழுவிலிருக்கும் எல்லோரையுமே அது பாதிக்கும் என்பதை ஏழு நிமிடங்களே ஓடக்கூடிய 'பேலன்ஸ்' என்ற குறும்படம் நமக்கு உணர்த்துகிறது.

இந்தக் குறும்படத்தின் கதையைப் பார்ப்போம். விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு தளத்தின் நடுவே ஐந்து பேர் நிற்கிறார்கள். அதில் ஒருவர் கொஞ்சம் நகர்ந்தாலே எல்லோரும் கீழே விழுந்துவிடுவார்கள். அப்படி இப்படி என்று ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்த தளத்தில் ஒருவர் நகர அவரைப் பின் தொடர்ந்து இன்னொருவர் நகர மற்றவர்களும் அதற்கு தகுந்த மாதிரி நகர்ந்து அந்த தளம் கீழே விழாத மாதிரி பேலன்ஸ் செய்கிறார்கள்.


அவர்களுக்கு இசையை எழுப்புகின்ற ஒரு மரப்பெட்டி கிடைக்கிறது.


அந்தப் பெட்டியில் இருக்கும் இசையை எல்லோரும் கேட்டு மகிழ்ச்சி அடையும் போது அதில் ஒருவன் மட்டும் அதை தனக்கு உரியதாக மாற்ற ஆசைப்பட்டு அந்த பெட்டியின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அங்கே இருக்கும் சமநிலையை சிதைத்து விடுகிறான்.


மற்ற நான்கு பேரும் அந்த தளத்தின் சமநிலையை சரிசெய்ய முயற்சிக்கும் போது அவன் அவர்களை கீழே தள்ளிவிடுகிறான். இறுதியில் அந்த தளத்தின் ஒரு முனையில் பெட்டியும் எதிர்முனையில் அவனும் மட்டுமே எங்கும் நகர முடியாதபடி நிற்கிறார்கள் . அவன் கொஞ்சம் நகர்ந்தாலே பெட்டியும் அவனும் கீழே விழுந்துவிடுவார்கள் . அவன் கீழே விழாமல் இருக்க அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டியதுதான். அவன் ஆசைப்பட்ட அந்த இசைப் பெட்டி அருகில் இருந்தாலும், அதை தொடக்கூட முடியாத ஒரு நிலைக்கு அவன் தள்ளப்படுவதோடு குறும்படம் முடிகிறது.
 
ஐந்து பேரும் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்த போது யாருக்கும் பாதிப்பில்லாமல் நன்றாக சென்று கொண்டிருந்தது அவர்களின் பயணம். அதில் ஒருவன் விலகி தனக்கு இஷ்டப்படி நடக்க ஆரம்பிக்கும் போது அவனை மட்டுமில்லாமல் அந்தக் குழுவைச் சேர்ந்த எல்லோரையுமே அது பாதிக்கிறது. குழுவாக இயங்குவதின் அற்புதத்தை உணர்த்துகிறது இந்தக் குறும்படம்.

 


குழுவாக இயங்குவோம்! வெற்றி பெறுவோம். !

 த,சக்திவேல்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ