Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி

தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் உள்ள நிலையிலும் அக்ரி கமாடிட்டிகளின் வர்த்தகம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இந்த வாரம் ஏலக்காய் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

ஏலக்காய் (Cardamom)


கடந்த வாரத்தில் ஏலக்காய் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் விளைச்சலுக்கு சாதகமான சூழல் நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது. இந்த ஆண்டு ஏலக்காய் விளைச்சல் 20லிருந்து 22 மில்லியன் டன் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் பண்டிகைகள் வருகையை ஒட்டி ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை தலைகீழாக இருந்தது. வழக்கமாக தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளையொட்டி வட இந்தியாவிலிருந்து ஏலக்காய்க்கான ஆர்டர்கள் நிறைய வரும். ஆனால் இந்த ஆண்டு ஆர்டர்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இந்தக் காரணங்களால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது.


கடந்த புதன் கிழமை ஏல நிலவரப்படி ஏலக்காய் கிலோ ரூபாய் 589 லிருந்து 876 வரை என்ற அளவில் 36 டன் ஏலக்காய் மட்டுமே வர்த்தகமாகியுள்ளது. ஏலக்காய்க்கான நவம்பர் மாத ஃப்யூச்சர்ஸ் ரூ. 730 லிருந்து ரூ. 850 வரை என்ற அளவில் உள்ளது.


மேலும் உலகில் அதிகளவில் ஏலக்காய் விளையும் கவுதமாலாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏலக்காய் உற்பத்தி 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இந்திய ஏலக்காய்களுக்கான ஆர்டர்கள் பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

  

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

ஜீரகம் (Jeera)


ஏலக்காயைப் போலவே ஜீரகமும் வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், தேவை குறைந்ததாலும் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும் ஜீரகம் அதிகம் விளைவிக்கும் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் ஜீரக அறுவடை செய்வதற்கு 15-20 நாட்கள் தாமதமானது. இதனால் ஜீரகம் விளைவிக்கும் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த ஆண்டிற்கான ஜீரக விளைச்சல் 599000 டன்னாக இருக்குமென்று அரசு விவசாயத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 ஆண்டில் 514000 டன் ஜீரகம் உற்பத்தியானது. நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி ஜீரக ஏற்றுமதியும் ஏப்ரல் -ஜூன் மாதங்களில் 45% குறைந்து 27000 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 49000 டன் ஜீரகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக ஜீரகம் இருக்கும்போதிலும் வெளிநாடுகளில் ஜீரகத்திற்கான தேவை தற்போது குறையத் தொடங்கியுள்ளதாலும், விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகரிப்பதால் உள்நாட்டு தேவையை மிஞ்சிய இருப்பு கிடங்குகளில் இருக்கும் என்பதாலும் வரும் நாட்களில் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


கொத்துமல்லி (Coriander)


முக்கியச் சந்தைகளில் கொத்துமல்லி ஏற்கனவே போதுமான இருப்பு இருப்பதாலும், மேலும் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பதாலும் கடந்த வாரத்தில் விலை குறைந்தே வர்த்தகமானது.
கொத்துமல்லி அதிகம் விளைவிக்கும் மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் விளைச்சல் ஏரியா அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொத்துமல்லி இறக்குமதியும் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் பல்கேரியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து 2000 டன் கொத்துமல்லி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.


கிடங்குகளில் தற்போது டெலிவரி செய்யப்படும் விலை நிலவரப்படி 100 கிலோ கொத்துமல்லி, 5200 ரூபாய் முதல் 5300 ரூபாய் வரை உள்ளது. 2014-15 ஆண்டில் இந்தியாவின் மொத்த கொத்துமல்லி உற்பத்தி கணிக்கப்பட்ட 314000 டன் என்ற அளவை விட அதிகரித்து 344000 டன்னாக உள்ளது.


இந்த நிலையில் ஏற்கனவே கிடங்கில் இருப்பில் உள்ள கொத்துமல்லி தரம் குறைந்து வருவதால் விலையைக் குறைப்பதை விட கிடங்குகளுக்கு வேறு வழியில்லாமல் உள்ளது. இந்தக் காரணங்களில் வரும் வாரத்திலும் கொத்துமல்லி விலை குறைந்தே வர்த்தகமாகும்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ