Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19.கண்ணுல பட்டா போதும்!

 கண்ணுல பட்டா போதும்!
          
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்திபோட்டித் தேர்வு. இந்தப் பேரைக் கேட்டாலே சில பேருக்கு அலர்ஜியா இருக்கு.

வேற ஒண்ணும் இல்லை. 'கணக்கு, அறிவியல், பூகோளம்... இதுல எல்லாம் இருந்து கேள்வி கேட்கறாங்க.
இதெல்லாம் படிக்கற வயசா இது...?'

வெட்டியா ஊர் சுத்தவும் மணிக் கணக்குல அரட்டை அடிக்கவும்தான் இளமை என்கிற தவறான எண்ணத்தில் இருந்து வெளி வர வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், பல்கலைக்கழகத் தேர்வு எழுதி, கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்கிறவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

படிப்பு மீது எப்படி வெறுப்பு வரலாம்..? நாள்தோறும் சிறிது நேரமாவது படிப்புக்கென்று ஒதுக்காமல், செய்தித் தாளோ
புத்தகமோ படிக்காமல், எப்படி ஒரு நாளை செலவழிக்க முடியும்...?

வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே போதுமா...? படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பணிச் சந்தையில் (job market)
'மதிப்பு' இருக்கும். இல்லையேல் 'காணாமல் போய் விடுவோம்'.

எல்லாம் சரி. ஆனால் படிக்கிற நாள்லயே படிச்சது இல்லை. இப்போ போய் படிக்கச் சொன்னால் எப்படி...?
அதுவும் அறிவியல், பூகோளம்... இதெல்லாம் நடக்கிற காரியமா..?

சரி. ஒரு மிக எளிய வழி சொல்லவா...?
வீட்டுல தினசரி, மாத காலண்டர் இருக்குதானே...? நமக்குப் பிடிச்ச ஸ்போர்ட்ஸ்மேன், நடிகர், நடிகை படமெல்லாம்
தொங்க விடுறோம் இல்லை...? அதேமாதிரி, தமிழ்நாடு மேப், இந்தியா மேப், உலக மேப்... மூணையும் வாங்கி, நம்ம
கண்ணுல படற மாதிரி (வேற எங்கே...? டி.வி.க்கு மேலதான்!) மாட்டி விட்டுருவோம்.

சும்மா கண்ணுல பட்டுக் கிட்டு இருந்தாலே கூடப் போதும்.

எந்தப் போட்டித் தேர்விலும், மொத்தம் நூறு கேள்விகள் என்றால், சுமார் எட்டு கேள்விகள் வரை, பூகோளத்தில்
இருந்து வரும். இவற்றில் 4 அல்லது 5 கேள்விகள், வரைபடம் அதாவது மேப் அடிப்படையாகக் கொண்டவை.

உதாரணத்துக்கு, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் இப்படி ஒரு கேள்வி வரலாம்:

திருச்சிக்கு அருகில் இல்லாத மாவட்டம் எது...?
1. தஞ்சை 2. புதுக்கோட்டை 3. கரூர் 4. காஞ்சிபுரம்.

தமிழ்நாடு வரை படத்தை ஒருமுறையேனும் பார்த்து இருந்தால், மொத்த மாநிலமும் 'விஷுவல்'ஆக நம் கண் முன்னால் விரியும். காஞ்சிபுரம், வட தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே இருப்பது சட்டென்று தெரியும். ஆக கேள்விக்கான சரியான விடை 4 என்று சொல்லி விட முடியும்.

காவிரி ஆறு எவ்வெந்த மாவட்டங்களின் வழியே பாய்கிறது..?

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது..?

தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்கள் எவை..?

திருப்பதி தமிழ் நாட்டின் எந்தத் திசையில் உள்ளது..?

மேற்சொன்ன வினாக்களுக்கு எளிதில் விடை சொல்ல முடியுமா இல்லையா...?

இது வெறும் கற்பனை அல்ல. இதே போன்ற வினாக்கள்தாம் கேட்கப்படுகின்றன. இதற்கான பதிலும் அதற்கான
மதிப்பெண்ணும்தான் நமக்கு அரசு வேலை பெற்றுத் தரப் போகின்றது.

பயிற்சி நிறுவனங்களுக்குப் போகிறேன்... கடைகளில் கிடைக்கும் வழிகாட்டிப் புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறேன்..
என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு வழி காட்டுவது. தமிழ்நாடு, இந்தியா, உலக வரைபடத்தை 'பார்த்து' வந்தாலே,
ஐ.ஏ.எஸ். தேர்வு எனப்படும் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வுகள் வரை, மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.
'மேப் ரீடிங்' பழக்கத்தை தயவு செய்து வளர்த்துக் கொள்ளவும்.

'பொது அறிவுக் களஞ்சியம்' என்றால், வரைபடங்கள்தாம். வேறு எதுவும் இதற்கு ஈடாகாது.

சாதாரண விலையில், சுமார் 50 ரூபாயில், வரைபடம் கிடைக்கும். அதுவும், புத்தகக் கண்காட்சி போன்ற சமயங்களில், இன்னமும் கூட குறைந்த விலையில் வாங்கலாம்.

இதிலே ஒரு வசதி. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வரைபடத்தில் திருச்சி எங்கே இருக்கிறதோ, நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய வரைபடத்திலும், அங்கேயேதான் இருக்கும்! ஆக, விலை ஒரு பொருட்டு அல்ல. பிறகு ஏன் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது..?

அது மட்டுமல்ல. நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம். ஒவ்வோர் ஆண்டும் மாற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேலும், நம் வீட்டுக்கு வருகிற விருந்தினர் ஒவ்வொருவரும், வரைபடம் தொங்க விட்டு இருப்பதைப் பார்த்து, பாராட்டத்தான் செய்வார்கள். நாம் எல்லாம் அறிவுஜீவிகள் என்று (அவர்களாகவே) எண்ணிக் கொள்வார்கள். நம்முடைய 'இமேஜ்', வானத்துக்கு எகிறும். எந்தக் கடவுள், தலைவன், நடிகர், நடிகை படத்தினாலும் நமக்கு இந்தப் பெருமை கிடைக்குமா..? ஆக இப்போதே போகிறோம். வரைபடங்களை வாங்கி வந்து மாட்டுகிறோம்.

இப்போதெல்லாம் பல வரைபடங்கள் வந்து விட்டன. இந்திய நதிகள், இந்திய ரெயில்வே, இந்திய நெடுஞ்சாலைகள்,
கன ரகத் தொழிற்சாலைகள், புண்ணியத் தலங்கள், அவ்வளவு ஏன்...? இந்தியக் காடுகள்... வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல வரைபடங்கள் வந்து விட்டன.

மிகவும் பயன் உள்ளவை. பூகோள அறிவை அள்ளி அள்ளி வழங்குபவை. ஒன்றே ஒன்று.. 'மேப் ரீடிங்' சுவை, நமக்குப்
பழகவில்லை. சுவைக்கத் தொடங்கி விட்டால் போதும். நேரம் போவதே தெரியாமல், வரைபடங்களில் மூழ்கி விடுவோம்.

இன்றைய இளைஞர்களுக்கு மற்றும் ஒரு வழியும் இருக்கிறது. அதுதான், இணையம் மூலம் பார்ப்பது.
'கூகுள் மேப்' இருப்பதே, விலாசம் கண்டு பிடிக்கத்தான் என்று இருந்தால் என்ன செய்வது...?

உலகம் மொத்தமும் கைக்குள் அடங்கி இருக்கும் போது, எத்தனை விவரங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்..?
முயற்சித்தோமா..? இன்றே தொடங்குவோம்.

போட்டித் தேர்வுகளில் வெல்வது, அப்படி ஒன்றும் கடினமான விஷயமே அல்ல.

அறிவை வளர்த்துக் கொள்கிற சரியான வழியைத் தேர்ந்து எடுப்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

வினா விடை வடிவில் உள்ள வழிகாட்டிப் புத்தகங்கள் ஒரு பைசாவுக்கும் பயன் தராது. மாறாக, பள்ளிப் பாடப் புத்தகங்களும், வரைபடங்களும் மதிப்பெண்களை வாரி வழங்கும்.

மன நிறைவு தருகிற நல்ல வேலை கிடைப்பதற்கான ரகசியம் இதில்தான் ஒளிந்து கிடக்கிறது.

'மேப் ரீடிங்' ஆரம்பித்து ஆயிற்றா..?

நிறைவாக ஒரு பணி. அதையும் சரியாகச் செய்து விட்டால், போட்டித் தேர்வுக்குத் தயார்.

ரொம்பவுமே 'போர்' அடிக்கக் கூடிய ஒரு விஷயம். ஆனாலும் என்ன செய்ய..?

வேலை வேண்டுமே..?

அடுத்து வருவது - 

இலக்கணம்!
(தொடரும்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ