Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

 

இன்று ( 04.11. 2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்  ஶ்ரீகாந்த் மீனாட்சி, இயக்குநர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம். .

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு  குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

1. என் வயது 26. என் மகனின் படிப்புக்காக மாதம்  5,000 ரூபாயை  வரும் 2016 ஜனவரி முதல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன்.  இதற்காக, ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ், பிர்லா சன்லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி, பிர்லா மிட் வெல்த்  25, ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி, ஃபிராங்க்ளின் டெம்பிள் பிரைமா பிளஸ் இந்த ஃபண்டுகளில் எவற்றில் முதலீடு செய்யலாம்.?

 


 ரூ. 5,000 முதலீடு செய்யும் போது, ஒரு ஃபண்ட் தொகுப்பில் மூன்று ஃபண்டுகள் வரை இருப்பது நல்லது. உங்கள் தேர்வுகள் அனைத்துமே நல்ல ஃபண்டுகள் தாம். எனினும் மூன்று ஃபண்டுகள் என்னும் போது பிர்லா சன்லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி (ரூ.2,000), ஃப்ராங்க்ளின் டெம்பிள் ப்ரைமா ப்ளஸ் (ரூ.2,000), ஐசிஐசிஐ ப்ரு டிஸ்கவரி (ரூ. 1,000) என்ற அளவில் முதலீடு செய்தல் நல்லது. கண்டிப்பாக உங்கள் மகன் படிப்புக்கு ஒரு சிறப்பான தொகை தேவைக்கு ஈடு செய்யும் அளவுக்குக் கிடைக்கும்.

 


2. நடப்பு 2015-16 ம்  ஆண்டில் வருமான வரியை மிச்சப்படுத்த ரூ. 60,000 முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. இன்னும் 5 மாதங்களில் மாதம் ரூ. 12,000 வீதம் முதலீடு செய்ய  டாக்ஸ் சேவிங் மியூச்சுவல் ஃபண்டுகளை குறிப்பிடவும்..


 வருமான வரி மிச்சம் செய்ய வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்தால் போதும். நீங்கள் ஆக்ஸிஸ் லாங் டெர்ம் ஈக்விட்டி மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாங் டேர்ம் ஈக்விட்டி திட்டங்களில் தலா ரூ. 6,000 முதலீடு செய்தல் நல்லது.

 


3. என் வயது 23, மாதம் 22,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறேன். நான் மாதம் 3,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு எதாவது நல்ல ஃபண்டுகளை பரிந்துரையுங்கள்?


மிக இளம் வயதில் பொறுப்பாக சேமிக்க, முதலீடு செய்யத் துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் - பாராட்டுகள். உங்கள் சேமிப்பில் பாதியை ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்டிலும், மீதியை ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள். ஒன்றில் ரிஸ்க் குறைவு, மற்றதில் அதிகம்.

 


4. என் மகளுக்காக அடுத்த 15 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் செலவுக்காக மாதம் 2,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்காக இரு ஃபண்டுகளை பரிந்துரைக்கவும்.


 நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் முதலீட்டுத் தொகையை முடிந்தால் போகப் போக அதிகரியுங்கள். இப்போதைக்கு ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு ப்ளூ சிப் ஃபண்டிலும், யூடிஐ ஈக்விட்டி ஃபண்டிலும் முதலீடு செய்யத் துவங்குங்கள்.

 


5. நான் மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூசிப் ஃபண்டில் மாதம் ரூ. 2,000 முதலீடு செய்து வருகிறேன். என் வயது 22. பத்தாண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்த ஃபண்டை தொடரலாமா? அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் எனக்கு வேறு ஏதாவது ஃபண்ட்டை பரிந்துரை செய்ய முடியுமா?


நீங்கள் முதலீடு செய்யும் மிரே அஸெட் ஃபண்ட் ஒரு நல்ல ஃபண்ட். அதில் தொடர்ந்து முதலீடு செய்யவும். மேலும் ஒரு திட்டம் வேண்டுமென்றால் ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டை இணைத்துக் கொள்ளலாம்.

 


6. 32 வயதாகும் நான் ஐடி கம்பெனியில் பணிபுரிகிறேன். மியூச்சுவல் ஃபண்டுக்கு நான் புதியவன் என் குழந்தைகள் மற்றும் ஓய்வு காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு நல்ல ஃபண்டுகளை பரிந்துரைக்கவும்?


 மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்குப் புதியவர்களுக்கு ஏற்ற திட்டங்கள் பேலன்ஸ்டு  திட்டங்கள் எனப்படும். கலப்புத் திட்டங்கள். இவை பங்குச் சந்தை, கடன் சந்தை என இரண்டிலும் கலந்து முதலீடு செய்பவை. ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு மற்றும் டாடா பேலன்ஸ்டு ஃபண்டுகள் நல்ல ஆரம்பப் புள்ளிகள்.


7. நான் ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப், ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (ரெகுலர்) - இவைகளில் தலா ரூ. 5,000 முதலீடு செய்து வருகிறேன். நீண்ட காலத்துக்கு மாதம் ரூ. 5,000 முதலீடு செய்ய இன்னும் 2 ஃபண்ட்களை ஆலோசனை கூறவும்.


 இப்போது முதலீடு செய்யும் மூன்று ஃபண்டுகளுமே ஒரே கம்பெனியில் இருப்பதால் உங்களுக்கு வேறு கம்பெனிகளிடமிருந்து இரண்டு ஃபண்டுகளைப் பரிந்துரைக்கிறேன். நீங்கள் மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

 


8. நான் எஸ்ஐபி முறையில் டைரக்ட்  பிளானில் முதலீடு செய்வது நல்லதா அல்லது ரெகுலர் பிளானில் முதலீடு செய்வது நல்லதா? எது எனக்கு அதிக வருமானத்தை கொடுக்கும்?


 உங்களுக்கு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும்  உங்கள் முதலீடுகளை நிர்வகிக்க நேரமும் (பொறுமையும்) இருந்தால், டைரக்ட் ப்ளானில் முதலீடு செய்யவும். இல்லையேல் ரெகுலர் பிளானே உசிதம். இரண்டில் டைரக்ட் பிளான் சற்றே அதிகம் வருமானம் கொடுக்கும்.

 


9. என் வயது 56, நான் மாதம் 9,000 ரூபாய்க்கு எஸ்ஐபி முறையில் 4 ஃபண்டுகளில் முதலீடு செய்கிறேன். என் முதலீடுகள் பின் வருமாறு
எஸ்பிஐ பார்மா ஃபண்ட் -  ரூ.1,500
மிரே அஸெட் எமர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட் - ரெகுலர் பிளான் - ரூ.3,000
ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - 3,000
பிர்லா சன் லைஃப் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் - ஷார்ட் டேர்ம் பிளான் - 1,500
இந்த முதலீடுகள் சரியா?


 உங்கள் முதலீடுகளில் மூன்றில் இரண்டு பங்கினை மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். மீதியில் பாதியை ஒரு துறை சார் ஃபண்டிலும், மற்றதை ஒரு கடன் திட்டத்திலும் செலுத்துகிறீர்கள். இந்த திட்டத்தில் ஒரு முழுமையும் ஒழுங்கும் இல்லை. ரிஸ்க் அளவும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் மிரே அஸெட் ஃபண்டினை இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் திட்டத்திற்கு மாற்றி விடுங்கள். மேலும் எஸ்பிஐ ஃபண்டினை எஸ்பிஐ ப்ளூ சிப் ஃபண்டிற்கு மாற்றுங்கள். இவற்றைச் செய்தால், உங்கள் நிதித் திட்டம் கொஞ்சம் ரிஸ்க் குறைந்து சம நிலை அடையும்.

 


10. நான் என் மனைவியின் பெயரில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய முடியுமா? செய்யும் தொகைக்கு வருமான வரிச் சலுகை ஏதாவது பெற முடியுமா?


 உங்கள் மனைவியின் பெயரில் செய்யப்படும் முதலீடுகள் உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே வர முடியும். வரிச் சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டுமே வரிச்சலுகை உண்டு.

 

 

11. என்னிடம் பான் கார்டு இல்லை. எஸ்ஐபி முறையில் ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்?

 


பதில் : பொதுவாக பான் கார்டு இல்லாமல் ,50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும், நீங்கள் எப்போது 50,000 ரூபாய்க்கு கூடுதலாக முதலீடு செய்கிறீர்களோ அன்று பான் கார்டை சமர்பித்துவிட்டுத்  தான் முதலீட்டைத் தொடர முடியும். 
இன்று வருமான வரித் துறை நமக்கு அளிக்கும் ஒரு அடையாளம் தான் இந்த பான் கார்ட்.. எனவே முதலீட்டின் மீது இவ்வளவு ஆர்வம் உள்ள உங்களைப் போன்றவர்கள் கட்டாயம் பான் கார்டை வைத்துக் கொள்வது நல்லது. 

 
12. என் குழந்தை ஒரு மைனர். என் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு எஸ்ஐபி முறையில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய முடியும். மைனரின் பெயரில் போடப்படும் எஸ்ஐபிக்கு யாரை நாமினியாக குறிப்பிட வேண்டும்?
 
பதில் :  மைனரின் பெயரில் எவ்வளவு வரை முதலீடு செய்ய வேண்டும் என்ன்பதற்கு இதுவரை எந்த ஒரு வரைமுறையும் இல்லை. எனவே உங்களால் எவ்வளவு தொகைக்கு எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய முடியுமா செய்யுங்கள். 
குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால்  ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் சேவிங்ஸ்ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 

13. என் மகனின் வயது 16,  மன வளர்ச்சி குன்றியவர். இவரின் பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மாதம் 10,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறேன். மகன் மன வளர்ச்சி குன்றியவராக இருப்பதால் தற்போது இவன் பெயரில் செய்யும் முதலீடுகளுக்கு (என் மரணத்திற்கு பின்) ஒரு ஆஸ்ரமத்தை நாமினியாக நியமிக்க முடியுமா?

பதில் : நீங்கள் உங்கள் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து கிடைக்கும் தொகையை, உங்கள் காலத்திற்கு பிறகு ஆஸ்ரமத்தை நாமினியாக நியமிக்க வேண்டாம். அதற்கு பதிலாக அந்த ஆஸ்ரமத்தின் பெயரில் இருக்கும் டிரஸ்டிற்கு உங்கள் முதலீடு மூலம் கிடைக்கும் தொகைக்கு நாமினியாக நியமிக்கலாம். 
உங்களுக்கு அந்த ஆஸ்ரமத்தின் டிரஸ்டின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே ஒரு டிரஸ்டை உருவாக்கி அந்த டிரஸ்டை நாமினியாக குறிப்பிடலாம்.
இதையும் விட ஒரு சிறப்பான வழி  இருக்கிறது. நீங்கள் செய்யும் முதலீடே அந்த டிரஸ்டின் பெயரில் இருந்தால் நேரடியாக உங்கள் தொகை டிரஸ்டிற்கு போய்ச் சேர்ந்துவிடும். இந்த மூன்றில் எது உங்கள் மகனின் வாழ்கையை சிறப்பாக உதவுமோ அந்த வழியை தேர்ந்தெடுங்கள்

  

 

14. எஸ் ஐபி முறையில் மாதம் குறைந்தது எவ்வளவு முதலீடு செய்ய முடியும்?

 

 
பதில்: குறிப்பிட்ட சில ஃபண்டுகளோடு, வருமான வரி சேமிப்புத் திட்டங்களில் மாதம் 500 முதல் சேமிக்கலாம். பொதுவாக மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக இருந்தால் கிட்டதட்ட 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
 
15.  நான் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறேன்.  எனக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் பணம் செட்டில்மென்ட் கிடைக்கும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை எஸ் ஐபி முறையில் முதலீடு செய்ய முடியுமா?
 
பதில் : நீங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம், ஆனால் மிகச் சில ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். எனவே நீங்கள் மாதாமாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய உங்களுக்கு வரும் வருமானத்தை ஒரு நல்ல லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, அதிலிருந்து மாதாமாதம் எந்த ஃபண்டிற்கு வேண்டுமானாலும் எஸ்டிபி (Systematic Transfer Plan) முறையில் மூதலீடு செய்யலாம்.
 
16. எஸ்ஐபி முறையில் மாதா மாதம் முதலீடு செய்தது போல, மாதா மாதம் பணத்தை திரும்ப எடுக்க வழி இருக்கிறதா?

பதில் : நீங்கள் கேட்டது போல மாதாமாதம் நீங்கள் குறிப்பிடும் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எஸ்டபிள்யூ பி (Systematic withdrawal plan) என்று பெயர். எந்த ஃபண்டிற்கெல்லாம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய முடியுமோ அந்த ஃபண்டிற்கெல்லாம் எஸ்டபிள்யூபி முறையில் பணத்தை எடுத்துக் கொள்ளவும் முடியும்..

 

17. நான் கடந்த 2003 - 2012 வரையான  காலங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தேன். தற்போது கடந்த 3  வருடங்களாக எஸ்ஐபியை நிறுத்திவிட்டேன். இந்த முதலீடு செய்த மொத்த தொகையை அப்படியே என் மகளின் பெயருக்கு மாற்றம் செய்து தர என்ன வழி என்று விரிவாக சொல்லுங்கள்?

 


பதில் : மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் செய்த முதலீட்டுத் தொகையை அப்படியே உங்கள் மகளி பெயருக்கு மாற்றம் செய்ய முடியாது.  உங்கள் பெயரில் செய்த முதலீட்டை பணமாக மாற்றி (Redemption) உங்கள் மகளுக்கு கொடுக்கலாம். மீண்டும் உங்கள் மகள் அந்த பணத்தை நீங்கள் முதலீடு செய்த அதே ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ