Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி - இந்த வார நிலவரம்

இந்த வாரம் மஞ்சள், ஜீரகம் மற்றும் சென்னா ஆகியவற்றின் விலைப் போக்கு குறித்து பார்க்கலாம்.


 
மஞ்சள் (Turmeric)

முக்கியச் சந்தைகளில் மஞ்சள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வர்த்தகமானது. அதே நேரத்தில் மஞ்சளுக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நிசாமாபாத் மற்றும் ஈரோடு சந்தைகளில் மஞ்சள் ஆர்டர்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளதாலும், விலை உயர்ந்து வர்த்தகமாவதாலும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மஞ்சளுக்கான ஏற்றுமதி ஆர்டர்களும் அதிகரித்து வருகின்றன.


நவம்பர் 4ம் தேதி நிலவரப்படி என்சிடிஎக்ஸ் அங்கீகாரம் பெற்ற கிடங்குகளில் இருப்பு 7341 டன்னாக உள்ளது. ஆனால் விவசாயத்துறையின் அறிக்கைப்படி இந்தப் பருவத்தில் மஞ்சள் விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதால் மஞ்சள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. தற்போது ஒரு குவிண்டால் வேர் மஞ்சள் 5,896 ரூபாய் முதல் 8,539 ரூபாய் வரை என்ற அளவில் வர்த்தகமாகிறது.


கமாடிட்டி சந்தைகளில் செயற்கை விலையேற்றங்கள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன. இந்தப் புகார்களையடுத்து செபி கமாடிட்டி சந்தையிலும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க முன்வந்துள்ளது. எனவே வரும் நாட்களில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் விலை குறையலாம். ஆனால் கிடங்குகளுக்கு வரும் வரத்து தொடர்ந்து குறைவாகவே இருந்தால் மஞ்சள் விலை குறைய வாய்ப்பில்லை.

  அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

ஜீரகம் (Jeera)


முக்கிய ஸ்பாட் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், தேவை கணிசமாக குறைந்ததாலும் கடந்த வாரம் விலை குறைந்து வர்த்தகமாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஜீரகம் விலை ஓரளவுக்கு மாறாமல் வர்த்தகமானது. ஜீரகம் அதிகம் விளைவிக்கும் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் விளைச்சல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டிற்கான ஜீரக விளைச்சல் 599000 டன்னாக இருக்குமென்று அரசு வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 514000 டன் ஜீரகம் மட்டுமே உற்பத்தியானது. மேலும் ஏற்றுமதி ஆர்டர்களும் கணிசமாக குறைந்து வருகிறது. நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி ஜீரக ஏற்றுமதி ஏப்ரல் -ஜூன் மாதங்களில் 45% குறைந்துள்ளது.


இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக இருந்த ஜீரகம் இன்று குறைந்து வருகிறது. மேலும் ஜீரக விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரிக்கும் என்பதால் ஜீரகத்துக்கான தேவை இருக்கும் நிலையைப் பொருத்தே அதன் விலை இருக்கும்.


ஆனால் தற்போது உள்நாட்டு தேவையை மிஞ்சிய இருப்பு கிடங்குகளில் இருக்கிறது. என்சிடிஎக்ஸ் கிடங்கில் தற்போதைய இருப்பு 6647 டன். எனவே வரும் நாட்களில் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை ஜீரகத்துக்கான தேவை அதிகரித்தால் விலை உயர்ந்து வர்த்தகமாகலாம். 


சென்னா (Chana)


கடந்த வாரத்தில் சென்னா விலை உயர்ந்து வர்த்தகமானது. சென்னா அதிகம் விளையும் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததும், வரத்து குறைந்ததும்தான் இதற்கு காரணம். அரசு தரப்பிலும் சென்னா உற்பத்தி இந்த நிதி ஆண்டில் குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பண்டிகைகளை ஒட்டி சென்னாவுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது.


2014-15 நிதி ஆண்டில் சென்னா உற்பத்தி 5.63 மில்லியன் டன்னாகக் கணிக்கப்பட்டது. ஆனால் 2015-16 நிதி ஆண்டில் 5.56 மில்லியன் டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால்தான் கடந்த மாதம் முதல் சென்னா விலை உயர்ந்தே வர்த்தகமாகி வருகிறது.


கண்டபடி உயரும் பயிறு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்தன. பதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான டன் பருப்பு வகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் ஓரளவுக்கு பயிறு வகைகளின் விலை குறைந்தது.


ஆனால் சென்னாவுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாலும், விளைச்சல் குறைவாக இருக்கும் என்ற கணிப்பினாலும் இனி வரும் நாட்களிலும் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பே அதிகம். 

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ