Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாங்க வாங்க.... மாசம் 100% எடுக்கலாம், வாரம் 100% எடுக்கலாம்



- தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

வாங்க வாங்க.... மாசம் 100% எடுக்கலாம், வாரம் 100% எடுக்கலாம், தினம் 100% எடுக்கலாம்னு அப்படின்னு நிறைய மெசேஜ் வருது. இதையெல்லாம் நம்பி போலாமா?

டிரேடிங் என்பது ஏறக்குறைய எல்லோருக்கும் மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைதான், அதாவது, வாங்கி விற்பது (லாங்), விற்று வாங்குவது (ஷார்ட்). ஏறும் என்று நம்பும்போது வாங்கி விற்போம். இறங்கும் என்று நம்பும்போது விற்று வாங்குவோம்.

ஃபாரின் எக்சேஞ்ச் டிரேட் என்பதைத்தான் சுருக்கி ஃபாரக்ஸ் டிரேட் என்று அழைக்கிறோம்.


ஃபாரக்ஸ் டிரேடுக்கும், ஈக்விட்டி,கமாடிட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஈக்விக்டி டிரேட் என்பது ஸ்டேட்பேங்க், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பது அல்லது விற்று வாங்குவது.
கமாடிட்டி டிரேட் என்பது, கோல்ட், சில்வர், குரூட் என்று பலவகையான கமாடிட்டிகளை வாங்கி விற்பதும், விற்று வாங்குவதும்.
இதைப்போலவே, அமெரிக்க டாலர், ஐரோப்பாவின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களை வாங்கி விற்பது ஃபாரக்ஸ் வியாபாரம் ஆகும்.
ஆன.... ஷேர் விலை ஏறும் என்று வாங்கி விற்கலாம். தங்கம் விலை ஏறும் என்று வாங்கி விற்கலாம். ஆனால், டாலரை எப்படி வாங்கி விற்பது?
இங்குதான் அதன் முதல் வித்தியாசம்.
அமெரிக்க டாலர் ஏறும் என்று நம்பினால், வாங்கி விற்கலாம்தான். ஆனால், அதன் விலை மாற்றத்தை தனியாக அளவிட முடியாது. ஆகவே, அதை அடுத்த ஒரு நாணயத்துடன் ஒப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக சொல்வதாக இருந்தால், ரூபாய்க்கு எதிராக டாலர் ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா? என்று பார்க்கலாம். அதை எப்படி பார்க்கலாம்.
ஒரு அமெரிக்க டாலர் = ரூ.65/- என்று வைத்துக்கொள்ளலாம்.
இதில் அமெரிக்க டாலர் என்பது ஒரு எண்ணிக்கையை குறிக்கும். எனவே இதை பேஸ் கரன்சி (Base Currency) என்போம். அடுத்து இந்த ஒரு டாலர் என்பது ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்று சொல்வதால், ரூபாயை கொட்டேஷன் கரன்சி (Quotation Currency) என்று அழைப்போம். இதில் பேஸ் கரன்சி நகராது, கொட்டேஷன் கரன்சி மட்டும் நகரும்.
இந்த இரண்டு நாணயத்தையும் சேர்த்து நாம் கரன்சி பேர் (Currency Pair) என்று அழைப்போம். மேலே பார்த்த எடுத்துக்காட்டில் நாம் பார்த்த கரன்சி பேர் என்பது...
அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் ஆகும்.
இதை USD-INR என்று சொல்லுவோம்.
சரி... இப்ப டிரேடிங் பண்ண வருவோம்.
இப்போதைய USD-INR விலை ரூ.65/-.
நம்முடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை அடுத்து முடிவு செய்யவேண்டும்.
முதல் எதிர்பார்ப்பு: டாலர் மதிப்பு, இந்திய ரூபாயில் ரூ.65/- இருந்து ரூ.66/-ஆக மாறும். அப்படி என்றால், இப்போது, ரூ.65/- கொடுத்து வாங்கு முடிந்த ஒரு டாலரை, பின்பு ரூ.66/- என்ற விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
அதாவது, துவரம் பருப்பு இப்ப கிலோ ரூ.160/- இதுவே அடுத்த சில தினம் கழித்து ரூ.165/- என்று விற்றால்? நாம் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டது என்று சொல்லுவோம், அல்லவா!
அதே போல் இங்கு, நாம் டாலரின் மதிப்பு கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது, டாலர் வலிமையாக மாறுகிறது. ரூபாய் வலிமை குன்றுகிறது என்று அர்த்தம். எனவே நாம் டாலரை வாங்கி விற்கலாம். இதன் அடிப்படையில் நாம் ஒரு டாலரை வாங்கினால், ரூபாயில் அதன் மதிப்பு ரூ.65/-ல் இருந்து ரூ.66/-ஆக மாறினால், லாபம் ரூ.1/- கிடைக்கும்.
என்னங்க இது ஒரு ரூபாய் லாபத்துக்கு இத்தனை விளக்கமா?
சரிங்க... என்னோட காதிலும் அது நல்லாவே விழுது. ஒரு டாலர் வாங்கி, விற்றால் ஒரு ரூபாய் லாபம். 1000 டாலர் வாங்கி விற்றால், ஆயிரம் ரூபாய் லாபம். பத்தாயிரம் டாலர் வாங்கி விற்றால்.... இப்ப உங்க டேர்ன்.... நீங்க சொல்லுங்க சார்....
..........
..........
நீங்க சொல்லாவிட்டாலும் அது பத்தாயிரம் ரூபாய் லாபம்.
அடபோங்க..... ஒரு லட்சம் டாலர் வாங்கினா ஒரு லட்சம் ரூபாய் லாபம், இதில என்ன கதை இருக்கு? அரிசி மண்டி வச்சிருக்கிறவர், ஆயிரம் மூட்டை வாங்கி, மூட்டைக்கு ஒரு ரூபாய் வச்சு வித்தா, அவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பத்தாரயிரம் மூட்டை வாங்கி, ஒரு ரூபாய் வச்சு வித்தா, பத்தாயிரம் கிடைக்கும். எல்லாம் ஒண்ணுதானூங்க?
சரியா சொன்னீங்க சார். அதேதான், அப்படியே புடிங்க. அதேதான் இங்கேயும் நடக்குது. ஆனா.... உங்களுக்கு இங்க ஒரு சர்பிரைஸ் காத்திருக்கு.
என்ன?
ஒரு மூட்டை அரிசி ரூ.1000/- அப்படின்னு வைச்சா, 100 மூட்டை வாங்கினா, நீங்க ரூ.100000/- முதலீடு பண்ணவேண்டி இருக்கும்.
ஆமா... இதில என்ன சந்தேகம். வியாபாரம் பண்ணணும்னா, முதல் போட்டுதானே ஆகனும்.
சரி, இதே அரிசி வியாபாரத்தில் 100 மூட்டை வாங்குங்க, ஒரு லட்சம் பணம் கொடுக்கிறதுக்கு பதிலா, ஒரு ஐயாயிரம் மட்டும் கொடுத்துட்டு பண்ணா எப்படி இருக்கும்.
ம்....க்கும்..... நீங்க சொல்றது நல்லாதான் இருக்கு? அதை 100 மூட்டை அரிசியை விற்கற ஆளு ஒத்துக்கனுமே?
அரிசி விற்கற ஆளு ஒத்துக்கிட்டா?
ஒத்துக்கிட்ட ஜாலிதான், ஐயாயிரம் முதலீட்டை போட்டு ரூ.10000/- லாபம் எடுத்துடுவேனே.
என்ன.... உங்க புல்லட் வேகமா ஓட ஆரம்பிச்சிடிச்சி. சும்மா, ஒத்துக்கிட்டா எப்படி இருக்கும்னு கேட்டா.... கூடவே லாபத்தை எல்லாம் கணக்கும் பண்ணி சொல்லீட்டீங்க. குட். நல்லா புரிஞ்சிகிறீங்க சார்.
இதைத்தான் லீவரேஜ் அப்படின்னு சொல்லுவோம்.
என்னங்க இதுவரைக்கும் புரியற மாதிரி சொல்லிக்கிட்டு வந்தீங்க, இப்போ லீவரேஜ், அது இதுன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சிடீங்க.
இதுல புதுசா ஒண்ணும் இல்லிங்க சார். ஒரு வியாபாரத்தை டீல் பேசறீங்க, ஒரு டோக்கன் தொகையை கொடுக்கிறீங்க. அப்படியே டீலை முடிச்சி லாபத்தை வெளியே எடுக்கிறீங்க.
இது சூப்பரா இருக்கே! சீக்கிரம் சொல்லுங்க, இப்ப ஃபாரக்ஸ் மார்க்கெட்ல இந்த மாதிரி பண்ணலாம்தானே? எங்க போய் பணம் கட்டனும். யார்கிட்டபோய் பணம் கட்டனும்.
துடிக்காதீங்க சார். சொல்றேன். முழுசா கேட்டுட்ட அப்புறம் இதையே இன்னொருவாட்டி சொல்லுங்க.
நாம் முன்னாடி என்ன சொன்னேன்..... டாலர் விலை ரூ.65/- ல் இருந்து ரூ.66/- ஏறும்னு நம்பி, நாம 10000 டாலரை, வெறும் 5% மட்டும் முதலீட்டை போட்டு, வாங்கினா, ரூ.10000/- லாபம் கிடைக்கும். அதுவே, நிலைமை மாறி 65/-ல இருந்து இறங்கி 64/-க்கு போனா, நமக்கு நட்டமும் ரூ.10000/- வரும்.
ஐய்யோ..............
இருங்க சார் அதுக்குள்ள அவசரபடறீங்க. டாலர் விலை இன்னும் குறைஞ்சு ரூ.63/-க்கு போனா, ரூ.20000/- நட்டம் வரும்.
ஐய்யய்யோ...... 5% போட்ட காசு அப்ப முழுசா போயிடுமே.
ஆமா.
என்னங்க ரொம்ப ஷாட்டா ஆமா, அப்படின்னு சொல்றீங்க.
வேற எப்படி சொல்லச்சொல்றீங்க. இதைத்தான் லீவரெஜ் அப்படின்னு சொல்லுவாங்க. கொஞ்சமாக முதலீட்டை செய்து, அதிக அளவுக்கு பொருளை (டாலரை) வாங்கி வியாபாரம் செய்யும் முறை இது.
இத்தகைய வியாபாரம், ஈக்விட்டி, கமாடிட்டி சந்தையிலும் நடக்கிறது. இப்போது கரன்சியிலும் நடக்கிறது.
இந்தியாவிலேயும் இது நடக்குதா?
நடக்குது. இப்ப நான் சொன்ன இரண்டு கரன்சியை இணைத்து ஒரு பேர் அப்படின்னு பார்த்தோம் அல்லவா!
ஆமா.... USD-INR அப்படின்னு சொன்னீங்க.
கரெக்ட்... அந்த மாதிரி இன்னும் மூணு கரன்சி பேர்ல நீங்க வியாபாரம் செய்யலாம்.
அவை...
EUR – INR
GBP – INR
YEN - INR
மேல பார்த்த எல்லா பேர்லயும், முதல் வர்றது பேஸ் கரன்சின்னு உங்களுக்கு தெரியும். யூரோ, கிரேட் பிரிட்டன் பவுண்ட் எல்லாம் ஒரு யூனிட்டை குறிக்கிறது. ஆனால், கடைசியாக உள்ள, ஜப்பான் நாட்டு நாணயமான யென், 100 யூனிட்டை குறிக்கிறது.
இந்த நான்கு கரன்சி பேர்களையும், இந்திய சந்தையில் ஏறும் என்று நம்பினால், வாங்கி விற்கலாம். இறங்கும் என்று நம்பினால், விற்று வாங்கலாம்.
எங்க போய் வாங்கலாம்? விற்கலாம்?
இந்தியாவில மூணு எக்சேஞ்சில் இந்த வியாபாரத்தை பண்ணலாம். அவை NSE, BSE மற்றும் MCX-SX. இவை அனைத்தும் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன் வகையில் வியாபாரம் ஆகிறது.
பியூச்சர்னா அப்படி லாட், லாட்டா வாங்குவாங்களே அதுதானே.
ஆமாங்க சார். லாட் அளவுன்னு பார்த்தா..... அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் இது மூணும் 1000 எண்ணிக்கை. ஜப்பான் யென் மட்டும் ஒரு லட்சம் எண்ணிக்கை.
ஏதோ லீவரேஜ் அப்படின்னு சொன்னீங்களே, இங்க எப்படி, எவ்வளவு முதலீடு போட்டா போதும்.
ஒரு எடுத்துக்காட்டா அமெரிக்க டாலரை எடுத்துக்கொள்வோம். ஒரு டாலர் ரூ.65/- அப்படின்னு வச்சா, லாட் அளவு $1000, அப்ப லாட் மதிப்பு ரூ.65000/-. இதில வியாபாரம் செய்ய கட்டவேண்டிய தொகை வெறும் 3% மட்டுமே. அதாவது ரூ.1950/- மட்டுமே.
ஏன் இவ்வளவு கொஞ்சமா வாங்கறாங்க?
ஏன் என்றால், இதன் கடந்தகால சரித்திரத்தை எடுத்து பார்தா, ஒரு நாளுக்கு டாலரின் விலை 3% மேலே ஏறியதும் இல்லை, இறங்கியதும் இல்லை. அதனால நீங்க அதிகம் பணம் கட்டவேண்டியது இல்லை.
ஓ..... அதனாலதான், கரன்சில டிரேட் பண்ணா, அதிகமா நஷ்டம் வராதுன்னு சொல்றாங்களா! சரி.....ஒரு வேளை எப்பவாது, 3% க்கு மேலே ஏறினா?
அப்ப எவ்வளவு ஏறுதோ அல்லது இறங்குதோ அதுக்கு ஏத்தமாதிரி கட்டவேண்டிய தொகையை எக்சேஞ்ச் கூட்டிடுவாங்க.
நல்லாதான் சொல்றீங்க. இந்த மாதிரி கரன்சி வியாபாரம் வேற எங்க நடக்குது?
இந்தியாவில இன்னொரு இடத்திலேயும் நடக்குது. இதை ஓ.டி.சி. மார்கெட் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது ஓவர் த டிரேட் கவுண்டர். அப்படின்னா, டாலரை வாங்கறவங்க அப்புறம் விற்கறவங்க, அவுங்களுக்குள்ளேயே பேசி (போன்ல) வியாபாரம் பண்ணிக்குவாங்க. இங்க எக்சேஞ்ச் இல்ல.
அப்படி யாரு இதுல வியாபாரம் பண்ணுவாங்க?
பொதுவாக வங்கிகளுக்குள்ளேதான் இந்த வியாபாரம் நடக்கும். ஒரு பேங்க் டாலரை வாங்குவாங்க, இன்னொருத்தர் விப்பாங்க. பொதுவாக, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாதான் இதை பண்ணுவாங்க. அதாவது ஏற்றுமதி செய்பவர்களுக்கு டாலர்ல வருமானம் வரும். வங்கி அதை விற்று, ரூபாயாக மாத்தி கொடுப்பாங்க. இறக்கிமதியாளர்களுக்கு, டாலர் தேவை. ஆகவே வங்கிகள் அவர்களுக்கு வாங்கி கொடுப்பாங்க.
டாலர் விலைதான் மாறிக்கொண்டே இருக்குமே, அதனால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நட்டம் வராமல் இருக்க, இந்த ஓ.டி.சி. மார்க்கெட்ல ஜெட்ஜிங் (ஃபார்வர்ட் கான்டிராக்ட் முறையில்) பண்ணுவாங்க.

எல்லாம் சரிங்க...
நான் கேள்விபட்ட ஃபாரக்ஸ் டிரேட் பத்தியே இன்னும் நீங்க சொல்லவே இல்லியே?
என்ன கேள்விபட்டீங்க?
நீங்க இந்தியாவில் பண்ற டிரேட் பத்திதான் சொன்னீங்க. ஆனால் இன்டர்நேஷனல் கம்பெனியில ஃபா ரக்ஸ் டிரேட் பண்ணலாம். நீங்க சொன்ன எல்லா கரன்சி பேர்லயும் ரூபாய் இருந்துச்சி. ஆனால் நான் கேள்விபட்ட இன்டர்நேஷனல் ஃபாரக்ஸ் டிரேடில....
EUR – USD
USD – JPY
EUR – JPY
GBP - USD
GBP – JPY
இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே.... இது இல்லைன்னா அது, அது இல்லைன்னா இது. இப்படி மாத்தி மாத்தி பண்ணலாம் அப்படீன்றாங்க.
நீங்க டிரேட் பண்ண கஷ்டபட்ட, அவங்களே வேற பண்ணித்தருவாங்களாம்
அடிக்கடி ஃபேஸ் புக்க, மெயில், எஸ்.எம்.எஸ் அப்படின்னு நிறைய மெசேஜ் வருது.
என்ன மெசேஜ் வருது?
$16000 profit (160%) just in 45 days
Done by our robot.
LAST WEEK ACCOUNT STATEMENT .. 40% profit done
Best Account Manger trades your investment
இதையெல்லாம் நம்பி போலாமா?
முதல் நீங்க புரிஞ்சிக்கவேண்டிய முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்.
இந்தியாவில் ஃபாரக்ஸ் டிரேட் பண்ண உங்களுக்கு அதிகாரபூர்வமாக இருப்பது, இரண்டு தளங்கள்தான். இதனுடைய வரலாற்றை திரும்பி பார்த்தால்,
இந்தியாவில 1973 – Foreign Exchange Regulation Act (FERA) கொண்டுவரப்பட்டு, 1974லில், ஏற்றமதி இறக்குமதியாளர்கள் மட்டும், அந்நிய செலாவணி மாற்றம் நடைமுறையில் இருந்தது.
பின்பு, 1998ல் FERA நீங்கப்பட்டு, Foreign Exchange Management Act (FEMA) கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டங்களின் அடிப்படையில், ஓ.டி.சி. மார்க்கெட், ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் இயங்குகிறது. பின்பு 2008ல் எக்சேக்ச் மூலம் நடக்கும் ஃபாரக்ஸ் வியாபாரம், செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஒரு கமிட்டியாக சேர்ந்து கண்காணிக்கிறது.
இது தவிர்த்து நீங்கள் சொல்லும் இன்டர்நேஷனல் ஃபாரக்ஸ் வியாபாரம் என்பது, மேலே சொன்ன எந்த சட்டவிதிமுறைக்கும் உட்பட்டு நடக்கவில்லை. இந்த வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட நினைத்தால், இன்டர்நேஷனல் புரோக்கர்கள் உங்களை டாலரில் பணம் கட்டசொல்லுவார்கள் (கிரெடிட் கார்டிலோ அல்லது டெபிட் கார்டிலோ). இது சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்த ஒரு முயற்சியாகக்கூட இருக்கலாம்.
அடுத்து இந்த வியாபாரத்தில் சிறு சிறு வியாபாரிகளை ஈர்ப்பதை நோக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது உங்களை $100/- போடுங்கள் அல்லது $200/- போடுங்கள் என்று குறைந்த தொகையில் ஆரம்பிக்க சொல்வார்கள்.
1 : 1000 லீவரெஜ் கொடுக்கிறோம்.
லாபம் சம்பாதித்தால், இந்தப் பணம் நம் கணக்கிற்க்கு எப்படி வரும்?
கிரெடிட் / டெபிட் கார்ட் மூலம் கட்டிய பணம் அளவுக்கு அதன் மூலமே திரும்ப கொடுப்பதாக சொல்கிறார்கள். இன்னும் லாபம் இருந்தால், அதை நம் வங்கிக்கணக்குக்கு ரூபாயாக மாற்றி போட்டுவிடுவோம் என்றும் சொல்கிறார்கள்.
தெரிந்தவரை, பலரையும் விசாரித்ததில், பணம் வங்கிக்கணக்குக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள்.
இன்னும் பலர், லாபம் வந்தால்தானே சார், அந்த கேள்வியே வரும். பெரும்பாலோருடைய வியாபாரம் நட்டத்தில்தான் முடிகிறது. அதனால், பணம் வங்கிக்கு வருதா இல்லையா அப்படின்றதே, யோசிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
அடுத்து முதலீட்டு தொகை $100 அல்லது $200 பதிலாக, அதிகமான டாலர்களை போட்டு வியாபாரம் செய்தால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மீறிவதாக பின்னாடி பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்ற கேளவிக்கு..... பதில்.....
$5000/- மேலே பணம் போட்டதான் பிரச்சனை வரும். அதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று தைரியம் கூறுகிறார்கள்.
அதெல்லாம் சரிங்க....
ஃபாரக்ஸ் டிரேடிங்.... எக்சேஞ்ச்ல பண்ணி பிரச்சனை ஆகிட்டா, செபி கிட்ட முறையிடலாம்.
ஃபாரக்ஸ் டிரேடிங்.... ஓ.டி.சி. மார்கெட்ல பிரச்சனை ஆகிட்ட, ரிசர்வ் வங்கிக்கிட்ட முறையிடலாம்.
இந்த இன்டர்நேஷனல் புரோக்கர்கிட்ட ஃபாரக்ஸ் டிரேட் பண்ணி, ஏதாவது பிரச்சனை ஆகிட்டா, யாரிடம் முறையிடுவது.
இதுதான் கேள்வி?
பதில்.....
நீங்க ஃபாரக்ஸ் டிரேட் பண்ற புரோக்கர், U.K.வில இருந்தா, அங்கே இருக்கிற மத்தியவங்கியிடம் முறையிடலாம்.
நீங்க ஃபாரக்ஸ் டிரேட் பண்ற புரோக்கர் அமெரிக்காவில் இருந்தா, ஃபெட் ரிசர்வ் வைத்துள்ள அமைப்பிடம் முறையிடலாம்.
அதுபோல, நீங்கள் வியாபாரம செய்யும் புரோக்கர் எந்த நாட்டில் தலைமை அலுவலகம் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் முறையிடலாம்.
என்ன சொல்றீங்க? இங்க லோக்கல இருக்க ஆளையே புடிக்க கஷ்டமாக இருக்கு. இதுலபோய், அமெரிக்கா, இங்கிலாந்து.... அப்படீங்கறீங்களே...
ஆனாலும் ஏன் மக்கள் கும்பல் கும்பலா இன்டர்நேஷனல் ஃபாரக்ஸ் டிரேட் நோக்கி படை எடுக்கிறாங்க.
நம்ம ஆசை................ நம்ம பேராசை................ இது மட்டும்தான் அவர்கள் கையில் இருக்கும் தூண்டில்.
இன்னொன்று, நான் ஈக்விட்டி மாரக்கெட்ல போட்டு லாஸ் ஆயிட்சி, கமாடிட்டி டிரேட்டுக்கு போனேன். அங்கேயும் லாஸ் ஆயிடிச்சி. அதனால, உட்டதை எல்லாம் வேகமா எங்க புடிக்கலாம் பார்த்தா.....
வாங்க வாங்க.... மாசம் 100% எடுக்கலாம், வாரம் 100% எடுக்கலாம், தினம் 100% எடுக்கலாம்னு துண்டு துண்டு செய்திகள் வரும்போது, நம்மால் கட்டுபடுத்த இயலவில்லை.
கடைசியா என்னத்தான் சொல்லவர்றீங்க....
கூறை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான்..... அப்படின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.
இங்க இருக்கிற மேடையில் மொதல்ல ஒழுங்கா ஆட கத்துக்கலாங்க. பணம் நம்முது. இதை காப்பாத்த, நம்மலவிட அக்கரை உள்ளவங்க வேற யாரும் இல்லை.
காப்பாத்துவோம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ