Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி - இந்த வார நிலவரம்

இந்திய ஏற்றுமதி தொடர்ந்து 11-வது மாதமாக சரிவைச் சந்தித்துவரும் நிலையில் அக்ரி கமாடிட்டிகளின் வர்த்தகமும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஏலக்காய் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ் குமார் விளக்குகிறார். 
 

ஏலக்காய் (Cardamom)


 

கடந்த வாரத்தில் முக்கிய சந்தைகளில் ஏலக்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், தேவை குறைந்து காணப்பட்டதாலும் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் விளையும் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவும் வானிலையும் விளைச்சலுக்கு சாதகமாக அமைந்தது. இதன் காரணத்தால் விளைச்சல் அதிகரித்தது. மேலும், வேளாண் துறை இந்த ஆண்டு ஏலக்காய் விளைச்சல் 20-லிருந்து 22 மில்லியன் டன் வரை இருக்கலாம் என கணித்துள்ளது.


தவிர, உலகில் அதிகளவில் ஏலக்காய் விளையும் கவுதமாலாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏலக்காய் உற்பத்தி 15% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில், தீபாவளி பண்டிகைக்கு வரும் வட இந்திய ஆர்டர்கள் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக முக்கியச் சந்தைகளில் சொல்லப்படுகிறது. இதனால் ஏலக்காய் இருப்பு கிடங்குகளில் அதிகரித்திருந்தது. ஏலக்காய்க்கு, அதன் நிறம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொருத்துதான் விலை நிர்ணயிக்கப்படும். வரத்து அதிகரித்து காணப்படுவதால், அவற்றை சரியாக உலர வைத்து சுத்தம் செய்து வைக்க முடியாமல் இருக்கிறது. இதனால் அதன் நிறமும் மாறி தரம் குறைந்துவிடுகிறது. இதனால் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய ட்ரேடிங் பங்கேற்பாளர்கள் குறைவாகவே இருக்கின்றனர். 


இந்த நிலைமை இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் நிலை இருப்பதால், ஏலக்காய் விலை ரூ.650 லிருந்து 750 வரை என்ற அளவுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்பு குறைவுதான். 

ஜீரகம் (Jeera)


 

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் வரத்து குறைந்ததாலும் தேவை அதிகரித்ததாலும் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமானது. ஜீரகம் அதிகம் விளையும் பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பதற்கான வானிலை இல்லாததே வரத்து குறைந்ததற்கும் விலை உயர்வுக்கும் காரணம். 


நவம்பர் 16-ம் தேதி சந்தை நிலவரப்படி, ஜீரகம் விளைச்சல் ஏரியா குஜராத்தில் 17,400 ஹெக்டேராக உள்ளது. ஆனால், கடந்த வருடம் விளைச்சல் ஏரியா 60,900 ஹெக்டேராக இருந்தது. ஆனாலும் ஏற்றுமதி ஆர்டர்கள் கணிசமாக குறைந்திருப்பதாலும், விளைச்சல் அதிகரிக்கும் என்ற கணிப்பினாலும் விலை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது. அரசு வேளாண் துறை தரப்பில் 2014 - 2015-க்கான (ஜூலை - ஜூன்) ஜீரக விளைச்சல் 5,99,000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5,14,000 டன்னாக மட்டுமே இருந்தது. 


நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, ஜீரக ஏற்றுமதி கடந்த வருடம் 49,000 டன்னாக இருந்தது ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 45% குறைந்து, 27,000 டன்னாக உள்ளது. ஆனாலும், வெளிநாடுகளில் ஜீரகத்துக்கான தேவை இருந்து வருகிறது. சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அரசியல் சூழல் சரியில்லாத காரணத்தினால் அதன் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர். 


கடந்த வருடங்களைக் காட்டிலும் தற்போது ஜீரகத்தின் விலை உயர்ந்து வர்த்தகமாவது, விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதனால் வரும் 2015 - 16 நிதி ஆண்டில் விளைச்சலை அதிகரிக்கும் முனைப்பில் இருக்கிறார்கள். ஜீரகத்துக்கான தேவை கணிசமாக இருப்பதாலும் விளைச்சல் குறைந்திருப்பதாலும் வரும் வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பில்லை.
 

கொத்துமல்லி (Coriander)


 

கடந்த மாதத்தில் விலை குறைந்து வர்த்தகமாகிவந்த கொத்துமல்லி, கடந்த வாரத்தில் விலை உயர்ந்து வர்த்தகமானது. இதற்கு காரணம், கொத்துமல்லிக்கான தேவை அதிகரித்திருப்பதும், கொத்துமல்லி அதிகம் விளையும் பகுதிகளில் உயர் வெப்பநிலை நிலவுவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதும்தான் காரணம். கடந்த வாரத்தில் 100 கிலோ கொத்துமல்லி ரூ.9,700 லிருந்து ரூ.10,150 வரை என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது. 


அதேசமயம், சமீபத்திய என்சிடிஇஎக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கிடங்குகளில் உள்ள 15,600 டன் கொத்துமல்லி இருப்புக்கான காலாவதி நாள் டிசம்பர் 5 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொத்துமல்லி இறக்குமதியும் அதிகரித்துள்ளது. 
இனிவரும் நாட்களிலும் கொத்துமல்லிக்கான தேவை நீடிக்கும் என்பதனால் வரத்து குறைவாக இருக்கும் சூழலில் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பு இல்லை. 100 கிலோ கொத்துமல்லி குறைந்தபட்சம் ரூ.10,250-லிருந்து அதிகபட்சமாக ரூ.10,650 வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

- ஜெ. சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ