Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கமாடிட்டி டிரேடிங்


இந்த வாரம் ஜீரகம் விலைப்போக்கு குறித்து விளக்குகிறார் இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ் குமார்.

ஜீரகம் (Jeera)
 
"கடந்த வாரத்தில் ஜீரகத்தின் விலை உயர்ந்து வர்த்தகமானது. முக்கியச் சந்தைகளில் வரத்து குறைந்து காணப்பட்டதாலும்,  அதற்கான தேவை சந்தைகளில் அதிகரித்ததாலும் விலை உயர்ந்து வர்த்தகமானது. ஜீரகம் அதிகம் விளையும் பகுதிகளில் விளைச்சல் குறைந்ததே வரத்து குறைந்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஜீரக விளைச்சலுக்கு சாதகமான வானிலை அந்தப் பகுதிகளில் இல்லை. ஜீரகம் அதிகம் விளையும் குஜராத்திலும் இந்த நிலை இருப்பதால் ஜீரக விளைச்சல் பெருமளவில் குறைந்துள்ளது. 
 
அதுபோக ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகளவில் இல்லாத காரணத்திலும், இனி வரும் மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கலாம் என்ற கணிப்பினாலும் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறது. 
 
நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, ஜீரக ஏற்றுமதி கடந்த வருடம் 49,000 டன்னாக இருந்தது. இது கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 45% குறைந்து, 27,000 டன்னாக உள்ளது. அரசு வேளாண் துறை தரப்பில் 2014 - 2015-க்கான  (ஜூலை - ஜூன்)  ஜீரக விளைச்சல் 5,99,000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5,14,000 டன்னாக மட்டுமே இருந்தது. 
 
ஜீரகத்தின் விலை கடந்த வருடங்களைக் காட்டிலும் இப்போது உயர்ந்து வர்த்தகமாவது விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதனால் வரும் 2015-16 நிதி ஆண்டில் ஜீரக விளைச்சல் ஏரியாவை அதிகரிக்கும் முனைப்பில் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்கு ஜீரகத்துக்கான தேவை கணிசமாக இருப்பதாலும், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வரத்து இல்லாததாலும் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பில்லை. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் 100 கிலோ ஜீரகம் ரூ. 15,850  லிருந்து ரூ. 16,280 வரை வர்த்தகமாகலாம். 

மஞ்சள் (Turmeric)
 
முக்கியச் சந்தைகளில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கிடங்குகளுக்கு வருவதற்கு தாமதமானது. ஆனால் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டதால் விலையை உயர்ந்து வர்த்தகமானது. 
 
மஞ்சள் அதிகம் விளையும் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டைவிட விளைச்சல் அதிகரித்திருந்தாலும் மஞ்சள் விளைச்சல் கவலைக்குரியதாகவே இருக்கிறது. தெலங்கானா, மகாராஷ்ட்ரா போன்ற மஞ்சள் விளைச்சல் பகுதிகளில் வானிலை வறட்சி நிலையில் இருப்பதால், இந்த வருடம் மஞ்சள் விளைச்சல் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா வேளாண் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2015-16ல் மஞ்சள் விளைச்சல் 40,823 ஹெக்டேராக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வருடம்  43,470 ஹெக்டேர் விளைச்சல் கணிக்கப்பட்டிருந்தது. 
 
இனி வரும் வாரங்களில் மஞ்சளுக்கான தேவை என்பது தற்போதுள்ள நிலையில்தான் நீடிக்கும் என்று தெரிகிறது. எனவே, புதிதாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் சந்தைகளுக்கு வந்ததும் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன. விலை உயர்வதற்கு வாய்ப்பில்லை.
 
ஏலக்காய் (Cardamom):
 
கடந்த வாரத்தில் முக்கிய சந்தைகளில் வரத்து ஏலக்காய் அதிகரித்து காணப்பட்டதாலும், தேவை குறைந்து காணப்பட்டதாலும் விலை குறைந்து வர்த்தகமானது. வேளாண்துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏலக்காய் விளைச்சல் 20-லிருந்து 22 மில்லியன் டன் வரை இருக்கலாம் என கணித்துள்ளது.
 
ஏலக்காய்க்கான உள்நாட்டு ஆர்டர்களும், ஏற்றுமதி ஆர்டர்களும் குறைவாகவே இருப்பதால், கிடங்குகளில் ஏலக்காய் இருப்பு தேக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் மேலும் வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், வர்த்தகர்களால் ஏலக்காய்களை சரியாக உலர்த்தி பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கிடங்குகளில் உள்ள ஏலக்காய்களே விற்பனையாகாமல் தரம் குறைந்துவரும்பட்சத்தில், மேலும் வரத்து அதிகரிக்கும் என்பதால் விலையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களிலும் இந்த நிலைமையே நீடிக்கும் என்பதால், விலை மேலும் குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதே தவிர விலை உயர்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஜெ.சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ