Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்டல் & ஆயில்! கமாடிட்டி டிரேடிங்!

இந்த வாரம்,கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின்  தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!


 
கச்சா எண்ணெய்யின் விலையானது இந்த மாதத்தில சுமார் 9% வரை சரிந்துள்ளது. அதிக வரத்தின் காரணமாக விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீனா பொருளாதாரம் ஒருவிதமான மந்தநிலையிலே தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும்,  சீன தொழில் நிறுவனங்களின்  அக்டோபர் மாதத்துக்கான  லாபமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.6% குறைந்துள்ளது. இந்த லாபம் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருகிறது. தவிர, அமெரிக்க கச்சா எண்ணெய்யின் வரத்து கடந்த வாரம் ஒரு மில்லியன் பேரல் அளவுக்கு அதிகரித்தது.
 
ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை 45.17 டாலராகவும், டபிள்யுடிஐ கச்சா எண்ணெய்யின் விலை 42.33 டாலராகவும் குறைந்துள்ளது. ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டி வீழ்த்தியபின் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போதும் இருவகையான கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. 
 
ஆஸ்திரியாவின் வியன்னாவில் வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒபெக் கூட்டத்தில் கச்சா உற்பத்தியைக் குறைப்பது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள கச்சா எண்ணெய் டிரேடர்கள் தற்போது ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.  
 
வியன்னா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஒபெக் அமைப்பு வரும் 4-ம் தேதி (வியாழக்கிழமை) கச்சா எண்ணெய்யின் உற்பத்தியைக் குறைப்பது குறித்த கூட்டத்தை நடத்த உள்ளது.
 
மேலும், ரஷ்யாவும் சவுதி அரோபியாவும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான விஷயங்களில் கூட்டாக செயல்பட்டு உலக அளவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்படும் என கடந்த வியாழன் அன்று அறிவித்திருக்கிறது என்பது பாசிட்டிவான செய்தி என்றாலும், ஒஇசிடி (Organisation for Economic Co-operation and Development) நாடுகளில் கச்சா எண்ணெய்யின் கையிருப்பு அதிகமாக இருப்பதும், கச்சா எண்ணெய் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், கச்சா எண்ணெய்யின் விலை உயராமலே இருக்கிறது.  
 
இந்தக் காரணங்களினால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை அதிக ஏற்றம் அடைய வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்".


தங்கம்!

 
 
கடந்த வாரம் முழுவதும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. அதாவது, கடந்த புதன் அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1079 டாலர் வரை உயர்ந்து, மீண்டும் சரிய ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1065 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதற்கான பேச்சு எழுந்ததால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது.
சீனாவில் தங்கத்தின் இறக்குமதி கடந்த ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டர்பர் மாதங்களில் உயர்ந்தது. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில், தங்கத்தின் இறக்குமதி அளவு குறைந்துள்ளது என ஹாங்காங் மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர துறை தெரிவித்துள்ளது. ஹாங்காங் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் தங்கம் மாதங்கள் ரீதியில் 26 சதவிகிதமும் ஆண்டு ரீதியில் 8 சதவிகிதமும் குறைந்துள்ளது.
 
 உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனாவில் தங்கத்தின் விலை சற்று அதிகமாக இருப்பதால், அங்கு விற்பனை குறைந்துள்ளது. என்றாலும், நவம்பரில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்திருப்பதாலும் வருகிற 2016 பிப்ரவரி மாதம் சீனாவின் புத்தாண்டு என்பதாலும் சீனர்கள் தங்கம் வாங்குவது அதிகரிக்கலாம். இதனால் அங்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
இந்தியாவிலும் தங்கத்தின் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் தங்க இறக்குமதி கடந்த அக்டோபரில் மாத ரீதியில் 19 சதவிகிதமும் ஆண்டு ரீதியில் 59 சதவிகிதமும் குறைந்துள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும். ஆனால், இந்தமுறை அப்படி நடக்கவில்லை.  
 
மேலும், இந்தியாவில் தங்கத்தை முதலீட்டு நோக்கில் அதிகமாக வாங்கி வைப்பது விவசாயிகள்தான். அவர்களின் வருமானம் வெகுவாக குறைந்திருக்கும் காரணத்தினால் டிசம்பர் காலாண்டுக்கான தேவை அளவு குறைந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இந்தியா வெறும் 138 டன் அளவுக்கான தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் குறைவான அளவு என்றாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகமே.  
 
வரும் வாரத்தில் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது. 
 
வெள்ளி!
 
கடந்த வாரம் முழுவதுமே வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தது. ஆனால், தங்கத்தை போல அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 14 - 15 டாலர் என்ற அளவிலே வர்த்தகமானது. தங்கத்தின் விலை சரிந்தபோதிலும் வெள்ளியின் விலை அதிக அளவில் சரியாமல் இருந்ததற்குக் காரணம்,  உலக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினால்தான். மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்கிற பேச்சு தற்போது எழுந்திருப்பதால், வெள்ளி விலை அதிக அளவில் குறையாமல் இருக்கிறது. வரும் வாரத்தில் வெள்ளி விலை சிறிது உயர வாய்ப்புள்ளது.

காப்பர்!
 
காப்பரின் விலையானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த வாரம் சரிந்தது. டிமாண்ட் குறைவு மற்றும் விலை சரிவின் காரணமாக காப்பரை உற்பத்தி செய்யும் சில சுரங்கங்கள் முடிப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகிறது. காப்பரின் இந்த விலை சரிவானது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. இந்த விலை சரிவு அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது. அதன்பிறகு விலை ஏற்றம் ஏற்படும்போது காப்பரின் விலை வேகமாக அதிகரிக்கும். எனவே, வரும் வாரத்தில் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை  எனலாம்.

இரா. ரூபாவதி.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ