Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் : நிகரச் சொத்து மதிப்பு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அடிக்கடி புழங்குற வார்த்தை இது! நிகரச் சொத்து மதிப்புங்கிறதோட (நெட் அசெட் வேல்யூ) சுருக்கம்தான் என்.ஏ.வி. நடைமுறையில் இருக்கிற ஒரு மியூச்சுவல் ஃபண்டை நாம வாங்கும்போது, 'என்.ஏ.வி. இத்தனை ரூபாய்'னு கணக்குப் போட்டுத்-தான் விற்பாங்க. அந்த என்.ஏ.வி. மதிப்பு ஏறும்போது நமக்கும் லாபம் ஏறும். இதை எப்படி கணக்குப் பண்றது..?

முதல்ல ஒரு உதாரணம் பார்க்கலாம்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தன்னோட புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ.) மூலமா 100 கோடி ரூபாய் திரட்டுதுனு வச்சுக்குவோம். இந்த 100 கோடி ரூபாயை, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10 கோடி யூனிட்களா பிரிச்சுடுவாங்க. வாங்குறவங்க, ஒரு யூனிட் 10 ரூபாய் வீதம் தேவையானதை வாங்கிக்கிடலாம். இந்த என்.எஃப்.ஓ-வில் முருகன் என்பவர் 5,000 ரூபாய் முதலீடு செஞ்சிருந்தா (நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லாத நிலைமையில), அவருக்கு 500 யூனிட்கள் ஒதுக்குவாங்க. அந்த என்.எஃப்.ஓ. நிலையில அதோட என்.ஏ.வி. 10 ரூபாய்.

முருகன் மாதிரியே பலபேருகிட்டயும் பணத்தைத் திரட்டுற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதை, பங்குகள், கடன் பத்திரங்கள்ல முதலீடு செய்யும். இந்த ரெண்டு வகை முதலீடும் நல்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தோட 100 கோடி ரூபாய் முதலீடு, 150 கோடியா அதிகரிக்குதுன்னு வச்சுக்குவோம். இப்போ, அதோட என்.ஏ.வி. 15 ரூபாயா உயர்ந்திருக்கும். அப்படின்னா முருகன் போட்ட 5,000 ரூபாயும், 7,500 ரூபாயா அதிகரிச்சிருக்கும்.

ஒருவேளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தோட பங்குச் சந்தை முதலீடு நஷ்டத்தைக் கொடுத்து, அதோட 100 கோடி ரூபாய் முதலீடு 75 கோடியா குறையவும் வாய்ப்பு இருக்கில்லையா..? அப்படிப்பட்ட சமயத்துல என்.ஏ.வி. 7.5 ரூபாயா மாறிடும். இப்போ முருகனோட 5,000 ரூபாய் 3,750 ரூபாயா குறைஞ்சிருக்கும்.

இந்த என்.ஏ.வி-யை தினமும் கணக்குப் பண்ணுவாங்க. ஒவ்வொரு நாளும் ராத்திரி 8 மணிக்குள்ள, 'எங்களோட இந்த ஃபண்டின் என்.ஏ.வி. இன்னைக்கு இத்தனை ரூபாய்' அப்படின்னு ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், இந்திய மியூச்சுவல் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபிக்கு தெரிவிக்கணும்ங்கிறது விதி!

இந்த என்.ஏ.வி-யை கணக்குப் பண்ண கீழ இருக்குறதுதான் ஈஸி ஃபார்முலா.

இங்க ஃபண்டின் மொத்த மதிப்புங்கிறது, என்.எஃப்.ஓ. சமயத்துல திரட்டின முதலீடு இப்போ எவ்வளவா கூடியிருக்கோ அல்லது குறைஞ்சிருக்கோ அதைக் குறிக்கும். இந்த ஃபார்முலாவை அப்படியே முருகனோட முதலீட்டுல பொருத்தி, கணக்குச் சரியானு பார்த்துக்கோங்க.

இப்போ மியூச்சுவல் ஃபண்ட்ன்னா என்னவோ ஏதோங்கிற பயம் எல்லாம் போயிருக்கும் இல்லையா? அப்போ ஃபண்டுல கொஞ்சம் பணத்தைப் போட்டுத்தான் பார்க்கலாமேங்கிற முடிவுக்கும் வந்திருப்பீங்க... சரிதானா? அவசரப்-படாதீங்க... பணத்தைப் போடுறதுக்கு முன்னாடி நீங்க செய்யவேண்டிய, தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்-கள்னு சிலது இருக்கு. உங்களை கடன்கள் ஏதாவது நெருக்கிக்கிட்டிருந்தா முதல்ல அதை அடைக்கிற வழியைப் பாருங்க.

அதுவும், அதிக வட்டி கொடுக்கிற பர்சனல் லோன், கிரெடிட் கார்டு இந்த மாதிரியான கடன்கள் ஏதாச்சும் இருந்தா முதல்ல அதை அடைச்சிட்டு மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வர்றதுதான் புத்திசாலித்தனம். குடத்துல தண்ணீ சேர்க்கணும்னா முதல்ல குடத்துல இருக்கிற ஓட்டைகளை அடைச்சிடணும் இல்லையா? சேமிப்பு விஷயமும் அப்படித்தான்! இன்னொரு முக்கியமான விஷயம்... எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி முதலீடு செய்ய முயற்சிக்காதீங்க!
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ