Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எமர்ஜென்சி பணம்: வெள்ளம் கற்றுத் தந்த பாடம்!


கடந்த மாத இறுதியில் சென்னையில் பெய்த பேய் மழையினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் ஏற்பட்ட பாதிப்பு மிக மிக அதிகம். வெள்ளத்தில் சிக்கியவர்களில் பலர் வீட்டில் உள்ள பொருட்கள் எதையுமே எடுக்க முடியாமல் வெளியேறினார்கள். சிலரது வீடு முழுவதுமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.  இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக சேதம் அடைந்தது. 


மாதக் கடைசி என்பதால் பலரும் கையில் காசு இல்லாமல்  தவித்தார்கள். டிசம்பர் மாதத்துக்கான சம்பளம் வந்ததும், சம்பளத் தொகை முழுவதையும் எடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். ஒருவேளை இந்தச் சம்பவம் நவம்பர் மாதத்தின் மத்தியில்  ஏற்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.


தற்போது வெள்ள நீர் வடிந்து விட்டாலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த  வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையுமே மீண்டும் புதிதாக வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்குக் குறைந்தபட்சம் 1-2 லட்சம் ரூபாய் தேவைப்படும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே இப்போது 50,000 ரூபாயாவது உடனே தேவைப்படும். இந்தப் பணத்தை கடனாக வாங்கித்தான் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தனிநபர்களிடம் கடன் கேட்க முடியாது. ஏனெனில் எல்லோருமே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது யாரிடம் சென்று கடன் கேட்பது?


இதுபோன்ற  அவசரகால செலவுகளை யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் நாமே செய்துவதற்கு வழி செய்து தருவதுதான் எமர்ஜென்ஸி ஃபண்ட். அதாவது, அவசர கால நிதி. இந்த அவசர கால நிதியை ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த எமர்ஜென்ஸி பணத்தை எவ்வளவு வைத்திருக்க வேண்டும், எதில் வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 


ஏன் எமர்ஜென்சி ஃபண்ட்?


வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மற்றும் அத்தியாவசிய செலவுகள் செய்ய, திடீர் மருத்துவ செலவுகளை சமாளிக்க என அதிரடியாக வரும் செலவுகள் பல வகைப்பட்டதாக இருக்கலாம். இப்படி எதிர்பாராமல் தடாலடியாக வரும் எல்லாச் செலவுகளையும் சமாளிக்கத் தேவை எமர்ஜென்சி ஃபண்ட் அவசியம் தேவை.  இந்த ஃபண்ட் எவ்வளவு தேவை என்பது ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும்.


எவ்வளவு தொகை?


உங்களின் மாத செலவு எவ்வளவு என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அந்தத் தொகையை போல குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மடங்கு தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரது மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாய் எனில், குறைந்தபட்சம் 75,000 ரூபாய் முதல் 1,50,000 வரை எமர்ஜென்சி பணமாக வைத்துக் கொள்ளலாம்.


இதில் மாதந்திர செலவுகள், சேமிப்பு தொகை, இஎம்ஐ செலுத்த வேண்டியிருந்தால், அந்தத் தொகை என அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டு அதற்கு ஈடான தொகையை சேமித்து வைப்பது முக்கியம்.
எந்த வகையில் வைத்திருக்கலாம்?


எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்கும்போது அந்தப் பணத்தை எளிதில் எடுக்கக்கூடிய வகையில் வைத்திருப்பது முக்கியம். அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருப்பது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக, இந்தப் பணத்தை கொண்டு டிவியோ, இரு சக்கர வாகனமோ வாங்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களினால், சில ஆயிரம் ரூபாயை இதிலிருந்து எடுத்துப் பயன்படுத்தினாலும், மீண்டும் அதே அளவு பணத்தை அதில் வைத்துவிடுவது அவசியம்.


எப்படி சேமிப்பது!


மாத வருமானத்தில் 10 சதவிகிதத்தை எமர்ஜென்சி பணமாக ஆர்.டி.யில் சேர்த்து வரவேண்டும். நாம் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தவுடன் அந்த பணத்தை எடுத்து வங்கி எப்ஃ.டியிலோ  அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் எனில், அதில் 4,000 ரூபாயை எடுத்து, ஆர்.டி.யில் சேர்க்கலாம். இப்படி தொடர்ந்து 25 மாதங்கள் சேர்க்கும்பட்சத்தில் 1,00,000 ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை ஒருவர் எமர்ஜென்ஸி பணமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


 ஆக, எமர்ஜென்சி ஃபண்ட் வைத்திருந்தால் எந்த விதமான மழைக்கும், வெயிலுக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை என்பது மட்டும் நிச்சயம்! 


இரா.ரூபாவதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP