Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் :சொத்து மதிப்பு ரூ.7.87 லட்சம் கோடி

மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்கள் : நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.7.87 லட்சம் கோடி

இந்தியாவிலுள்ள 43 மியூச்சுவல் ஃபண்ட்  நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு  2012 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 5.3 % அதிகரித்து கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.7.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு தொடர்ந்து  3 காலாண்டுகளாக  அதிகரித்துள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டில் 1%  மட்டுமே அதிகரித்து இருந்த இந்த சொத்து மதிப்பு 2012 ம் ஆண்டில் 15% (ரூ.1.05 லட்சம் கோடி) அதிகரித்தது. ஆக மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடன் பத்திரங்களில் நீண்டகால முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்கள் அதிக அளவில் முதலீடுகளை கவர்ந்துள்ளன.

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த‌ டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 48% அதிகரித்து ரூ.4,800 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் பத்திரங்களில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 62% அதிகரித்து ரூ.63,200 கோடியாக அதிகரித்துள்ளது.

2012, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 4% அதிகரித்து ரூ.2.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

2012, டிசம்பர் காலாண்டில் மொத்தமுள்ள 43 மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களில் 35 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அந்தக் காலாண்டில் சொத்து மதிப்பில் அதிக வளர்ச்சி கண்ட‌தில் எல்  அண்ட்  டி மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம் முதலிடத்தில் இருக்கிற‌து.

நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப்படையில் ஹெ.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதன் சொத்து மதிப்பு 3.7% அதிகரித்து ரூ.1.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் . நிறுவனத்தின் சொத்து மதிப்பு 5 % அதிகரித்து ரூ.90,600 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.81,400 கோடியாக உயர்ந்துள்ளது.

4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள பிர்லா சன் லைஃப் மற்றும் யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களின் சொத்து மதிப்பு முறையே ரூ.76,900 கோடி மற்றும் ரூ.70,600 கோடியாக உள்ளது. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் முன்னணி 5 நிறுவனங்களின் பங்கு மட்டும் 54%  உள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ