Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க பாதுகாப்பா இருக்கீங்களா? இல்லையா? இல்லைன்னா முதல்ல இத படிங்க!

 

நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என ஒரு சுயபரிசோதனைதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும்  அதிக ரிஸ்க்குடன் நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. 



 

வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு என்பது உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் இருக்க வேண்டும். இதற்காக அதிகமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்தாலே போதும். அதற்கு என்னென்ன பாலிசிகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
உடல் நலக் குறைவு ஏற்படும் போது, விபத்தில் சிக்கும் போது, குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் மரணம் அடையும் போது, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது  பொருளாதார ரீதியாக நமக்குக் கைக்கொடுப்பது இன்ஷூரன்ஸ்தான்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றின் விளைவாக 40 வயதில் வர வேண்டிய வியாதிகள் எல்லாம் 30 வயதிலே வந்து விடுகிறது. அதாவது சர்க்கரை வியாதி, இருதய நோய், ரத்த கொதிப்பு போன்றவை. இவற்றின் விளைவாக ஏற்படும் நோய்கள், விபத்தில் சிக்கும் போது போன்ற சமயங்களில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக நம்மை காத்துக் கொள்வதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவியாக இருக்கும். இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தால் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ள முடியும்.


ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை குறைந்தபட்சம் 2-5 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் வைத்திருப்பது அவசியம்.  சிலர் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளது எனத் தனிநபர் பாலிசி எடுக்காமலே விட்டு விடுகிறார்கள். இந்த குரூப் ஹெல்த் பாலிசியில் குறிப்பிட்ட அளவு தொகைக்குத்தான் கவரேஜ் இருக்கும். எனவே அந்த கவரேஜ் தொகையை விட அதிகமாக க்ளெய்ம் வரும் சமயங்களில் கைக்கொடுப்பதற்காக டாப் அப் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதனுடைய பிரீமியம் குறைவாக இருக்கும்.

லைஃப் இன்ஷூரன்ஸ்!

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய பாலிசி டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகும்.

எதிர்பாராத விதமாக மரணம் அடையும் போது, அவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்நோக்கி செல்வதற்கான வாய்ப்புள்ளது. அதாவது குழந்தைகளின் படிப்பு, வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது போன்றவை இருக்கும். இவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இயல்பாக வாழ்வதற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கும்.

வாகன இன்ஷூரன்ஸ்!

இன்றைக்கும் நகரம், கிராமம் என்ற எந்தவித்தியாசமும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாகனம் இருக்கிறது.

இந்தியாவில் வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்பது சட்டம். ஏதாவது விபத்தில் சிக்கி வாகனம் பாதிப்படைந்தால் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளெய்ம் செய்து கொள்ள முடியும். அதேபோல வாகனத்தில் பழுது ஏற்பட்டு அதிக அளவு செலவு வைக்கும் போதும் இந்த பாலிசி உதவியாக இருக்கும்.

ஹவுஸ் ஹோல்டர் பாலிசி!

சமீபத்தில் சென்னை வெள்ளத்தின் பாதிப்பில் சிக்கி பலரும் அவதிப்பட்டதைக் கண்கூடாக பார்த்தோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஹவுஸ் ஹோல்டர் பாலிசிதான்.

இயற்கை சீற்றம் மட்டும் இல்லாமல் வீட்டில் திருடு போவது, தீ விபத்து போன்ற சமயங்களில் இந்த பாலிசியில் க்ளெய்ம் செய்து கொள்ளலாம். இதில் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.  மேற்கூறிய அனைத்து பாலிசிகளும் வாழ்க்கைக்கு அவசியமான பாலிசிகள் ஆகும். இந்த பாலிசிகள் அனைத்தையும் வைத்திருப்பவர்கள். வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


இரா.ரூபாவதி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ