Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரேடிங் ரிப்போர்ட் - அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் மஞ்சள் விலைப்போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார். 
 
மஞ்சள் (Turmeric)
 
 
மஞ்சளைப் பொறுத்தவரை, எப்போதுமே ஸ்ட்ராங்கான கமாடிட்டியாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக குவிண்டால் மஞ்சள் ரூ.9,500-லிருந்து ரூ.8,000 வரை விலை குறைந்து வர்த்தகமானது. தற்போது மீண்டும் முக்கியச் சந்தைகளில் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமாக தொடங்கியுள்ளது. 
 
இந்த விலை உயர்வுக்கு வட மாநிலங்களில் மஞ்சளுக்கான ஆர்டர்கள் அதிகரித்திருப்பதும், பெருமளவு மஞ்சள் வரத்து தரம் குறைந்ததாக இருப்பதால் தரமான மஞ்சளுக்கான தேவை அதிகரித்துள்ளதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், மஞ்சள் ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மஞ்சள் ஏற்றுமதி கடந்த வருடத்தில் அதே காலகட்டத்தில் ஏற்றுமதியானதை விட 8% உயர்ந்து 24,500 டன்னாக உள்ளது. 
 
ஈரோடு, சேலம் போன்ற மஞ்சள் விளைச்சல் பகுதிகளில் மழைப் பெய்துள்ளதால், உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயரும் என்ற நோக்கில் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் தற்போது சந்தைகளுக்குக் வரத் தொடங்கியுள்ளது. ஆனால், அவற்றின் தரம் குறைந்து உள்ளது.
 
மேலும், ஜனவரியில் பொங்கல் பண்டிகை வருவதால், மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உற்பத்தி குறையும் என்பதாலும், சந்தையில் உள்ள மஞ்சள் இருப்பின் தரம் குறைந்து காணப்படுவதாலும், வரும் வாரங்களில் மஞ்சள் விலை உயர்ந்தே வர்த்தகமாகும். மஞ்சளின் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்படி, சப்போர்ட் ரூ.10,430 முதல் ரூ.10,250 வரை இருக்கலாம். ரெசிஸ்டன்ஸ் ரூ.10,780 முதல் 11,100 வரை இருக்க வாய்ப்புள்ளது.
 
சென்னா (Chana)
 
 
சென்னாவின் விலை கடந்த வாரத்தில் ஒரு வரம்புக்குள் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. இதற்கு முக்கியச் சந்தைகளில் அவற்றுக்கான தேவையில் முன்னேற்றம் இல்லாததே காரணம். தீபாவளி சமயத்தில் தேவை காரணமாக விலை உயர்ந்து வர்த்தகமானது. ஆனால், அதற்குப்பின் சென்னாவின் விலை சரிவைச் சந்தித்தது. 
 
தற்போது பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதால், விலையின் ஏற்ற இறக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநில அரசுகள் வெளியிட்ட அறிக்கையின்படி, பதுக்கப்பட்ட 93,507.83 மில்லியன் டன் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 50 ஆயிரம் டன் நேரடியாக விவசாயிகளிடமிருந்தும், ஒரு லட்சம் டன் இந்திய உணவுப் பொருட்கள் அமைப்பிடமிருந்தும் வாங்கி இருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கிடங்குகளுக்கும், தரகர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்குமான இருப்பு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. என்சிடிஇஎக்ஸ் சந்தை நிலவரப்படி, ஜனவரி ஃப்யூச்சர்ஸ் குவிண்டால் ரூ.4,798-க்கு வர்த்தகமாகிறது. 
 
மேலும், பருப்பு வகைகளின் விளைச்சல் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் குறைந்துள்ளது. கடந்த வருடம் 97.80 லட்சம் ஹெக்டேராக இருந்த பருப்பு வகைகளின் விளைச்சல் ஏரியா இந்த வருடம் 90.91 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 
அரசு நடவடிக்கைகளால் சென்னாவின் விலை கட்டுக்குள் இருக்கும்போதிலும் சென்னாவின் உற்பத்தி குறைந்து வருகிறது என்பதாலும், வரும் வாரங்களில் பண்டிகைக் காரணமாக தேவை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பினாலும் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்பு இல்லை. 
 
ஏலக்காய் (Cardamom)
 
 
கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. அதே நேரத்தில் ஏலக்காய்க்கான தேவையும் பெரியளவில் அதிகரிக்காததும் விலை குறைவிற்கு காரணமாக அமைந்தது. 
வேளாண் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2014-15) ஏலக்காய் விளைச்சல் 22,000 டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21,000 டன்னாக இருந்தது. இந்த கணிப்பினால் ஏலக்காய் வரத்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
 
மேலும், ஏலக்காய்க்கான உள்நாட்டு ஆர்டர்களும், ஏற்றுமதி ஆர்டர்களும் குறைவாகவே இருப்பதால், கிடங்குகளில் ஏலக்காய் இருப்பு தேக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் மேலும் வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், வர்த்தகர்களால் ஏலக்காய்களை சரியாக உலர்த்தி பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலக்காய்களின் தரமும் குறைந்து கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில் சந்தையில் ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து குறைந்து காணப்படுவதாலும், ஏற்றுமதி ஆர்டர்களும் குறிப்பிடும் அளவில் முன்னேற்றம் அடையாததாலும் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

- ஜெ.சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ